
பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் பாதுகாப்புச் செயலாளர் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது முஸ்லிம்கள் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே முஸ்லிம் பயங்கரவாதிகளை பாதுகாப்பு செயலாளர் இனங் காட்ட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்று அக்குறணை புளுகொஹதென்னயில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்திரித்துப் பேசியதை முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. நீண்ட கால யுத்தம் முடிவுற்று சமாதானச் சூழல் மலர்ந்துள்ள நிலையில் பாதுகாப்புச் செயலாளர் பல நல்ல விடயங்களைப் பேசும் அதேநேரத்தில் சில சர்ச்சைக்குரிய, முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தக்கூடிய வகையில் கருத்துக்களை வெளியிடுவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதியின் சகோதரர் என்றாலும் அவர் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்து கொண்டு இவ்வாறான கருத்துகளை வெளியிட முடியாது. முஸ்லிம் பயங்கரவாதிகள் எங்கிருக்கிறார்கள்? அவர்கள் யார்? என்று பாதுகாப்பு செயலாளர் இனம் காட்ட வேண்டும். பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ள குற்றச் சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கின்றேன்.
எல்லாச் சமயங்களிலும் மதப் பிரிவுகள் இருக்கின்றன. முஸ்லிம்களிடம் மாத்திரம் மதப் பிரிவுகள் காணப்படவில்லை. பிரிவுகளுக்கிடையிலான முரண்பாடுகளைக் காரணம் காட்டி அவர்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க முடியாது. இன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையினரால் காமாலைக் கண் கொண்டே நோக்கப்படுகிறார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment