
அரசின் பங்காளிகளாக இருப்பதனால் அரசுக்கு ‘ ஆமாம் சாமி ‘ போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்ற எதுவித கடப்பாடோ, உடன்பாடோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகப் பொதுச் செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூதுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் சட்டத்தரணி கபூர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இந்த அரசில் இருந்து கொண்டு தனித்துக் களமிறங்குவதில் இன்றைய அரசியல் சூழலில் எவ்வித தவறுமில்லை. அப்படியென்றால் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் பின் எவ்வாறு வெற்றிலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற அரசுடன் கூட்டுச் சேர முடியும் இதுவும் மனச் சாட்சிக்கு விரோதமான காரியமல்லவா?
‘இன்றைய அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா’ என்ற இந்தியப் பாணியை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். இவ்விடயங்களைப் பெரிதாகக் கணக்கெடுக்கத் தேவையுமில்லை. அதற்காக பெரும் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவேண்டிய அவசியமும், அவசரமும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
அதற்காக எவரும் ரோசம் இல்லையா என்று கேட்பாருமில்லை. அந்த ரோசம் உள்ள அரசியல்வாதிகள் இன்று எம்மத்தியிலும் இல்லை. இன்றைய அரசில் அங்கம் வகிக்கும் அரைவாசி அமைச்சர்கள் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு மாறி வந்தவர்களே. இதுதான் இன்றுள்ள அரசியல் யதார்த்தம். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த மர்ஹும் எம் எச் எம் அஷ்ரஃப் 1988 ஆண்டு கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் அப்போதய ஜனாதிபதித் தேர்தலுக்காக சுதந்திரக் கட்சியின் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்காவை எதிர்த்தும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட மறைந்த ஆர். பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கினார். அதற்காக பிரேமதாஸ வெட்டுப் புள்ளியின் மாற்றத்தை ஏற்படுத்தி சிறிய கட்சிகளின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குச் செல்வதற்கு வழி வகுத்த பெருமை மறைந்த மர்ஹும் அஷ்ரஃபையே சாரும்.
அதன் பின்னர் இதே சுதந்திரக் கட்சியின் சந்திரிக்காவின் அரசில் அமச்சராக இருந்து இந்நாட்டு மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அளப்பரிய சேவைகள் பல செய்தும் உள்ளார். இதுபோன்று அரசியலில் தனியான அரசியல் கட்சிகள் தனித்துக் கேட்பது சம்பந்தமாக முடிவெடுப்பதில் எவ்விதத் தவறுகளும் இருப்பதாகத் தெரியவில்லை.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் கேட்டு பின்னர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அவர்களை ஆட்சிபீடம் ஏற்றிய பின்னர் கட்சி கண்ட பயன் இதுவரை எதுவுமில்லை. மாறாக தம்புள்ள பள்ளிவாசல் தொடக்கம் தெஹிவளை, மஹியங்கனை பள்ளிவாசல்கள் வரை நடந்த கசப்பான சம்பவங்களுக்கு எவ்வித நடவடிக்கைகளும் இந்த அரசு எடுத்ததாக இன்னும் செய்திகள் வெளிவரவுமில்லை.
இந்நிலையில் மீண்டும் அரசுக்கு முட்டு கொடுக்கும் பணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியமாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றதற்கு கட்சி உயர்பீடமும் ஆதரவாளர்களும் ஏனைய முஸ்லிம் அபிமானிகளும் மற்றைய நலன் விரும்பிகளும் இதனை ஏற்றுக்கொள்கிறார்கள். இதில் உண்மை இல்லாமலும் இல்லை. இச்சூழலில் இது போன்ற ஏராளமான இன்னும் பல காரணங்களுக்காக கட்சி எடுத்த முடிவும் சரி. அதேநேரம் நீங்கள் சொல்லும் காரணங்களும் உண்மைதான்.
இருப்பினும் இன்றைய நாட்டின் பேரினவாத சக்திகளின் சில தீவிரவாதிகளுக்கு தீன்போடும் அரசின் போக்கை நாம் கண்டும் காணாமல் எவ்வளவு காலத்திற்கு காத்துக் காலம் கடத்துவது?
எனவே அவசரப்பட்டு நீங்கள் எந்த முடிவுகளையும் கட்சியின் கட்டுக்கோட்பாட்டிற்கு எதிராகவும் புதிதாகக் கிடைத்த உங்கள் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத்தான் வேண்டுமா? என்ற எண்ணத்தை தயவு செய்து கட்சியின் தவிசாளர் என்ற வகையில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இக் கட்சியின் முதல் மூத்த போராளி என்ற வகையில் நான் உங்களிடம் வினயமாக வேண்டிக்கொள்கிறேன். அத்துடன் தேர்தல் பிரசார வேலைகளுக்கு உங்கள் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இக் கட்சிக்கு குந்தகமாக அமைந்து விடக்கூடாது. இவ்வாறு சட்டத்தரணி எஸ்.எம்.ஏ கபூர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment