முஸ்லிம்களின் இணக்கமின்றி ஒருபோதும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்
இணைக்கப்பட மாட்டாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.சுமந்திரன் தெரிவித்தார். அஸாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய
முன்னணியின் (நுஆ) அம்பாறை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது
சீபிரீஸ் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுபோதே அவர் இதனைக்
குறிப்பிட்டார்.
அங்கு சுமந்திரன் எம்.பி. உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;
தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய மிக இக்கட்டான கால
கட்டத்தில் இரு சிறுபான்மைச் சமூகங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
முஸ்லிம்களுக்கென தனிக்கட்சி இல்லாதிருந்த காலத்தில் தந்தை செல்வா
தலைமையிலான தமிழரசுக் கட்சியே முஸ்லிம்களை அரவணைத்து அவர்களது
உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தது.
1967 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மேல் சபையான செனட் சபைக்கு மசூர் மௌலானாவை
செனட்டராக நியமித்து முஸ்லிம் சமூகத்தை தமிழரசுக் கட்சி கௌரவப்படுத்தியது.
அப்போது இரு சமூகத் தலைவர்களும் ஒன்றிணைந்தே சிறுபான்மையினருக்கான
போராட்டங்களை முன்னெடுத்தனர். 1977ஆம் ஆண்டு எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி மூலமே தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
யுத்தம் முடிவுற்றுள்ள இன்றைய சூழலில் பேரினவாதம் தலைவிரித்தாடுகின்ற
இன்றைய கொடூரமான ஆட்சியில் மீண்டும் தமிழ் பேசுகின்ற மக்களாகிய நாங்கள்
ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் வந்துள்ளது. யுத்த காலத்தில்
முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளுக்காக தமிழ் சமூகம் மன்னிப்புக்
கோரியுள்ள நிலையில் பழைய குரோதங்களை மறந்து நாம சகோதர்களாக ஒன்றிணைந்து
செயற்பட முன்வர வேண்டும்.
இனிவரும் காலத்தில் முஸ்லிம்களுக்கு அநீதிழைப்பதற்கு தமிழ் தரப்பு இடமளிக்க
மாட்டாது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பு என்ற விடயத்தில் கிழக்கில்
வாழும் முஸ்லிம் மக்களின் விருப்பப்படியே தீர்மானம் மேற்கொள்வதற்கு தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. முஸ்லிமகளின் சம்மதமின்றி வடக்கு
கிழக்கு மாகாணங்கள் இணைப்பு எனும் தீர்வு திணிக்கப்பட மாட்டாது.
ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணையும்போதே முஸ்லிம்களுக்கு தனி அதிகார
அலகைப் பெற முடியும் என்பதை மறந்து விடாதீர்கள். அந்த அடிப்படையிலேயே
மு.கா. ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் உடன்படிக்கை
செய்திருந்தார் என்பதை நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
வட மாகாணத்திலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்களது
சொந்த இடங்களில் மீண்டும் வந்து குடியேற வேண்டும். அதற்கு தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்..
அரசாங்கம் 13ஆம் திருத்தத்தின் வீரியத்தைக் குறைப்பதற்கு எடுத்து வருகின்ற
நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டில் மக்கள் பல பகுதிகளிலும் எதிர்ப்புத்
தெரிவித்து வருகின்றனர். அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கூட
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதால் அவர்களை அரசாங்கம் அழித்தது. ஆனால்
ஆயுதம் ஏந்தாத முஸ்லிமகள் ஏன் இன்று அடிக்கப்படுகிறனர். இந்த நாட்டில்
சிங்களவர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்ற திட்டத்துடன் பேரினவாதிகளின்
கூடாரமாக அரசாங்கம் மாறியுள்ளது. அதனால் பொது பல சேனா போன்ற சிங்களத்
தீவிரவாத அமைப்புகளை அரசாங்கம் ஊட்டி வளர்க்கிறது.
பொது பல சேனா புதிதாக முளைத்த ஒரு அமைப்பல்ல. அது ராஜபக்ஷ குடும்பத்தினரால்
திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
அப்படியிருந்தும் முஸ்லிம் தலைவர்கள் அந்த அரசாங்கத்தில் இன்னும் ஒட்டிக்
கொண்டிருக்கின்றனர் என்றால் அவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வாறு
விடிவைப் பெற்றுக் கொடுக்க முடியும்.
Post a Comment