Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை : மார்ச் வரை காலக்கெடு... இல்லையேல் அனைத்துலக விசாரணை

Thursday, September 260 comments


அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான சுதந்திரமான - நியாயமான விசாரணைகளை நடத்தத் தவறினால், விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் கடமை அனைத்துலக சமூகத்துக்கு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இன்று பிற்பகல், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை, பிரதி ஆணையாளர் பிளேவியா பன்சியெரி வாசித்தார்.

இந்த அறிக்கையிலேயே, மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் பதிலளிப்பதற்கு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அவர் காலக்கெடு விதித்துள்ளார்.

“ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கவலை கொண்டுள்ள, குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சுதந்திரமான நம்பகமான விசாரணைகளை மேற்கொள்ள, புதிய அல்லது விரிவான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக கண்டறிய முடியவில்லை.

தனிப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது உள்ளிட்ட, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, நம்பகமான தேசிய செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது தொடக்கம், மார்ச் 2014 வரையான காலப்பகுதியை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால், தமது சொந்த விசாரணையை மேற்கொள்ளும் கடமை அனைத்துலக சமூகத்துக்கு உள்ளதாக நம்புகிறேன்.

இடம்பெயர்ந்த பெரும்பாலானோர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள போதிலும், 2008-09 காலப்பகுதிக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியமர்த்தப்படாதுள்ளனர்.

மீளக்குடியேறிய பலரும் வாழ்வாதாரப் பிரச்சினைகனை சந்திக்கின்றனர்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக மேலதிக ஆலோசனைகளை நடத்த இடம்பெயர்ந்தோருக்கான மனிதஉரிமைகள் சிறப்பு அறிக்கையாளரை அழைக்கும்படி சிறிலங்கா அரசைக் கோரியுள்ளோம்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது, இது அதிகாரப்பகிர்வின் முக்கியமான கட்டமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளான போதிலும், வடக்கில் தொடர்ந்தும் கணிசமான இராணுவத் தலையீடுகள் காணப்படுகின்றன.

மீளக்குடியமர்ந்தோர், புனர்வாழ்வு பெற்றவர்கள், தடுப்புக்காவலில் இருந்J விடுதலையானவர்கள் உயர்ந்தளவில் கண்காணிக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள், குறிப்பாக பெண்களை தலைவர்களாக கொண்ட குடும்பங்கள், இராணுவத்தினர் உள்ளிட்டோரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது கவலையளிக்கிறது.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக, கடுமையான சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஆகிய இடங்களில் தனியார் நிலங்கள் பலவந்தமாக சுவீகரிக்கப்படுவது தொடர்பான ஆவணங்கள் கிடைத்தன.

சிவில் நிர்வாகத்தின் ஏனைய பகுதிகளிலும், பொருளாதார செயற்பாடுகளிலும் இராணுவம் முக்கிய பங்கு வகிக்கிறது.

படைக்குறைப்பு, ஆயுதக்குறைப்பு, சிவில் செயற்பாடுகளில் இருந்து விலகுவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தெளிவானதொரு காலஎல்லையை வகுக்க வேண்டும்.

காவல்துறைத் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சில் இருந்து வேறாகப் பிரிக்கப்பட்ட போதிலும், புதிய அமைச்சும், பாதுகாப்பு அமைச்சைப் போலவே, சிறிலங்கா அதிபரின் நேரடி வழிகாட்டலில் முன்னாள் ஜெனரல் ஒருவரின் கீழேயே இயங்குகிறது.

காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்க, ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

ஆனால், இந்த ஆணைக்குழு 1990 தொடக்கம் 2009 வரை வடக்கு,கிழக்கில் காணாமற்போனவர்கள் குறித்து விசாரிக்கவே பணிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலும், ஏனைய பகுதிகளிலும், அண்மைக்காலத்தில் நிகழ்ந்த வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த விசாரணைகள் இதற்குள் உள்ளடக்கப்படவில்லை.

எனவே, சிறிலங்கா அரசாங்கம் ஆணைக்குழுவுக்கான பொறுப்பை பரவலாக்க வேண்டும்.

தடுப்பிலுள்ள விடுதலைப் புலிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால், நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் அல்லது, விடுதலை செய்யப்பட வேண்டும், இல்லையேல் புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டும்.

அண்மைக்காலமாக மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக தேவாலயங்களும், மசூதிகளும் தாக்கப்பட்டுள்ளன.

ஆனால், குற்றவாளிகளுக்கு எதிரான உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மனிதஉரிமை ஆர்வலர்கள், சட்டவாளர்கள், ஊடவியலாளர்கள், தொடர்ந்தும் துன்புறுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

முல்லைத்தீவில் நான் பயணம் செய்த கிராமங்களுக்குச் சென்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், விசாரணை நடத்தியது துரதிஷ்டமான கவலை தரும் விடயம்.

நிறைவேற்று அதிகாரத்தை சமப்படுத்தக் கூடிய சுதந்திர காவல்துறை ஆணைக்குழு, சுதந்திர தேர்தல் ஆணைக்குழு, மனிதஉரிமை ஆணைக்குழு என்பனவற்றின் அதிகாரங்கள் 18வது திருத்தச்சட்டத்தின் மூலம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை தொடர்ந்தும் முக்கியமான கவனம் செலுத்துவதுடன், வரும் மார்ச் மாதம் அதற்கான பரிந்துரைகளையும் முன்வைக்கும் என்றும் நம்புகிறேன்.

சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களின் உதவியையும் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகளை சிறிலங்காவுக்கு வழங்க ஐ.நா மனிதஉரிமை ஆணையம் தயாராகவே உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by