கிழக்கு மாகாண சபை அமர்வு எதிர்வரும் 30ம் திகதி திங்கட் கிழமை நடைபெறவுள்ளது. இந்த அமர்வு பல சர்ச்சைக்குரிய அமர்வாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் சில தீர்மானங்களை மேற்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரை முற்று முழுதாக புறக்கணித்து வரும் நிலையில் இந்த அமர்வு நடைபெறுவதால் சபையில் பல கேள்விக் கணைகளை தொடுப்பதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஏ.எல்.தவம் மற்றும் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவி்க்கின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தயவினால் முதலமைச்சரான மஜீத் இன்று அந்தக் கட்சி மாகாண சபை உறுப்பினர்களின் வேண்டுகோளை புறக்கணித்து தேசிய காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் உதுமாலெப்பையின் கருத்துக்களை செயற்படுத்துகின்ற ஒருவராக மாறியுள்ளார்.
அமைச்சர் உதுமாலெப்பையின் கோரிக்கையின் பேரில் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வந்த அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டது தொடக்கம் இன்னும் பலதையும் குறிப்பிடலாம். கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றத்தில் அம்பாரை மாவட்ட இடமாற்றம் மாத்திரம் ரத்துச் செய்யப்பட்ட விடயம், அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையின் குறைபாடுகள் என பல விடயங்கள் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப உள்ளனர்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பொடுபோக்குத்தனத்தை நிச்சயம் நாளைய சபை அமர்வில் வெளிப்படுத்துவோம் என மாகாண சபை உறுப்பினர் ஒருவர் களம் பெஸ்டிடம் தெரிவித்தார்.
இதேவேளை, மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்களால் எதுவுமே செய்ய முடியாது நாங்கள் சொல்வதுதான் நடக்கும் என மாகாண அமைச்சர் உதுமாலெப்பை கூறியுள்ளதாகவும் கதைகள் கசிந்துள்ளது.
மாகாண சபையில் உறுப்பினர்கள் தவமும், நஸீரும் குரல் எழுப்புவதால் குறிப்பிட்ட விடயங்கள் சரி செய்யப்படுமா? அல்லது தோல்வியில் முடியுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
அட்டாளைச்சேனையில் நடக்கின்ற நிகழ்வுகளிற்கு அமைச்சர் ஹக்கீமையும், அமைச்சர் அதாஉல்லாவையும் அழைக்க வேண்டும் என முதலமைச்சர் தரப்பு உத்தரவிட்டுள்ளதாகவும் ஒரு கதையொன்று இன்று அட்டாளைச்சேனையில் உலாவுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான அட்டாளைச்சேனையில் பரம எதிரியான அதாஉல்லாவை நிகழ்விற்கு அழைப்பதா? என்ன பேத்தனமான வேலை. முதலமைச்சர் தரப்பிற்கு என்ன பிடித்துவிட்டது. விடவே கூடாது என முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நம்மிடம் கவலை படத் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் இந்த விடயத்தில் என்ன முடிவை எடுக்கப்போகின்றார் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். எதையும் நேர்மையாகச் செய்யவேண்டும் என சிந்திக்கும் தவிசாளர் அன்ஸில் சில விடயங்களில் காட்டும் நிதானத்தை இதிலும் காட்டுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Post a Comment