கண்டி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரங்களுக்காக அரச வளங்கள் அதிக அளவில்
துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகின்றன. நாட்டில் பதவியில் இருந்த எந்த ஒரு
அரசாங்கமும் இதுவரையில் செய்திராத அளவுக்கு அரச வளங்கள் துஷ்பிரயோகப்
படுத்தப்படுகின்றன.இன்று இந்த நாட்டில் ஹெலிகொப்டர்கள் அதிகம் உலா வரும்
மாவட்டமாக கண்டி மாவட்டம் காணப்படுகின்றது என்று கூறினார் கண்டி
மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளரும் தேசிய
ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் சாலி.
அஸாத் சாலி கடந்த பல தினங்களாக கண்டி மாவட்டத்தின் முக்கிய பல
நகரங்களிலும், கிராமங்களிலும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார். அஸாத்
சாலி பங்கேற்கும் பொதுக் கூட்டங்களிலும் ஏனைய சிறு மட்டத்திலான
கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பரிமாறல் நிகழ்வுகளிலும் மக்கள் கூட்டம்
அலைமோதுவதை அவதானிக்க முடிகின்றது. சில இடங்களில் கண்டி மாவட்டத்தைச்
சேர்ந்த முக்கிய அமைச்சரவை அமைச்சர்களினது அச்சுறுத்தல்களையும் மீறி அஸாத்
சாலி துணிச்சலாக கூட்டங்களை நடத்தி வருகின்றார். அந்தக் கூட்டங்களிலும்
பெருந்திரளான மக்கள் துணிச்சலோடு பங்கேற்று வருகின்றனர்.
இந்தக் கூட்டங்களில் உரையாற்றிய அஸாத் சாலி மேலும் கூறியதாவது: இரண்டாவது
முறை ஆட்சியில் இருக்கின்ற மகிந்த ராஜாக்ஷ அரசாங்கம் இந்த கண்டி
மாவட்டத்தில் ஏன் தனி ஒரு மனிதனைக் கண்டு இவ்வளவு அச்சம் கொள்ள வேண்டும்
என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஜனாதிபதி மட்டுமன்றி அவரின் அமைச்சரவை உறுப்பினர்கள் சிலர் கூட இன்று
கண்டியில் குடும்பத்தோடு அரசாங்கத்தின் பிரசாரங்களில் ஈடபட்டுள்ளனர்.
இவர்கள் வந்து போவதற்காகத்தான் இன்று கண்டி மாவட்டம் அதிகளவில்
ஹெலிகொப்டர்கள் சுற்றித்திரியும் மாவட்டமாக மாறியுள்ளது. ஆனால் பாவம்
ஹெலிகொப்டர்களில் வந்திறங்கி பத்து அல்லது பதினைந்து இலட்சம் ரூபாய்
செலவிட்டு மேடைகள் அமைத்து கூட்டம் நடத்துகின்றனர். இந்தக் கூட்டங்கள்
மேடையில் பத்துப் பேரும் கூட்டத்தில் பதினைந்து பேருமாகவே முடிவடைகின்றன.
இதுமட்டுமல்ல ஒரே மேடையில் அமைச்சர்களின் குடும்பத்தவர்கள் ஆளுக்கு ஆள்
மோதிக் கொள்ளும் கேவலமான காட்சிகளும் அரசாங்கத்தின் கண்டி மாவட்ட தேர்தல்
பிரசாரக் கூட்டங்களில்தான் அரங்கேற்றப்படுகின்றன.
நானும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர்
விக்ணேஷ்வரனும் இனவாதிகள் என்று அரசாங்கத்தின் அமைச்சர்கள், மேடைகளில்
பகிரங்கமாக கூச்சலிட்டு வருகின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் மக்கள் செல்வாக்கற்ற இதுவரையில் எந்தத்
தேர்தலிலும் போட்டியிடாமல் ரணிலின் கோட்டிலும், ஜனாதிபதியின்; சால்வையிலும்
தொங்கிக் கொண்டு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்று சமூகத்தைக்
காட்டிக் கொடுத்து தனது இருப்பை தக்கவைத்து, வயிற்றுப் பிழைப்புக்கு வேறு
வழியின்றி அரசியல் நடத்தும் குள்ளநரியொன்றும் கண்டிக்கு வந்து என்னை
கொழும்பில் இருந்து வந்துள்ள எலி எனக் கூறுகின்றதாம். நான் எலிதான்.
அரசாங்கம் என்ற ஆலமரத்தின் வேரை அரித்து அதை ஆட்டம் காணச் செய்யப்போகும்
எலியாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். சமூகத்தைக் காட்டிக்
கொடுத்து தன்னைபற்றி மட்டுமே சிந்தித்து தமது நலனுக்காக மட்டுமே குரல்
கொடுக்கும் குல்ல நரிகள் கூட்டத்தில் இருப்பதைவிட நான் ஒரு எலியாக இருந்து
விட்டுப் போகிறேன.; குள்ளநரிகளை இலகுவாக வேட்டையாடி விடலாம். ஆனால் எலியை
பொறி வைத்து பிடிப்பது கூட கஷ்டம். இதை சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்து கொள்ள
வேண்டும்.
இன்று நாட்டில் இனவாதம் பேசுகின்றவர்கள் நாங்கள் அல்ல. இந்த அரசின்
தலைவர்களும் அமைச்சர்களும் முக்கிய பதவியில் இருப்பவர்களும் தான் உண்மையான
இனவாதிகள்.சிறுபான்மை இனங்களின் சமய கலாசார விழுமியங்களை மதிக்காமல் அவற்றை
துச்சமென மதித்து துவம்சம் செய்கின்றவர்களும் அவர்களுக்கு
ஆதரவளிப்பவர்களும் தான் உண்மையான இனவாதிகள். இன்று நானும் விக்னேஷ்வரனும்
இதையா செய்கின்றோம்?.
யார் இதைச் செய்கின்றார்கள் என்பதை இந்த நாடே அறியும்.
உண்மையான இனவாதிகளுக்கும் குள்ளநரிகளுக்கும் மக்கள் பாடம் புகட்டும் காலம்
நெருங்கிவிட்டது. எதிர்வரும் 21ம் திகதி அந்த நல்ல காரியத்தை செய்து
முடிக்க மக்கள் தயாராக உள்ளனர் என்று அஸாத் சாலி கூறினார்.
ஊடகப் பிரிவு
தேசிய ஐக்கிய முன்னணி

Post a Comment