தமிழ்ப் பத்திரிகை ஒன்றில்; அண்மையில் 'முஸ்லிம்கள் எப்போதும் அரசுக்கு
எதிராகவே வாக்களிக்கின்றனர்' என்ற தலைப்பிட்டு அமைச்சர் அதாவுல்லா
பொத்துவிலில் கூறியதாக செய்தி வெளியாகியிருந்தது.
இச்செய்தி தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், கட்சியின் உயர்பீட உறுப்பினருமான
அல்ஹாஜ் ஏ.எல்.எம். நஸீர் விடுத்துள்ள அறிக்கையில்,
ஆட்சிக்கு எந்த அரசு வருகிறதோ அதற்கு எதிராகவேதான் முஸ்லிம்கள் வாக்களித்து
வருகின்றார்கள் எனவும், தற்போதிருக்கின்ற ஜனாதிபதிக்கு முஸ்லிம்களில்
கணிசமானவர் வாக்களிக்கவில்லை எனவும், முஸ்லிம் காங்கிரஸ் சந்தர்ப்பவாத
அரசியல் மாத்திரமே செய்துவருகின்றது எனவும், இனங்களுக்கிடையில்
முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டுமென்ற தேவை முஸ்லிம் காங்கிரஸூக்குத்தான்
உள்ளது எனவும் தன்னுடைய மக்களை அரசியல் மயப்படுத்தும் நோக்கத்துடன் தலைவர்
அஷ்ரஃப் ஆரம்ப காலத்தில் இனவாதம் பேசினாலும் கூட கடைசியில், தனது
இனத்திற்கு மாத்திரம் பேசி எதனையும் வெல்ல முடியாது என்பதைப்
புரிந்துகொண்டு பொதுவான 'நுஆ' என்ற கட்சியை ஆரம்பித்துவைத்தார் என்றெல்லாம்
கருத்துக்களைத் தெரிவித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இங்கு, அமைச்சர் அதாவுல்லா முஸ்லிம்களை அரசுக்கெதிரானவர்களாகவும்
பெரும்பான்மை விருப்பத்திற்கு எதிரானவர்களாகவும் காட்டமுனைந்துள்ளதுடன்,
முஸ்லிம்களின் தனித்துவக் குரலான முஸ்லிம் காங்கிரஸையும் அதனுடைய ஸ்தாபகத்
தலைவரான மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் காலப்பொருத்தம் கருதி தான் முன்னெடுத்து
வந்த அரசியல் நிலைப்பாடுகளையும் தன்னிடமுள்ள அரசியலறிவை(?) வைத்துக்
கொண்டு பிழையான முறையில் சித்தரிக்க முனைந்துள்ளமை புலனாகிறது.
இவ்வாறான முறையற்ற காலங் கடந்த, அவதூறான பேச்சுக்களை பரப்புவதன் மூலம்
முஸ்லிம்களைக் காட்டிக்கொடுக்கும் செயலை செய்துவருகின்ற அரசியலை அமைச்சர்
அதாவுல்லா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டியதுடன் இதன் பின்னராவது தன்னை
திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஒரு ஜனனாயக நாட்டில் தான் விரும்புகின்ற ஆட்சியாளருடன் அல்லது கட்சியுடன்
சேர்ந்து காலப்பொருத்தப்பாடு மற்றும் தனது சமூகம்சார் நலன்கருதி
ஆட்சியமைப்பது என்பதும் அரசிற்கு ஒத்துழைப்பது என்பதும் ஒரு கட்சியின்
அல்லது ஒரு சமூகத்தின் ஜனனாயக உரிமையாகும். அந்த வகையில்தான் பெரும்பான்மை
இனத்தவர்கள் கூட தங்களது ஆட்சித்தெரிவினை காலத்திற்கு காலம் மாறுபட்ட
வகையில் மேற்கொள்கின்றார்கள். அதனால்தான் வௌ;வேறு கட்சிகள், தலைமைகள்
நாட்டின் ஆட்சியை மேற்கொண்டு வருகின்றன. இதுதான் வரலாறாகும் மாத்திரமன்றி
யதார்த்தமும் அதுதான்.
அதேபோன்றுதான் முஸ்லிம்களும் கடந்த காலங்களில் தங்களது அரசியல்
நிலைப்பாடுகளை கொண்டிருந்ததனை அவதானிக்க முடியும். சிங்கள மக்களின்
பெரும்பான்மை விருப்பை முழுமையாக மறுதலிக்கும் வகையில் எல்லா
சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் தங்களது அரசியல் தீர்மானங்களை எடுக்கவில்லை
என்ற வரலாற்றையும் அமைச்சர் அதாவுல்லா மீளப்பார்க்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில்
முஸ்லிம்களும் முஸ்லிம் காங்கிரஸூம் எடுத்த நிலைப்பாட்டினை குறிப்பிட
முடியும்.
எனவே, ஆட்சிக்கு எந்த அரசு வருகிறதோ அதற்கு எதிராகத்தான் முஸ்லிம்கள்
வாக்களித்து வருகின்றார்கள் என்ற அமைச்சரின் கூற்று தவறானதும் கண்டிக்கப்பட
வேண்டியதுமாகும்.
தற்போதிருக்கின்ற ஜனாதிபதிக்கு முஸ்லிம்களில் கணிசமானவர்கள்
வாக்களிக்கவில்லை என்று கூறியுள்ள கருத்தின் மூலம் அமைச்சர் எடுத்துக்காட்ட
முனைவது எதனை என ஆராயவேண்டியுள்ளது. தற்போது நாட்டில்
முஸ்லிம்களுக்கெதிராக இனவாத சக்திகளினால் முன்னெடுக்கப்படுகின்ற நாசகார
சதிகளை நாட்டின் தலைவரான ஜனாதிபதி தடுக்காமல் இருப்பதனை நியாயப்படுத்த
முனைகிறாரா..? அல்லது தான் ஜனாதிபதிக்கு வாக்களிக்கக் கோரியும்
வாக்களிக்காத மக்களுக்காக தான் எந்த வகையிலும் பேச வேண்டிய அவசியம் இல்லை
என்ற அடிப்படையில் 'ஊர் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னன்'
போன்று தான் தொலைக்காட்சிகளில் பாடல்கள் பாடி ஆடுவதை நியாயப்படுத்த
முனைகிறாரா..?
மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்
மனச்சாட்சிப்படி வாக்களிக்க ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டு வர
முயற்சித்ததன் மூலம் தனது காட்டிக்கொடுப்புப் படலத்தின் உச்சத்திற்கே
சென்று ஒரு பாரிய சமூகத் துரோகத்தை மிக அநாயாசமாக எவ்வித குற்ற உணர்வும்
இன்றி செய்ய முனைந்திருப்பதனை நமது சமூகம் ஒருபோதும் மன்னிக்க முடியாது.
ஏனெனில், ஒரு ஜனனாயக நாட்டில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர் நூறு
வீதம் மக்களின் விருப்பத் தெரிவினைப் பெற ஒருபோதும் முடியாது. இங்கு
கணிசமானவர்கள் எதிர்த்தும் வாக்களிப்பர். பெரும்பான்மை வாக்குகளால்
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர், தனக்கு எதிர்த்து வாக்களித்த
மக்களுக்கெதிராக செயற்படுவதில்லை. அப்படியான வரலாறு சிறந்த ஆட்சியில் இல்லை
என்ற ஜனநாயகக் கொள்கையை அமைச்சர் விளங்கிக் கொள்ளவேண்டும்.
அதுமாத்திரமன்றி, தற்போதைய ஜனாதிபதி எடுத்து வருகின்ற அரசியல் சார்
நடவடிக்கைகளிலும் நாட்டு நலன்சார்ந்த விடயங்களிலும் எமது நாட்டிலுள்ள
முஸ்லிம்களுக்காக பேசுகின்ற தனித்துவக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் கொண்டுள்ள நிலைப்பாடுகள் முற்றாக அவரது நடவடிக்கைகளை நிராகரித்த
அடிப்படையில் அமையவில்லை. மாறாக தனது இனத்தினதும் சிறுபான்மை சமூகத்தினதும்
நலன்கள் பாதிக்கப்படுகின்ற விதத்தில் தீர்மானங்கள் அரசினால்
மேற்கொள்ளப்படும் போதே, அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்து
வருகின்றது. இது அக்கட்சியின் முஸ்லிம் சமூகம் சார்ந்த தார்மீகக்
கடமையாகும் என்பதை அமைச்சர் அதாவுல்லா புரிய வேண்டும்.
இந்நாட்டில் சுமார் 20 இலட்சம் முஸ்லிம்கள் பல இடங்ளில் சிதறி
வாழ்கின்றனர். முஸ்லிம்கள் அனைவரும் ஒரு அரசியல் தலைமையின் கீழ்
காணப்படவில்லை. அதற்கான அடித்தளமும் கடந்த கால அரசியல் தலைவர்களால்
மேற்கொள்ளப்படவுமில்லை. அவர்கள் பெரும்பான்மை இனக்கட்சிகளுடன் இணைந்தே
தங்களது சமூகம் சார்ந்த அரசியலை குறிக்கிக் கொண்டனர். இந்நிலையையும்
அதனாலேற்பட்ட பாதகமான விளைவுகளையும் உணர்ந்த முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்
தலைவர் அவர்கள், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்து
முஸ்லிம்களுக்குரிய அரசியல் தனித்துவப் பாதையையும் அதனால் சாதிக்க
முடியுமான சாதனைகளையும் நிலை நிறுத்திக்காட்டினார். அவரின் மறைவிற்குப்
பிறகு தேசிய ரீதியில் முஸ்லிம்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சியை தற்போதைய
அக்கட்சியின் தலைவர் முன்னெடுத்தார். ஆனால், அதற்கான முயற்சிகளும்
சந்தர்ப்பங்களும் தங்களைப் போன்றவர்களால் கைநழுவிச் சென்றது என்பது தாங்கள்
உணர மறந்த முஸ்லிம்களின் எதிர்மறையான அரசியல் வரலாறாகும்.
இலங்கை நாட்டைப் பொறுத்தவரை நாட்டின் ஆட்சியானது விரும்பியோ விரும்பாமலோ
இன, மத ரீதியில் ஆக்கப்பட்ட ஆட்சியாகவே அமைந்துள்ளதனை வரலாறு நிரூபிக்கும்.
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து தற்போது வரையிலான ஆட்சியாளர்கள்,
அரசாங்கங்கள் பெரும்பாலும் சிங்கள மக்களின் நலன் சார்ந்தே தங்களது அரசியல்
நகர்வுகளை மேற்கொண்டு வந்தன, மேற்கொண்டும் வருகின்றனர். இதன்
விளைவாகத்தான், பாதிக்கப்பட்ட சிறுபான்மையினத்தவர்கள் தங்களின் இனம்
சார்ந்த அடிப்படையிலான பெயர்களை மையப்படுத்தி கட்சிகளை அமைத்தனர். இதன் ஒரு
கட்டமாகத்தான் முஸ்லிம் காங்கிரஸூம் தோற்றம் பெற்றது.
ஓரு சமூகத்தின் மீதான பற்றும் அக்கறையும் இனவாதமாகாது.
இந்தடிப்படையில்தான், முஸ்லிம் காங்கிரஸூம் இந்நாட்டில் தனது அரசியலை
செய்தது. தற்போதும் செய்து வருகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் கால சூழலைக்
கருத்திற்கொண்டு எடுக்கின்ற அரசியல் தீர்மானங்கள் சந்தர்ப்பம் சார்ந்ததாக
இருக்க முடியும். ஆனால், இனவாதமானதாக இருக்க முடியாது.
ஏனெனில், இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டுமென்ற தேவை
முஸ்லிம் காங்கிரஸூக்கு ஒரு போதும் இருந்ததில்லை. அதற்கான வரலாறுகளும்
இல்லை. மாறாக முஸ்லிம்களின் வரலாறும், இருப்பும், இனத்துவ மற்றும் மத
அடையாளங்களும், பொருளாதார தளங்களும், கல்வியும், தனித்துவ உரிமைகளும்
இன்னுமொரு இனத்தினால் பாதிப்புக்குள்ளாக்கப்படும் போதும்
அத்துமீறப்படும்போதும் அழிக்கப்படும்போதும் முஸ்லிம் காங்கிரஸ் ஆளும்
தரப்பில் இருந்தாலும் எதிர் தரப்பில் இருந்தாலும், உங்களைப்போன்று
பெட்டிப்பாம்பாக இருக்காமல் அதற்கெதிராக தட்டிக்கேட்பதும் கிளர்ந்தெழுவதும்
பதவிகளைத் துறப்பதும் ஒரு போதும் இனவாதமாகாது என்பதை தாங்கள் கற்றுக்
கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் வேண்டும்.
ஆனால், தனது இனத்தின் மீது இன்னுமொரு இனக் குழுவினர் அத்துமீறும் போது
அதிகாரத்திலிருந்தும் ஒன்றுமே செய்ய முடியாமல் அடங்கிப்போய் இருப்பதானது
கோழைத்தனமான அரசியலாகும். இதற்கு எந்த வகையிலும் நியாயம் கற்பிக்க
முடியாது.
தனது இனம் சார்ந்த நலன்களுக்காக இன்னுமொரு இனத்தின் மீது அத்துமீறி அதன்
சுதந்திரங்களும் உரிமைகளும் பாதிக்கப்படும் விதத்தில் செயற்படுவதுதான்
இனவாதமாகும். இன்று பொதுவான பெயர்களைத் தாங்கி ஆட்சியில் அமர்ந்துள்ள
கட்சிகள் கூட தங்களது இனம் சார்ந்த விடயத்தில் இன்னுமொரு இனத்தின் மீது
அத்துமீறுகின்ற அரசியலை செய்கின்றனர். அல்லது அவ்வாறு அத்துமீறுபவர்களை
சட்டத்தின் முன் கொண்டு வந்து நீதி வழங்காது, மௌனம் காப்பதும் இனவாதம்தான்.
அநியாயத்திற்கு துணைபோவதும் அநியாயமாகும். என்ற அடிப்படையில் நீங்கள்
உங்களது சமூகத்திற்கெதிராக மாபெரும் அநியாயத்தை செய்து வருகின்றீர்கள்
என்பதனை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
மேலும், தலைவர் அஷ்ரஃப் அவர்கள் தான் சார்ந்த மக்களின் நலன்கருதியும்
அக்காலத்தில் இருந்த சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டும் தான் மேற்கொண்ட
அரசியல் நகர்வுகளையும் இனவாதமானது என்ற சொல்ல முடியாது. அவ்வாறு கூற
முனைவது மாபெரும் துரோகமாகும். தங்களைப் போன்றுதான் காலஞ்சென்ற சோம தேரர்
அவர்கள் இனவாதச் சாயம் பூச முனைந்த போது தலைவர் அஷ்ரஃப் அவர்கள் பொதுவான
விவாதம் ஒன்றில் தேரரை அழைத்து தான் ஒரு இனவாதியல்ல என தனது பக்க
நியாயங்களை வெளிப்படையாகவும் சாணக்கியமாகவும் எடுத்து வைத்தமையும் அதனை
தேரர் அவர்கள் ஏற்றுக் கொண்டமையும் நாடறிந்த உண்மையாகும். மாறாக, தலைவர்
அஷ்ரஃப் அவர்கள் தனது அரசியல் ஸ்திரத்தன்மைக்காக பிரதேசவாதம் பேசவோ,
இன்னுமொரு இனத்தின் நியாயமான கோரிக்கைகள் பெரும்பான்மை அரசினால்
மழுங்கடிக்கப்படும் போது அதற்காக உரிமை கோரவோ, பட்டாசு கொழுத்தவோ,
இன்னுமொரு இனத்தினுடைய பிரதேசம் அபிவிருத்தியடையாமல் தடைப்போடவோ காரணமாக
இருந்ததில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
மாறாக, தனது இனத்தின் அரசியல் விடியலுக்காக முஸ்லிம் காங்கிரஸை
பயன்படுத்தி, எழுச்சிப்பாதையை நோக்கி சென்ற அதேவேளையில் ஏனைய
சமூகத்தவர்களையும் அந்தப்பாதையில் இணைப்பதற்காகவும் தேசத்தை விடியலை நோக்கி
நகர்த்தவும்தான் 'நுஆ'வை அமைத்தார் என்ற உண்மையையும் அமைச்சர் அதாவுல்லா
புரிந்து கொள்ளவேண்டும்.
எனவே தயவு செய்து முஸ்லிம் காங்கிரஸின் பாசறையில் அரசியல் கற்றுக்
கொண்டவரும் தனக்கான அரசியல் அடையாளத்தைப் பெற்றவருமான அமைச்சர் அதாவுல்லா,
இனிமேலாவது தான் அரசாங்கத்திடத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக
முஸ்லிம்களைக் காட்டிக்கொடுக்கும் அரசியலை செய்வதை நிறுத்திக் கொள்ள
வேண்டும் எனவும் மௌலவி முபாறக் அப்துல் மஜீதைப் போன்று தனக்கென ஒரு
தனித்துவமான அரசியல் கொள்கை இல்லாததனால் முஸ்லிம் காங்கிரஸையும் அதன்
தற்போதைய தலைமையையும் விமர்சிப்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளதையும்,
அவைகளின் மீது அவதூறுகளையும் பொய்யையும் சுமத்துவதையும் இடைநிறுத்திக்
கொள்ள வேண்டும் என இறுதியாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.
Post a Comment