
மஹியங்கனையில் தொழுகை நடத்தப்பட்ட இடம் ஒரு பள்ளிவாசல் அல்ல அது தனது வர்த்தக நிலையம் என்கிறார் உரிமையாளர் என்ற தலைப்பில் வார இறுதியில் அரச கட்டுப்பாட்டு தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தி, முஸ்லிம்கள் மத்தியிலும் ஏன் முஸ்லிமல்லாதோர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹியங்கனையில் கடந்த 23 வருடங்களாக இயங்கி வந்த இறையில்லம் பற்றி அந்த இடத்தின் உரிமையாளர் மஹியங்கனை ரன்முது ஜுவலர்ஸ் உரிமையாளர் சீனிமுஹம்மத் வழங்கியதாகக் கூறப்படும் கடிதமே அரச பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது.
இக்கடிதத்தினையடுத்து மஹியங்கனையில் பள்ளிவாசல் ஒன்று இருக்கவில்லையா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகின்றது.
நவமணி இதுதொடர்பாக திரட்டிய தகவல்களையே இங்கு தருகின்றோம்.
மஹியங்கனையில் நீண்ட காலமாக முஸ்லிம்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வாழும் முஸ்லிம்கள் 1986 இல் ஓர் இடத்தில் தொழுதுள்ளனர். இரண்டு வருட காலமாக இந்த இடத்தில் தொழப்பட்டது. பேரினத்தவர் சிலர் காட்டிய எதிர்ப்புக் காரணமாக இந்த இடத்தில் தொழுகை நிறுத்தப்பட்டது.
மீண்டும் 1990 இல் தற்போது தொழப்பட்ட இடத்தில் தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வாரம் வரை இங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஊவா மாகாணசபைத் தேர்தலின் போதே இங்கு ஜும்ஆத் தொழுகை ஆரம்பிக்கப்பட்டது.
ஊவா மாகாண சபைக் காணி அமைச்சர் அனுர விதாரணகமகேயின் ஆசிர்வாதத்துடனே இங்கு ஜும்ஆவும் ஆரம்பிக்கப்பட்டது. மஹியங்கனை கண்டி வீதியில் (ஹதலிஹேகட) நாற்பது கடைகள் என்ற கடைத் தொகுதிக்குள்ளே இந்தப் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இப்பள்ளிவாசலை நிர்வகிப்பதற்கு 17 பேரைக் கொண்ட பரிபாலன சபை ஒன்றும் இயங்குகின்றது.
இந்த இறையில்லம் தொடர்பாக இருக்கும் பிரச்சினை இது ஒரு பள்ளிவாசலா? தொழுகை அறையா? என்பதாகும். இந்த இடத்தை ஒரு தொழுகை அறையாக அமைத்து தொழுதுகொள்வதற்கே அமைச்சர் அனுர விதானகே உதவினார். எம்மில் சிலர் அதனை பள்ளிவாசலாக இயக்க முற்பட்டார்கள். அதனாலே இப்பிரச்சினை ஏற்பட்டது என மஹியங்கனையில் தொழில் புரியும் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
இதுவரை காலம் தொழுத தொழுகை அறையில் சுமார் 150 பேர் தொழ வசதியிருக்கின்றது. இதனை விஸ்தரிப்பதற்காக சமூக உதவியுடன் அருகிலுள்ள கடை ஒன்றும் வாங்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை பௌத்தர்களின் ஒரு புனித நகர். எனவே, அங்கு பள்ளிவாசல் இயங்க முடியாது என்பது மஹியங்கனை ரஜ மஹா விகாரை விகாராதிபதியின் வாதமாகும்.
முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸா மஹியங்கனை இ.பே.ச. டிப்போவுக்கு அருகில் பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்காக காணி ஒன்றை ஒதுக்கிக் கொடுத்திருந்தார். மஹியங்கனையில் இடம்பெற்ற கம்உதாவ அபிவிருத்தியின் ஓர் அங்கமாகவே இக்காணி ஒதுக்கப்பட்டது. அப்போதும் இந்த இடத்தில் பள்ளிவாசல் அமைப்பதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாக பள்ளிவாசல் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
அதன்பின்பே காத்தான்குடி வர்த்தகரான சீனி முஹம்மத் தனது கடையின் ஒரு பகுதியை தொழுகை அறையாக வழங்கியுள்ளார். இந்த இடத்திற்கு பள்ளிவாசலுக்கு வழங்கப்படும் மின்சாரம் மற்றும் தண்ணீர் சலுகைக் கட்டண அடிப்படையிலே வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்புடன் தானும் இப்பள்ளியில் தொழுததாக பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவிக்கிறார். தானும் இப்பள்ளிவாசலில் தொழுதிருப்பதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கின்றார்.
23 வருடங்களாக இந்த இறையில்லம் இயங்கிய போதும் இதனைப் பதிவு செய்வதற்கு இதன் நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்காதிருந்தனர். அவர்கள் ஏன் இதனை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுவே கேள்வியாகும். இவ்வாறு பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்காததன் காரணமாக சட்ட ரீதியாக ஒரு பள்ளிவாசல் இருக்கின்றது என்பதனைக் காண்பிக்க முடியாதுள்ளது.
கடந்த ஜூலை 11 ம் திகதியன்று இரவு இனம்தெரியாத குழு ஒன்று இந்த இறையில்லம் மீது தாக்குதலை நடத்தியது. இத் தாக்குதலின் போது இந்த இறையில்லம் மீது பன்றி இறைச்சியும், பன்றி இரத்தமும் வீசப்பட்டது. பள்ளிவாசல் ஒன்று தொடர்பாக இவ்வாறு பன்றி இறைச்சி வீசப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்தச் சம்பவம் நடந்தவுடனே ஸ்தலத்துக்கு விஜயம் செய்த மாகாண காணி அமைச்சர் அனுர விதானகே உடனே பள்ளிவாசலைக் கழுவி சுத்தப்படுத்தி அடுத்த நாள் அதிகாலை முதல் தொழுகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதன்படி அடுத்த தினம் ஜும்ஆத் தொழுகை நடத்தப்பட்டது. இதற்குத் தேவையான பாதுகாப்பினை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார். இப்படி இந்த இறையில்லம் தொடர்பாக பல வகையில் உதவிய அமைச்சரே கடந்த 19 ம் திகதி வெள்ளியன்று வந்து பள்ளிவாசலை மூடிவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்படியே கடந்த 19 ம் திகதி முதல் பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்த இமாம்களும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
ஆரம்பம் முதல் இறையில்லத்தின் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்த அமைச்சரின் மன மாற்றத்திற்கு யார் காரணமோ? பொதுபல சேனாவின் அமைப்பாளர் அல்லது அதற்கு மேலுள்ள சக்திகளா என்பது விடை காணப்பட வேண்டிய கேள்வியாகும்.
மஹியங்கனைப் பள்ளிவாசல் மூடப்பட்டது தொடர்பாக கடந்த 17ம் திகதி பாராளுமன்றத்தில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் கூடிய ஆளும் கட்சி முஸ்லிம் எம்.பிக்கள் இது தொடர்பாக ஜனாதிபதியைச் சந்தித்து முறைப்பாடு செய்யத் தீர்மானித்தனர். இது தொடர்பாக ஜனாதிபதி இக்கட்டுரை எழுதும் வரை முஸ்லிம் எம்பிக்களைச் சந்தித்ததாக தகவல்கள் இல்லை.
நிலைமை இப்படி இருக்கும் போதே மஹியங்கனையில் பள்ளிவாசல் ஒன்று இருக்கவில்லை என்று பள்ளிவாசலுக்கு இடமளித்தவர் பிரதமருக்கு எழுதிய கடிதம் அரச ஊடகத்தில் வெளிவந்துள்ளது. இக்கடிதம் தொடர்பாக உண்மையை அறிவதற்கு மஹியங்கனை ரன்முது ஜுவலர்ஸ் உரிமையாளர் சீனிதம்பி ஹாஜியாரை தொடர்பு கொள்வதற்கு மேற்கொண்ட சகல முயற்சிகளும் தோல்வியிலே முடிவடைந்துள்ளது.
இது இவ்வாறிருக்க கடந்த வாரம் மஹியங்கனை பிரதேச சபை ஹதலிஹே கடைத் தொகுதியிலுள்ள பள்ளிவாசல் கட்டடம் சட்ட விரோதமானது என்றும் அதனை நிர்மூலமாக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மஹியங்கனை வாழ் முஸ்லிம் வியாபாரிகள் இன்றுள்ள சூழலில் பள்ளிவாசலுக்காக குரல் கொடுப்பது தமது வியாபாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கருதுவதனை உணரக் கூடியதாகவுள்ளது.
ஐவேளை தொழக்கூடிய ஓர் இடத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய சக்தியற்ற ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் இருக்கின்றது என்பதனையே இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
Courtesy:நவமணி
Post a Comment