அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் பிரதேச சபையின்
உறுப்பினர் ஜவாப்தீன் ஜஸ்ரி (நளீமி) அவர்களால் 2013.07.30. அன்று நடைபெற்ற
பிரதேச சபை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட 'பள்ளிவாசல் உடைப்பு' தொடர்பான
கண்டனப்பிரேரனை.
அண்மைக்காலமாக இலங்கையின் சிறுபான்மை மக்களது மத ஸ்தலங்கள் தாக்கப்பட்டு
வருவதும், சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் குறிப்பாக
சிறுபான்மையினரின் தனித்துவஅடையாள மற்றும் தொழில் முக்கியத்துவம் வாய்ந்த
இடங்களில் பௌத்த மத சின்னங்களை நிறுவுவதும் இயல்புநிலையைப் பாதிக்கும்
நடவடிக்கைகளாக உள்ளன. இது குறித்த சிறுபான்மையினரது வாழிட
தனித்துவத்தையும், சுதந்திர உணர்வையும் பாதிக்கக்கூடிய செயலாகும்.
அந்த வகையில், அண்மைக்காலமாக இலங்கையில் பள்ளிவாசல் உடைப்புச் சம்பவங்கள்
பகிரங்கமாகவும், பரவலாகவும் இடம் பெற்றுவருவதை ஊடகங்கள் மூலம்
நன்கறியக்கூடியதாக இருக்கிறது. மேலும் இதுவரை முஸ்லிம்களின் வழிபாட்டு
முக்கியத்துவம் வாய்ந்த 17 புனித தலங்கள் தாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களது
மதசுதந்திரத்தையும், இலங்கை குடியசின் யாப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள சமய
காப்பீட்டையும் கேலி செய்யும் ஒன்றாகவே இதனைப்பார்க்க வேண்டியுள்ளது.
இந்தளவுக்கு இவ்வுடைப்புச்சம்பவங்ள் தொடராக இடம்பெறுவதற்கு, இவ்வுடைப்போடு
நேரடியாக சம்பந்தப்பட்ட பொதுபல சேனா அமைப்பினர் முறையான
கைதுக்கும்,விசாரணைக்கும் உட்படுத்தப்படாமையே காரணம் என உள்நாட்டு
வெளிநாட்டு நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளிவாசல் உடைப்புடன் பொதுபல
சேனா அமைப்பினர் நேரடியாக சம்பந்தப்பட்ட (காவல் துறையினரின் முன்னால் இடம்
பெற்ற) புகைப்படங்கள்,வீடியோக்கள் என்பன சாட்சிகளாக இருந்தும் பள்ளிவாசல்
உடைப்பு தொடர்ந்து கொண்டிருப்பதானது, சிறுபான்மையினரின் 'இருப்பு' தொடர்பாக
அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.
பள்ளி உடைப்பு தொடர் சம்பவங்களின் வரிசையில் கடந்த 17.07.2013 அன்று
மகியங்கணை நகர்ப்புரத்தில் உள்ள பள்ளிவாசலை, பொதுபல சேனா அமைப்பினர்
உடைத்து அதனுள் பன்றியின் மாமிசத்தை போட்டு அசிங்கப்படுத்தியிருந்தனர்.
அடுத்தநாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் வந்து 'இனிமேல் பள்ளிவாசலில்
தொழக்கூடாது' என அச்சுறுத்திச் சென்றிருக்கின்றார். ஒரு மாகாணசபை
உறுப்பினர் அச்சுறுத்தியமையானது அரசதரப்பின் நடவடிக்கையாகவே
பார்க்கப்படவேண்டியது என்பதில் சந்தேகமில்லை.
எனவே இலங்கைவாழ் முஸ்லிம்கள் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையிலும்,
பன்னெடுங்காலமாக இந்நாட்டின் அபிவிருத்திக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை
நல்கிவருபவர்கள் என்ற வகையிலும், வரி செலுத்துபவர்கள் என்றபடியாலும்
அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு
அரசாங்கத்துக்குரியதாகும்.
மேலும்,யாப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட சிறுபான்மையினரின் மத
சுதந்திரம் தொடர்பான காப்பீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும
என்பதோடு;.பள்ளிவாசல் உடைப்போடு தொடர்பான பொதுபல சேனா அமைப்பினரும்,
அரசியல்வாதிகளும் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும். என நான் வினயமுடன்
கேட்டுக்கொள்கின்றேன்.
ஜவாப்தீன் ஜஸ்ரி(நளீமி)
பிரதேச சபை உறுப்பினர்
மூதூர்

Post a Comment