Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

வெற்றிலைக்கு அளிக்கும் வாக்குகள் கோவில்களையும், தேவாலயங்களையும், பள்ளிகளையும் உடைக்கும்

Friday, September 130 comments

வெற்றிலை சின்னத்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், கோவில்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும், பள்ளிவாசல்களையும் உடைத்து நொறுக்கும் மதவாதத்துக்கு அளிக்கும் வாக்குகள் என்பதை மலையகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழ் பேசும் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத சிறுபான்மை வாக்காளர்களும் மனதில்  கொள்ள வேண்டும்.

வெற்றிலை என்பது நம்மை பொறுத்தவரையில் வாயில் மென்று துப்பும் வெற்று இலைதான். அதற்கு மேல் அது நமக்கு பயன்தராது. பயன் தராதது மட்டும் அல்ல, அது நம்மை அழித்து ஒழிப்பதாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

யானை சின்னத்தில் போட்டியிடும் முன்னணியின் வேட்பாளர்கள் ராஜ்குமார், சந்திரகுமார் ஆகியோரை  ஆதரித்து பொகவந்தலாவையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

வெற்றிலை சின்னத்துக்கு அளிக்கப்படும்  வாக்குகள் நேரடியாக இந்த இனவாத, மதவாத ஆட்சிக்கே போய்  சேருகின்றன. இந்த வாக்குகளை வாங்கி மகிந்த ஆட்சிக்கு வழங்குவதற்கு மட்டுமே அரசின் பங்காளிகளான மலையக கட்சிகளுக்கு முடியும்.   அதைவிட அவர்களுக்கு அங்கு அதிகாரம் கிடையாது.

நமது கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள்   உடைக்கப்படும் போது எதுவும் நடைபெறாதது போல் கைகட்டி வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கவே அவர்களால் முடியும்.  அப்பாவி மக்கள் மத்தியில் வந்து இவர்கள்  புலிகள் போல் நாட்டாண்மை காட்டினாலும், ராஜாவின் அரண்மனைக்குள்ளே இவர்கள் வெறும் எலிகள்தான்.

அரசாங்கத்துக்குள்ளே அவர்களது நிலைமைகள் பரிதாபம். அதைவிட தோட்ட தொழிலாளியின் நிலைமை பரிதாபம். தொழிலாளிக்கு உரிய வருமானம் கிடைக்காததால், மலையகத்தில், சிறிய முதல் பெரிய வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் என்று அனைவரது வருமானங்களும் குறைந்து போய் உள்ளன.  

கடந்த இரு வாரகாலமாக கொஞ்சம் வெயில் அடித்ததால் தோட்டங்களில் வேலை கிடைத்து கொஞ்சம் வருமானம் கிடைத்தது.  இன்று இப்போது மீண்டும் மழை பொழிகிறது. கடந்த நான்கு மாதங்களாக வேலை நாட்கள் குறைந்துபோய் தொழிலாளியின் வருமானம் குறைந்து போய்  விட்டது.

மழை, வெள்ளம், மண்சரிவு, புயல், வறட்சி என்ற இயற்கையின் இத்தகைய கொடுமைகளால் நாட்டு மக்கள் பாதிப்பு அடையும் போது, அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்கி உதவிட வேண்டும். அதற்குதான் அரசாங்கம் இருக்கிறது. தேங்காய் திருவவோ, சட்னி அரைக்கவோ அரசாங்கம் என்ற ஒன்று தேவையில்லை.

களுத்தறை, காலி மாவட்டங்களில் புயல் வந்து  சிங்கள மீனவர்கள் பெரும் பாதிப்பு அடைந்த போது அரசாங்கம் ஓடோடி சென்று அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கியது. அனுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களில் வறட்சியினால் சிங்கள விவசாயிகள்  துன்புற்ற வேளையிலும், அரசாங்கம் ஓடோடி சென்று நிவாரணம் வழங்கியது.

நாம் எதிர்க்கட்சி. ஆனாலும் துன்புற்ற மக்களுக்கு நிவாரணம் வழங்கிய அரசை  நாம் பாராட்டுகின்றோம். அதேவேளையில் இத்தகைய இயற்கையின் சீற்றத்தால் துன்புற்ற தோட்ட  தொழிலாளிக்கு இந்த அரசு ஏன் அதே மாதிரியான நிவாரணங்களை வழங்க வில்லை என கேள்வி எழுப்புகின்றேன்.

காலி, களுத்தறை, பொலநறுவை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களை அரசாங்கத்துக்கு உள்ளே பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் ஜனாதிபதியை தமது மாவட்டங்களுக்கு அழைத்து சென்று தமது மக்களின் துன்பங்களை காட்டி நிவாரணம் பெற்று கொடுத்தார்கள். ஆனால் மலையகத்தை அரசாங்கத்துக்குள்ளே பிரதிநிதித்துவம் செய்கின்றவர்கள் இதை செய்யவில்லை.      

சிங்கள மீனவருக்கும், சிங்கள விவசாயிக்கும், அரசிடமிருந்து கிடைத்த கவனிப்புகள் ஏன்   தோட்ட தொழிலாளிக்கு  கிடைக்கவில்லை? நாங்கள் என்ன வேற்று நாட்டு பிரஜைகளா?  நிவாரணம் கிடைப்பது ஒருபுறம்  இருக்க, நமக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லை. தேர்தல் காலங்களில் ஜனாதிபதியை நுவரெலியாவிற்கு கூட்டி வருபவர்கள் ஏன்  மக்களின் துன்பங்களை காட்ட கஷ்ட காலங்களில் அவரை அழைத்து வருவதில்லை?

இந்நிலையில் நாம் தொடர்ந்து வெற்றிலை சின்னத்துக்கே வாக்குகளை அளித்தால், அரசாங்கம் மலையகத்தில் தோட்ட தொழிலாளிக்கு  எந்தவித பிரச்சினைகளும் இல்லை என்றும், மலையகத்தில் பாலும், தேனும் ஓடுகிறது என்றும், அதனால்தான் மலையக மக்கள் எங்களுக்கு வாக்களிக்கின்றர்கள் என்றும்  பிரச்சாரம் செய்யும்.

அதுமட்டும் அல்ல, கோவில்களையும், தேவாலயங்களையும் உடைத்தாலும், அதுபற்றி தோட்டங்கள் தோறும் கோவில் கட்டி வாழும்  மலையக தமிழனுக்கு கவலையும், அக்கறையும் இல்லை என்றும் பிரச்சாரம் செய்யும்.

எனவே அரசுக்கு, நாம் குட்ட குட்ட குனிந்துகொண்டே இருக்க மாட்டோம் என்ற  ஒரு கண்டன செய்தியை அனுப்ப  யானை சின்னத்துக்கு வாக்களியுங்கள். எங்கள் கட்சியின் வேட்பாளர்களான ராஜ்குமாரையும், சந்திரகுமாரையும் வெற்றி பெற செய்து என் கரங்களை பலப்படுத்துங்கள்.  
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by