
முஹம்மது நியாஸ்:
இறைவன் முஸ்லிம்களான எமக்கு வழங்கிய அருட்கொடைகளுள் ரமளான் மாதம் என்பது ஓர் ஒப்பற்ற அருட்கொடையாகும்.
இந்த மாதத்தில்தான் ஒரு முஸ்லிம் தனது வாழ்க்கையினை மிக சீரான வழியில் செப்பனிட்டுக் கொள்ள ஒரு பயிற்சியாக நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது.
அல்லாஹ் தனது திருமறையிலே இவ்வாறு கூறுகிறான்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.(அல்-குர்ஆன் .02:183)
அதிலும் ரமளானின் இறுதிப்பத்து நாட்களும் ஒரு முஃமின் தனது வாழ்க்கையில் இழப்பதற்கு விரும்பாத நாட்களாகும்.
நபிகளார் நடுநிசி நேரத்தில் தானும் எழுந்து தன் குடும்பத்தினையும் எழுப்பி விட்டு தனது கீழ் ஆடையினை இறுக்கிக் கட்டிக் கொண்டு அமல் செய்கின்ற நாட்கள் ரமளானின் இந்த இறுதிப்பத்து நாட்கள்தான் என்பதனை சஹீஹான ஹதீஸ்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் இன்று நமது சமூகத்தினை எடுத்து நோக்கினால்,
ரமளானின் இறுதிப் பத்தென்பது புத்தாடைகள் கொள்வனவு செய்யும் நாட்களாக நமது முஸ்லிம்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
பெருநாளைக்காக புத்தாடைகள் வாங்குவதையோ விற்பதையோ இஸ்லாம் ஒரு போதும் தடை செய்யவில்லை.
மாறாக வலியுறுத்தவே செய்கிறது.
ஆனால் இன்று புத்தாடைகள் என்ற பெயரில் ரமழான் கால வணக்க வழிபாடுகள் பால் படுத்தப்படுவதோடு மாத்திரமல்லாது இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரமும் குழி தோண்டிப் புதைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இஸ்லாம் பெண்களுக்கு முழுமையான ஹிஜாப் ஆடையினை வலியுறுத்துகிறது.ஹிஜாப் என்பது,ஒரு பெண்ணுக்கு முழுமையான கவுரவத்தையும் பாதுகாப்பையும் வழங்கும் ஒரு இஸ்லாமிய ஆடையாகும்.
ஹிஜாபின் பெறுமானத்தை உணர்ந்து கொண்டதால்தான் இன்று மேற்கத்தேய நாடுகளில் கலாச்சார சீர்கேட்டில் விழுந்துவிட்ட பெண்கள் கூட இஸ்லாத்தை நோக்கி வேகநடை போடுவதை காண முடிகிறது.
ஆனால் நமது முஸ்லிம்களோ,தங்களின் ஆடைத்தெரிவுக்கு மாற்றுமத சினிமா நடிகர்களையும் விபச்சாரிகளையுமே மாதிரிகளாகக் கொள்கின்றனர்.
அதன் வெளிப்பாடுதான் இன்று நம் முஸ்லிம் சகோதரிகள் மத்தியில் உலா வருகின்ற கொலவெறி சல்வார்.
உண்மையில் இது முழுக்க முழுக்க மாற்றுமத கூத்தாடிகளாலேயே அறிமுகப்படுத்தப் பட்டது.
அது தெரிந்திருந்தும் கூட நமது முஸ்லிம் சகோதரிகள் அதனை கடைகளுக்குச் சென்று தனக்கு கொலவெறி சல்வார்தான் வேண்டும் என்று அடம்பிடிக்கக் கூடிய அவல நிலை இன்று நம்மத்தியில் காண முடிகிறது.
"விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்!" (அல் குர் ஆன்,57:20 )
பொதுவாக ஒரு பெண்ணின் உடலை முழுக்க மறைத்து ஏற்ற இறக்கங்களை வெளிக்காட்டாமல் அணிகின்ற எந்தவொரு ஆடையும் ஹிஜாப் என்ற வட்டத்திற்குள் வந்து விடுக்ன்றது.
ஆனால் மேற்குறித்த சல்வார் உடையினை பொறுத்த வரையில் இதில் முழுக்க மறைக்கக் கூடிய எந்தவொரு அமைப்பு இல்லை.
அதே நேரத்தில் இறுக்கமான அமைப்பிலும் இந்த ஆடை காணப்படுகின்றது.
எனவே,ஆடை அணிகின்ற விடயத்தில் எமது சகோதரிகள் இஸ்லாமியப் போதனைகளை புறந்தள்ளி சினிமா நடிகர் நடிகைகளின் வழிமுறையினை கைக்கொண்டிருப்பதானது நமது கலாச்சாரத்தினை குழி தோண்டிப்புடைப்பதாகவே அமைந்துள்ளது.
எனவே புனிதமிகு பெருநாள் தினங்களை எவ்வாறு கொண்டாட வேண்டுமென்று நபிகளார் எமக்குப் போதனை செய்தார்களோ அவ்வாறே அதனை கொண்டாடி மகிழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
Post a Comment