
ஒரு தரப்பினர் நோன்புடன்
ஒரு தரப்பினர் பெருநாளுடன்
ஒரு தரப்பினர் நோம்பும் இல்ல பெருநாளும் இல்ல
ஒரு பெருநாளைக்கூட சந்தோசமாக கொண்டாட முடியாமல்
சந்தேகப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருப்பது எமது பலவீனத்தை ஒரு
படி உயர்த்திக்காட்டுகிறது.
இலங்கையில் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமடைந்திருக்கும் மதப்
பயங்கரவாதம் எமக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில் எமது பலம் ஒரு
பெருநாளின் மூலம் மதிப்பிடப்பட்டிருக்கிறது என்பது ஒரு பக்க உண்மை.
நோன்பு காலங்களில் இப்தார் பயான் சொல்லுவதற்கும் மார்க்கச் சொற்பொழிவு
செய்வதற்கு மட்டும் வானொலி தொலைக்காட்சிகளை நாம் பயன்படுத்து மட்டும்
போதாது. பிறை பார்த்து பெருநாள் அறிவிக்கும் பொறுப்பும் பகிரங்கமாக
தொலைக்காட்சி வானொலிகளில் நேரம் ஒதுக்கப்பட்டு அந்த விடயம் நேரடி
ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டும்.
இன்று வந்துள்ள பிரச்சினை சவுதியில் பிறை கண்டு பெருநாள் கொண்டாடும்
பிரச்சினையல்ல. கிண்ணியாவில் பிறைகண்டு அதனைத் தெரியப்படுத்தியும் அது
கருத்தில் கொள்ளப்படவில்லை எனும் விமர்சனமும் குற்றச்சாட்டும்தான் இன்று
வந்துள்ளது.
பிறைக்கு முன்னால் கொண்டாட வேண்டிய பெருநாளுக்குத் திரைக்கிப்
பின்னால் என்ன நடக்கிறது என்ற கேள்வியும் சந்தேகங்களும் இன்று
எழுந்துள்ளது. எனவேதான் பிறைகண்டு அறிவிக்கும் நிகழ்வு பகிரங்க
ஊடகப்படுத்தப்பட வேண்டும்.
பிறையைப் பார்த்துவிட்டு இறுதியாக பெருநாளா இல்லையா என்று அறிவிப்பது
மட்டும் இந்த விடயத்தில் போதாமல் இருக்கிறது. பிறை காண்பதற்கு கூடுகின்ற
இடம் நேரடி ஒளிபரப்புக்குள்ளாக வேண்டும். நோன்பு கால நிகழ்ச்சிகள் எதுவும்
இல்லாமல் இதனை மட்டுமாவது செய்வது முஸ்லிம் நிகழ்ச்சியின் பயனுள்ள ஒரு
விடயமாக இருக்கும் என்று கருதவேண்டியிருக்கிறது.
இதைத் தொடர்ந்தும் இப்படியே விட்டுவிட முடியாது இது ஒரு உணர்வற்ற
சமூகமும் அல்ல. இந்தப் பெருநாளின் அறிவிப்புத் தொடர்பாக பகிரங்க குழு ஒன்று
உயர் மட்டத்தில் உருவாக்கப்பட்டு இது தொடர்பான ஆதாரத்தன்மையான விடயங்களை
ஆராய வேண்டும்.
பிறை கண்டதாக கூறுகின்ற கிண்ணியா பிரதேச நபர்களை அல்லது மக்களை
முறையாக அணுகி கிண்ணியா ஜமியத்துல் உலமா சபையினரையும் முன்வைத்து அகில
இலங்கை ஜமியத்துல் உலமா மற்றும் பிறை அறிவிப்புக்குழுவினர் எல்லோரையும் ஒரு
பொதுவான தளத்தில் வைத்து பகிரங்கமான ஒரு ஊடக உரையாடலைச் செய்ய வேண்டும்.
இது தனிப்பட்ட கொள்கை சார்ந்தவர்களுக்கான முடிவல்ல. இது ஒரு
சமூகத்தின் தீர்ப்பும் அறிவிப்புமாகும் இதை இப்படியே எதுவுமற்று
விட்டுவிடுவதும் ஆபத்தான ஒரு வரலாற்றுக்கு அடிப்படையாக அமைந்துவிடும்.
அது மட்டுமல்ல இந்த முடிவை யார் பொறுப்பாக்கிக் கொள்வது என்ற
கேள்வியும் இங்குண்டு. எனவே பொறுப்புவாய்ந்த தளங்களில் இது தொடர்பான
முறையான ஒரு உரையாடலை இது தொடர்பானவர்களை அழைத்து பகிரங்கமாக
ஊடகப்படுத்துவது ஒரு சமூகக் கடமையாகும்..!
Post a Comment