வட மாகாணத்திற்கான அதிகாரங்கள் ஏனைய மாகாணசபைகளை விடவும் அதிகமாகவும்
கனமாகவும் இருக்கப்போகின்ற நிலையில், வட மாகாண முஸ்லிம்கள் தமிழர்களின்
எதிரிகளோடு கூட்டுச் சேர்வது எவ்வளவு அபாயமானது என்பதை நாம் சிந்திக்க
கடமைப்பட்டுள்ளோம். இப்படி இவை போன்ற எல்லா விடயங்களையும் கவனத்தில்
கொண்டுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட மாகாணசபைத் தேர்தலில்
தனித்துப் போட்டியிடத் தீர்மானித்தது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர்
ஏ.எல்.தவம் கூறினார்.
சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பில் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற
கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்படி கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
வட மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை
கண்ணை மூடிக்கொண்டு எடுக்கவில்லை. வட மாகாணத்தில் எதிர்காலத்தில்
அமையப்போகும் ஆட்சி வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும்
அவர்களின் எதிர்கால இருப்பு போன்றவற்றை கருத்திற்கொண்டே முஸ்லிம் காங்கிரஸ்
அப்படியான ஓர் தீர்மானத்திற்கு வந்துள்ளது.
வட மாகாணத்தைப் பொறுத்தவரை அங்குள்ள 36 ஆசனங்களில் ஆகக்குறைந்தது 22 அல்லது
23 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி அங்கு ஆட்சியை
அமைக்கப்போவதை சிறு பிள்ளை கூட இலகுவாக எதிர்வு கூறும். தமிழ் சமூகம்
இதுவரைக்கும் இழந்து நிற்கும் 200,000 ற்கும் அதிகமான உயிர்கள்,
25,000ற்கும் மேற்பட்ட அங்கவீனர்கள், 15,000ற்கும் மேற்பட்ட அனாதைகள்,
90,000 விதவைகள் என்பவற்றை தமக்குப் பரிசளித்த பேரினவாதிகளைக் கொண்ட
பெரும்பான்மைக் கட்சிகளை தமது பரம எதிரிகளாக பார்க்கின்றார்கள்.
இந்நிலையில் வடக்கில் வாழும் முஸ்லிம்களும் தமது பரம எதிரிகளான பேரினவாத
எதிரிகளோடு கைகோர்த்து நிற்கின்றார்கள் என்ற செய்தி, அமையப்போகும் தமிழ்
தேசியக்கூட்டமைப்பு ஆட்சிக்கு எவ்வளவு ஆத்திரம் உண்டு பண்ணும் விடயமாக
அமையும் என்பதனை நாம் சிந்திக்க வேண்டும்.
புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களின் கருத்துக்களை ஓரம் கட்டிய
சர்வதேச சமூகம், வடமாகாணத்தில் அமையப்போகும் மாகாண அரசாங்கத்தின் குரலை
கவனமாக செவி மடுக்கவும் அதற்காகச் செயற்படவும் முற்படும். ஏனனில், கடந்த
30வருடகால ஆயுதப் போராட்டமும் அதற்கு முன்னரான சாத்வீக வழிப்
போராட்டங்களும் தமிழ் சமூகத்திற்கான ஆட்சி அதிகாரத்திற்காகத்தான்
நடைபெற்றது. அவ்வாறான நீண்ட போராட்டத்தில் முதன் முறையாக தமிழ் சமூகத்தின்
சுதந்திரத் தெரிவில் வட மாகாணசபை ஆட்சி, அவர்களுடைய போராட்டத்தின் ஒரு மட்ட
அடைவாக அமையப்போகிறது. வட மாகாணம் தமிழர் மாகாணம்தான் என்பதை உலகம் தௌ;ளத்
தெளிவாய் விளங்கிக் கொள்ளப் போகிறது. அதனால் வடமாகாணத்திற்கான எல்லா
விடயங்களிலும் தமிழர்களே முன்னுரிமைப்படுத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை
எடுப்பதோடு இலங்கை அரசாங்கத்திற்கும் பல்முனை அழுத்தங்களைப்
பிரயோகிக்கப்போகிறது.
இதனால், வட மாகாணத்திற்கான அதிகாரங்கள் ஏனைய மாகாணசபைகளை விடவும்
அதிகமாகவும் கனமாகவும் இருக்கப்போகின்ற நிலையில், வட மாகாண முஸ்லிம்கள்
தமிழர்களின் எதிரிகளோடு கூட்டுச் சேர்வது எவ்வளவு அபாயமானது என்பதை நாம்
சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இப்படி இவை போன்ற எல்லா விடயங்களையும்
கவனத்தில் கொண்டுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட மாகாணசபைத்
தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்தது.
ஆனால், சிலர் இதனை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள். இவ்வாறு
விமர்சிப்பவர்கள் கட்சிக்கு உள்ளும் கட்சிக்கு வெளியேயும் இருக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் எல்லோருக்கும் மீண்டும் ஒரு முறை நான் ஞாபகப்படுத்த
விரும்புகிறேன். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட மாகாணசபைத்தேர்தலில்
தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பதனைத்
தீர்மானிப்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே அன்றி அமைச்சர் பதவிக்காக
அரசாங்கத்தின் காலில் விழுந்து கிடப்பவர்களும் அரசாங்கமும் அல்ல. இந்த
தீர்மானத்தால் முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிட
வைப்பதற்கு கொந்தராத்துப் பேசியவர்கள் இது முடியாது போன காரணத்தினால்,
கட்சிக்குள் இருந்து கொண்டே கட்சியில் உள்ளவர்களில் சிலரை திரைமறைவில்
நின்று அரச அணியோடு சேர்த்தும் விட்டிருக்கிறார்கள். 'பூனை கண்ணை மூடிக்
கொண்டு பால் குடிப்பது போன்று' இதனை யாரும் அறிய வில்லை என்று
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தக்கட்சியை பயன்படுத்தி மக்களால் தெரிவு
செய்யப்படாமலே பலமுறை பாராளுமன்றம் வந்தவர்கள், இப்போது ராஜ விசுவாசத்தால்
இந்தக்கட்சியை சீரழிக்கப்பார்க்கிறார்கள். இது மக்கள் இயக்கம். இந்த
இயக்கம் தன்னுடைய முழுப் பலம் கொண்டு, கடந்த காலத்தில் இப்படி நடைபெற்ற
எத்தனையோ துரோகங்களுக்கு முகம் கொடுத்திருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல.
முன்பு அமைச்சர் பதவிகளுக்காக அதாஉல்லாவும், றிசாட்டும் கட்சியைவிட்டு
வெளியேறி துரோகம் செய்தார்கள் இப்போது புது முறையில் கட்சிக்குள் இருந்தே
பதவிக்காக கட்சியையே கருவறுக்க முயற்சிப்பதை நீண்ட காலம்
பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. கட்சிப் போராளிகளும் இதனை அனுமதிக்க
மாட்டார்கள் ஆகவே, களை எடுக்கவேண்டிய கட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ்
வந்திருக்கிறது. அவ்வாறு செய்வதினால் மட்டும்தான் முஸ்லிம் காங்கிரஸ் என்ற
இந்த இயக்கத்தையும் முஸ்லிம் சமுகத்தையும் பாதுகாக்க முடியும் என நாங்கள்
திடமாக நம்புகிறோம்.
கட்சிக்குள் பல கருத்துக்கள் வருவது ஜனநாயகம் எனக் கூறி இவர்கள்
தப்பிக்கொள்ள முயற்சிக்கிறார்கள் ஆனால், முஸ்லிம் காங்கிசின் முக்கிய
பதவிகளில் இருந்துகொண்டு எப்படிப் போட்டியிடுவது என்ற இறுதித் தீர்மானம்
எடுக்கும் உயர் பீடத்தில் கலந்துகொள்ளாமல், தனித்துப் போட்டியிடும்
தீர்மானம் எடுக்கும் போது தாமும் இருந்தால் அது அரசாங்கத்தை அதிருப்தி
அடையச் செய்துவிடும் என்பதற்காக ,அக்கூட்டத்திலேயே கலந்து கொள்ளாமல்
இருந்தார்கள். எந்த வகையிலும் அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதில் மட்டுமே
கவனமாக இருக்கிறார்கள். கட்சியும் சமூகமும் எப்படிப்போனாலும் நாமும் நமது
பதவியும் இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இவர்களைச்
சரியாக இனம் கண்டு இத் தேர்தலில் மக்கள் இவர்களின் கருத்தை
தோற்கடிப்பார்கள் என்று திடமாக நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்
Post a Comment