அமைச்சர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் பொலிஸ் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக அவர் தரப்பில் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் வெறும் புரளியாகும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வட மேல் மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.
“இந்த அரசாங்கத்தின் உள்ளேயிருந்து விமர்சிக்கின்ற- அதனுடைய போக்கை கண்டிக்கின்ற ஒரு பாத்திரத்தை நாங்கள் செய்து கொண்டு வருகின்றோம்.
அது இந்த அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கடியை மிகவும் பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது என்பதை அமைச்சரவையில் இருக்கின்ற எல்லா அமைச்சர்களுக்கும் தெளிவாகத் தெரியும்.
உண்மையிலேயே இந்த அரசில் பழிவாங்கப்படுகின்ற ஒரு அமைச்சர் இருப்பாரென்றால் அது என்னைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது.
ஆனால் சில அமைச்சர்களுக்கு எங்களையும் அரசாங்கம் பழிவாங்குகின்றது என்று காட்ட வேண்டும். இதற்காக திடீரென தங்களின் வீட்டுக்குள்ளேயும் பொலிஸார் புகுந்து தேடுதல் நடாத்தியதாக புதிய புரளியொன்றை அவர்கள் எழுப்பியுள்ளனர்.
வடக்கிலே அரசாங்கத்தோடு இணைந்து கேட்க வேண்டும் என நான் வற்புறுத்தப்பட்டேன். எனினும் போட்டியிட முடியாது என மிக நேர்மையாகவும் பக்குவமாக ஜனாதிபதிக்கு தைரியமாக நான் சொல்லியிருக்கின்றேன்.
மாகாண சபைகளின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் எல்லாவற்றையும் அகற்றி விட அரசு முயற்சி செய்த போது நான் கடுமையாக எதிர்த்தேன். ஏனென்றால் வடக்கிலே தேர்தல் நடத்த முன்னர் இந்த விடயத்தைச் செய்ய வேண்டும் என்று ஒரு முயற்சி நடந்தது. ஆனால் இவை எல்லாவற்றையும் பார்த்துக்கிட்டு எங்கள் அமைச்சர்கள் எல்லாம் சிலர் வாயே திறக்காமல் இருந்தார்கள்.
ஒரு சிலர் இதற்கு சார்பாக வக்காலத்து வாங்கினார்கள். இது எல்லாத்தையும் செய்து போட்டு தற்போது பொலிஸார் வீட்டுக்குள் புகுந்து எதையோ தேடுகிறான் என்று ஒரு பெரிய பட்டாசை வெடிக்க வைத்திருக்கார்கள்” என்று அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.


Post a Comment