(தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் - அஸாத் சாலி)
இந்தப் புனித றமழான் மாதத்தில்
முஸ்லிம்களுடைய அமைதியைக் குலைக்கும் மற்றொரு நிகழ்வு இன்று அதிகாலை
கொழும்பு தெமட்டகொடைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பேஸ்லைன்
நெடுஞ்சாலையில் கொழும்பு மாநகர சபையின் அனுமதியுடன் செயற்பட்டு வரும்
கால்நடைகளை அறுக்கும் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நியாஸ் என்ற
முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான லொறி காவி உடை அணிந்து வந்த காடையர்கள்
சிலரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
கால்நடை அறுப்பு நிலையத்தில்
சட்டபூர்வமாக அறுக்கப்படும் இறைச்சிகளை ஏற்றிச் செல்லும் வர்த்தகத்திற்கு
பயன்படுத்தப்படும் லொறியே இவ்வாறு எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது. அதிகாலை
வேளையில் சிவப்பு நிற டபிள் கெப் வாகனமொன்றில் இங்கு வந்த காவி உடையணிந்த
காடையர்கள் குழு அருகில் உள்ள கடையில் தேநீரும் அருந்திவிட்டு நீண்ட நேரம்
காத்திருந்து இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர். சம்பவம் நடந்த போது இன்னும்
பல லொறிகள் அறுக்கப்பட்ட இறைச்சிகளை ஏற்றிக் கொண்டு வெளியேற தயார்
நிலையில் இங்கு இருந்துள்ளன.
இந்த இடத்தில் சில மாதங்களுக்கு முன்னர்
ஒரு தடவை அதிகாலை வேளையில் காவி உடையினர் தலைமையில் வந்த பெரும் காடையர்
குழு இங்கு கலவரங்களில் ஈடுபட்டது. அப்போது அவர்கள் இந்த இடம், இங்கு
நடைபெறுகின்ற கால்நடை அறுப்புக்கள் என்பன பற்றி கூறிய எல்லா
குற்றச்சாட்டுக்களும் பொய் என நிரூபிக்கப்பட்டது. அவமானத்தோடு அவர்கள்
அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இப்போது ஒரு சிறு குழுவாக வந்து தமது
காடைத்தனத்தை காட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த முதலாவது சம்பவத்தின் பின் இங்கு
அதிகாலை வேளையில் வரும் லொறிகள் அனைத்துக்கும் உரிய பாதுகாப்பினை வழங்க
வேண்டும் என கொழும்பு மாநகர மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டிருந்தார். அந்தப் பொறுப்பை இந்த நிலையத்துக்குப் பொறுப்பான
மாநகர சபையின் பிரதம கால்நடை வைத்தியர் டொக்டர்.தர்மவர்தன ஏற்றிருந்தார்.
இன்று அது மீறப்பட்டுள்ளது. டொக்டர் தர்மவர்தன ஒரு சிங்கள கடும்போக்கு
இயக்கத்தில் முக்கிய பதவி வகித்தவர் என்பதும் எமது கவனத்துக்கு கொண்டு
வரப்பட்டுள்ளது. இவ்வாறான ஒருவரால் எப்படி இந்த நிலையத்தில் பாரபட்சமற்ற
முறையில் சேவையாற்ற முடியும்?
இந்த சம்பவம் நடந்திருப்பது பேஸ்லைன்
பிரதான நெடுஞ்சாலையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சற்று தொலைவில். இதில்
சம்பந்தப்பட்டவர்கள் பயணம் செய்த வாகனம் சிறைச்சாலையைக் கடந்து தான்
சென்றிருக்கின்றது. வேறு வழியில்லை. எனவே அது சிறைச்சாலை பாதுகாப்புக்
கெமராக்களில் நிச்சயம் பதிவாகியிருக்கும் என்று நம்புகின்றேன். எனவே அந்த
வாகனத்தையும் அதில் பயணம் செய்தவர்களையும் கண்டு பிடிப்பது கஷ்டமான
காரியமல்ல. பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டால்
நிச்சயம் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கலாம். பொலிஸார் இந்த விடயத்தில்
உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
நான் ஏற்கனவே ஒரு தடவை குறிப்பிட்டது
போல் மாட்டிறைச்சி அல்லது ஆட்டிறைச்சி வர்த்தகத்தில் ஈடுபடுகின்றவர்கள்
முழுக்க முழுக்க முஸ்லிம்கள். இந்த வர்த்தகத்தில் தங்களது சமூகத்தவர்களால்
பங்கேற்க முடியாமல் இருக்கின்றதே என்ற ஆதங்கம் தான் மாடுகளை அறுப்பதற்கு
எதிராகக் குரல் கொடுக்க முக்கிய காரணம். மாறாக விலங்குகள்; மீது
இவர்களுக்குள்ள கருணை அல்ல இதற்கு காரணம். அப்படியானால் பன்றியும் ஒரு
உயிரினம் தானே அதை மட்டும் அறுத்து பள்ளிக்குள் கொண்டு வந்து வீசலாம் ஆனால்
மற்ற சமூகம் தனக்கு அனுமதிக்கப்பட்ட உணவுத் தேவைக்காக ஆடுகளையும்
மாடுகளையும் அறுக்கக் கூடாது என்று கூறுவதில் என்ன நியாயம் உள்ளது.
தெமட்டகொடையில் இருக்கின்ற மாடுகள்
அறுக்கும் நிலையத்தை குறிவைத்து காய் நகர்த்தும் வேலைகள் தற்போது
தொடங்கப்பட்டுள்ளதாகவே சந்தேகிக்கத் தோன்றுகின்றது. இதற்கு காரணம் அது
அமைந்துள்ள காணியின் பெறுமதி. இந்த அரசின் அமைச்சர்களையும் உயர் மட்ட
அதிகாரிகளையும் பீடித்துள்ள பிரதானமான நோய் காணிகளை சுற்றி வளைத்து
கைக்குள் போடுவதாகும். அந்த வகையில் இந்தக் காணியையும் சுற்றி வளைக்கும்
எண்ணம் யாருக்கோ வந்துள்ளது. அதுதான் ஆரம்ப கட்டமாக காவி உடை தரித்த
காடையர்கள் ஏவி விடப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல வெளிநாட்டுக்
கம்பனியொன்றின் மூலம் இறைச்சியை இறக்குமதி செய்வதற்கான சில முயற்சிகளும்
இடம்பெற்று பயணம் செய்தவர்களையும் கண்டு பிடிப்பது கஷ்டமான காரியமல்ல.
பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டால் நிச்சயம்
குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கலாம். பொலிஸார் இந்த விடயத்தில் உடனடி
நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
உள்நாட்டில் இறைச்சிக்காக கால்நடைகளை
அறுப்பதை தடுத்து நிறுத்தி வெளிநாட்டிலிருந்து இறைச்சியை இறக்குமதி
செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட கம்பனியிலிருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுக்
கொள்வதற்கான ஒரு இரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த காவி உடை
காடையர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
இந்த றமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு
எதிரான கடைசி நடவடிக்கையாகவும், இந்த ஆட்சியின் கீழ் முஸ்லிம்களுக்கு
எதிரான கடைசி நடவடிக்கையாகவும் இது இருக்கட்டும். இல்லையேல் முஸ்லிம்களை
நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராடுமாறு அழைப்பு விடுக்கப்படும்.
மகிந்த ராஜபக்ஷ அரசின் கீழ் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும்
இன்னல்களுக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். முஸ்லிம்கள்
இப்போது பொறுமையின் எல்லைக்கு வந்துள்ளனர். அரசாங்கத்தின் ஆதரவோடு
செயற்படும் அடிப்படைவாத, இனவாத, காடையர் கும்பல்களை அதன் அனுசரணையாளர்கள்
கட்டுப்படுத்தாவிட்டால் முஸ்லிம்களும் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்குவதை
தடுக்க முடியாமல் போய்விடும். இலங்கையில் எந்த மூலையிலாவது
முஸ்லிம்களுக்கு எதிரான இன்னொரு சம்பவம் நடந்தால் முஸ்லிம்களை வீதிகளில்
இறங்குமாறு நானே அழைப்பு விடுப்பதோடு அந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கவும்
நான் தயாராக உள்ளேன்.

Post a Comment