
அமெரிக்கா, இந்தியா, சீனாவில் கூட எந்த
மூலை முடுக்கில் என்ன நடந்தாலும் அது அந்நாட்டின் ஆட்சிபீடத்துக்கு
உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது. அதற்கேற்ப ஆளும் வர்க்கமும்
செயற்படுகிறது. ஆனால் இலங்கையில் அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக
இடம்பெற்று வந்த எந்தவொரு விடயமும் ஜனாதிபதிக்கு தெரியவே தெரியாது என்று
அவரும் நடிக்க, அவரைச்சுற்றியுள்ள மந்திரிகள் கூட்டமும் தேசியப்பட்டியல்
ஜால்ராக்களும் ஆமாம் சாமி போட்டு காலத்தைக் கடத்தி வந்தார்கள்.
உலக அரங்கில் தற்போதிருக்கும் அரசியல்
சூழ்நிலையும் ந. பிள்ளையின் வரவும் அரசியல் ரீதியாக எத்தனை முக்கியத்துவம்
வாய்ந்தது என்பதை முஸ்லிம் சமூகமும் துரதிஷ்டவசமாக அதனால்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசியல் பிரமுகர்களும், கொள்கை சார்ந்து
இன்று சோரம் போயிருக்கும் மார்க்க அறிஞர்களும் உணர மறுத்தாலும் ஜனாதிபதி
உணராமல் இல்லை.
யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்
மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் காலங்களில் காணாமல் போனோர் தொடர்பில் பாரிய
கவனம் செலுத்தப்படும் என்று தெரிந்திருந்தும், மத நல்லிணக்கத்துக்கும்
ஜனநாயகத்துக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பாக சர்வதேச அழுத்தத்தைப்
பிரயோகிக்க தகுந்த தருணம் என்று அறிந்திருந்தும் கூட ஒட்டி உறவாடும்
ராஜதந்திரமே மேல் என நினைத்து மஹிந்த குடும்பத்துக்கு சற்றும் மனம் நோகாமல்
நடந்து கொண்டிருக்கிறது இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம்.
வழக்கம் போலவே முஸ்லிம்கள் அமைதி காத்து
சலுகைகளுக்காக தங்கி வாழும் சந்தர்ப்பவாதத்தைக் கட்டிக் காக்கும்
பாரம்பரியத்தைத் தொடர்வதை எதிர்கால தலை முறை விரும்பாவிடினும் பதவிகளில்
உள்ளவர்கள் தமக்குத் தெரிந்த சாணக்கியத்தை அரங்கேற்றி விட்டார்கள்.
ஆயினும், இலங்கையில் மற்ற மதங்களுக்கும்
வணக்கஸ்தலங்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டதை முஸ்லிம்கள் எடுத்துச்
சொல்லவில்லை என்று கூறினாலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவி.பிள்ளை
தானாகவே கேட்டார் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளிப்படையாக அறிவித்துள்ளது.
காரணம், அப்படியெதுவும் வேண்டுமென்றே
நடக்கவில்லை “யாரோ” நடத்திவிட்டார்கள் என்று ஜனாதிபதி சொன்ன பதில் நவி
பிள்ளையை மேலதிகமாக பேச விடாமல் செய்து விட்டது எனும் ஆணித்தரமான நம்பிக்கை
என்றால் அது மிகையாகாது.
இங்கே இரண்டு விடயங்கள் முக்கியம் பெறுகின்றன.
1. இதுவரை எதுவுமே தெரியாது என்று கூறிவந்த ஜனாதிபதி, எல்லாம் தெரியும் அதை யார் செய்தது என்றும் தெரியும் எனக் கூறியுள்ளமை.
2. ராஜதந்திரம் என நினைத்துக்கொண்டாவது தம்மை மீறி முஸ்லிம் சமூகப்பிரதிநிதிகள் வாய் திறக்கப்போவதில்லை எனும் நம்பிக்கை.
முஸ்லிம் சமூக பிரதிநிதிகளைப் பொறுத்தவரை
இப்பேற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தில் வழக்கம் போல
இலங்கையையும் அதன் அதிமேதகு ஆட்சிபீடத்தையும் காப்பாற்றி விட்டோம் எனும்
பெருமிதத்தில் இனி காலந் தள்ளலாம்.
ஆனால் மீண்டும் ஒரு முறை பொதுபல சேனாவோ,
ராவணா பலயவோ அல்லது புதியதொரு சக்தியோ முஸ்லிம்கள் உரிமைகள் மீதும்,
வாழ்வியல் மீதும், பொருளாதாரம் மற்றும் சமய விவகாரங்கள் மீதும் இனவாதம்
கொண்டு பாயும் போது திடீரென “யாசகம்” செய்வார்கள்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடமிருந்து
உங்களைக் காப்பாற்றியதற்கு எங்களுக்கு நீங்கள் தரும் பரிசு இதுதானா என்று
அதுவும் ஜனாதிபதியைப் பார்த்து கேட்கமாட்டார்கள், மாறாக எமது
சமூகத்துக்குள் மாத்திரம், அதுவும் எங்களுக்கு மாத்திரம் புரியக்கூடிய
மொழியில் பேசுவார்கள்.
இந்த வரலாற்று உதாரணத்தை அரசியல்
நிலைகளுக்கு அப்பால் நின்று இயங்க வேண்டிய ஜம்மியத்துல் உலமா ஐ.நா
முன்றலில் போய் நின்று, முஸ்லிம் நாடுகளின் உதவியையும் பெற்றுக்கொடுத்ததாக
நம்பி, கொடி பிடித்து அரங்கேற்றி வைத்தது. அதன் பின்னர் ஹலால்
பிரச்சினையில் சமூகம் சிக்கித் தவிக்க ஆரம்பித்தபோது ஐ.நாவில்
காப்பாற்றியதற்கு கிடைக்கும் பரிசு இது தானா என்று அங்கலாய்த்தது.
எந்தப்பள்ளிவாசலில் அரசைக் காப்பாற்ற
கூட்டு துஆ ஓதப்பட்டதோ அதே பள்ளியை அகற்றுவதற்கு அரசாங்க உதவியுடன் அனைத்து
நடவடிக்கைகளும் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது.
இதற்கிடையில் தற்போதைய ஜம்மியத்துல்
உலமாவின் தலைமை சார்ந்த கொள்கையாளர்களுக்கே அரச உயர் மட்டத்தோடு தொடர்புகள்
அதிகம் இருப்பதால் மனமுடைந்து போயிருக்கும் ஆனால் எப்போதுமே அரசியல்
பிரதிநிதித்துவத்தை இலக்காகக் கொண்டு இயங்கும் இன்னுமொரு கொள்கை சார்பு
அமைப்பு கையெழுத்து வேட்டை எனும் பெயரில் “புதிய” நுணுக்கம் என நினைத்து
பழைய முட்டியில் கூட்டாஞ்சோறு சமைத்து மகிழ்ந்துள்ளது.
இவ்வாறு ஒரு அழுத்தத்தைப் பிரயோகித்தாவது
உயர் மட்டத்தை நெருங்க அவர்கள் எடுத்த முயற்சிகள் நாட்டிலும், புலம் பெயர்
நாடுகளிலும் தோல்வியடைந்துள்ளது. காரணம், இவர்களிடம் சமூகப் பற்று
இருக்கவில்லை. சமூகப் பற்றோடு செயற்படுபவர்கள் தகுந்த தருணத்தில்
செயற்படுவார்கள், மாறாக அனைத்தும் நடந்து முடிந்த பின்னர் திடீரென கரிசணை
கொண்டு செயற்பட மாட்டார்கள்.
எனவே, அவர்களைச் சூழவுள்ள கூட்டணி
அமைப்புகள் இவர்களைப் போற்றிப் புகழ்ந்தாலும் சாதாரண மக்கள்
காலாவதியாகிப்போன இவ்வாறான திட்டங்களைப் புறக்கணித்து விடுவார்கள்
என்பதையும் தெட்டத் தெளிவாக அந்த கொள்கை சார்பாளர்கள் தெளிவாக அறிந்து
கொண்டு விட்டார்கள். ஆனாலும், இனி எகிப்து, சிரியா என கதையளந்து மண்
ஒட்டாமல் பார்த்துக் கொள்வார்கள்.
ஆக மொத்தத்தில் தன் சமூகத்துக்கு ஏற்படும்
அவலங்களைக் கண்டு இனப்பற்றுடன் துடிதுடிக்கும் மார்க்கப்பற்றாளர்களுக்கு
சந்தர்ப்ப சூழ்நிலை மீண்டுமொரு கசப்பான பாடத்தைக் கற்பித்துத்
தந்திருக்கிறது.
இனி இதில் எது விவேகம், எது வேகம், எது
சாணக்கியம் என பல விளக்கங்கள் பல குத்பாக்களில் அரங்கேற்றப்பட்டு வீர
வசனங்கள் பேசப்படும். ஆனாலும் அதுவெல்லாம் அடுத்த இனவாத சம்பவம் இடம்பெறும்
வரையில் தான் நிலைத்து நிற்கும்.
எனவே, இன்று காப்பாற்றிய ஜனாதிபதியின்
காலில் விழுந்தாவது, ஐயா இனி எங்கள் சமூகத்தின் முன் நிற்க வேண்டுமென்றால்
நீங்கள் உடனடியாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைக்
கட்டுப்படுத்துங்கள்.பேரினவாதிகளுக்கு ஜனநாயக முறையில் சட்டத்தைப்
புகட்டுங்கள் என கெஞ்சியாவது கேட்க வேண்டும்.
அதை செய்தாவது தம்மை நியாயப்படுத்துவதைத்
தவிர வேறு மாற்று வழி எமது பிரதிநிதிகளுக்கு இல்லை. ஆனால், ஜனாதிபதிக்கு
நிறையவே இருக்கிறது. ஏனெனில் நாம் நம்மை நாமே பலவீனப்படுத்திக் கொள்ளும்
பலவீனப்பட்ட சமூகம்!
- மானா
Post a Comment