Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

தமிழ் பெண்களை வர்ணிக்கும் அஸ்வர், முஸ்லிம் பெண்களின் பிரச்சினை பற்றி பேசுவாரா ?

Tuesday, July 300 comments


தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் ஆளும் தரப்பு எம்.பி அஸ்வர், பாரளுமன்றத்தில் ஆற்றிய உரையானது அருவருக்கத்தக்கதாகும். ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையே அசௌகரியப்படுத்தும் செயலாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உதவி  செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சண். குகவரதன் மேலும் கூறியுள்ளதாவது,

தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்தவரான, அஸ்வர் எம்.பி ஏனைய சமூகத்தினருக்கு பிழையான முன்னுதாரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய அஸ்வர் எம்.பி ‘வெள்ளவத்தையில் தமிழ் பெண்களின் ஒய்யார நடையை’ ரசித்துக்கொண்டே இருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். வெள்ளவத்தையில் தமிழ் பெண்கள் ஒய்யாரமாக நடப்பதாகக் கூறும் அஸ்வர் எம்பிக்கு தமிழ் பெண்களின் பாதுகாப்பிற்கும், சுதந்திரமான நடமாட்டத்திற்கு உள்ள ஆபத்துக்கள் தெரியவில்லை.
கொழும்பில் தாலிக்கொடிகள், சங்கிலிகள், கொள்ளையடிக்கப்படுகின்றன. இப் பிரதேசங்களில் குறுக்குப் பாதைகளில் தமிழ் பெண்கள் தனியாக நடந்து சென்றால் பணம் பறிக்கப்படுகின்றது. மாணவிகளுக்குக் கூட இதே நிலைதான்.இந்த யதார்த்தம் இவரது கண்களுக்குத் தெரியவில்லையே. அதிலும் இன்றைய புனித ரமழான் காலத்தில் மூத்த அரசியல்வாதியொருவர் இவ்வாறு தமிழ் சமூகத்தை இழிவுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தந்தையைப் போன்ற ஒருவர் ஒய்யார நடை பற்றிப் பேசுவதா?

இவரது இவ் உரையானது பிழையான முன்னுதாரணமாகும். நாளை முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பாக எவராவது பிரஸ்தாபிக்கும் போது, ஏன் புதுக்கடையில், மாளிகாவத்தையில் முஸ்லிம் பெண்கள் ஒய்யாரமாக நடந்து செல்கின்றனரே, அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே என்று நாம் பதில் அளித்தால் எப்படி இருக்கும் என அஸ்வர் சிந்திக்க வேண்டும்.
ஆனால், நாம் அப்படி தரக்குறைவாக பேச மாட்டோம். அதுமாத்திரம் அல்ல, முஸ்லிம் சகோதரிகளுக்கு இன்று ஏற்பட்டுள்ள அபாயா அணியும் பிரச்சினை பற்றி நமது தலைவர் மனோ கணேசன் தான் பேசுகின்றார். இதுபற்றி அஸ்வர் பேசுவது இல்லை. அதுமட்டும் அல்ல, இப்படி ஒரு பிரச்சினையே முஸ்லிம் பெண்களுக்கு இல்லை என்பது போல் அஸ்வர் அரசுக்கு ஆலவட்டம் வீசுகின்றார்

பாராளுமன்றம் நாட்டின் உயர்பீடம். இங்கு பேசும்போது, பொறுப்புடன் பேச வேண்டும். ஒரு சமூகத்தின் பெண்களை இழிவுபுடுத்திப் பேசும்போது, இன்னொரு நாள் தமது சமூகத்தின் பெண்களுக்கு எதிராகவும் அது ‘பூம ரேங்’ ஆகத் திரும்பும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

யுத்தம் முடிந்து விட்டது. ஆனால் நாம் காணும் சுதந்திரம் மேல் பூச்சாகத்தான் இருகின்றது.  தமிழ் பெண்களாகட்டும், ஆண்களாகட்டும் வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி, வரையறைக்கப்பட்ட கலாச்சார சுதந்திரத்துடனேயே  வாழ்கின்றார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.  இன்று இந்த கலாச்சார சுதந்திரம் முஸ்லிம் மக்களுக்கும்கூட இல்லை.  இந்த கசப்பான உண்மைகளை அடுத்த முறை வாயை திறக்கும் முன்னர் முன்னாள் ஐதேக, இந்நாள்  ஆளுந்தரப்பு தேசிய பட்டியல் எம்பி அஸ்வர் உணர்ந்து கொள்ள வேண்டும் என சண். குகவரதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by