முஸ்லிம் பெண்கள் அணியும் நிக்காப் கட்டாயமாக நீக்கப்பட வேண்டும் என
பொதுபலசேனா கூறியிருந்தது. அது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே முஜிபூர்
ரஹ்மான் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
.
அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு ஆபாசமாக வீதிகளில் திரியும் பெண்களுடைய
அங்கங்களை மூடுவதற்கு பதிலாக முஸ்லிம் பெண்களுடைய ஆடைகளை களைய வேண்டும்
என்ற பொதுபலசேனாவின் கருத்தானது எந்த வகையிலும் நியாயமில்லை.
.
சிறுவர் துஷ்பிரயோகங்கள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மோசமாக
அதிகரித்து வருவதற்கும் பாரிய சமூக சீரழிவுகளுக்கும் ஆபாசமாக அணியும்
ஆடைகளும் ஒரு காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் நிக்காப் போன்ற
ஆடைகள் அப்படியானதல்ல. அதனால் எவ்வித சமூக சீரழிவுகளும் கிடையாது.
.
மாளிகாவத்தையில் நடந்ததை போன்ற ஒரு சில சம்பவங்களை வைத்துக்கொண்டு
நிக்காப் அணிவதை தடை செய்ய வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
காவியுடையுடன் எத்தனை பேர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதற்காக
அந்த உடையை அணியக்கூடாது என்று சொல்ல முடியுமா? அது போன்று தான் இதுவும்.
.
சிறுபான்மை சமூகத்தினரின் கலாசார பாரம்பரியங்களை திட்டமிட்டு
சீரழிக்கும் கைங்கரியங்கள் மிகவும் சூட்சுமமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் வெளிப்பாடே இவ்வாறான சம்பவங்கள். எனவே இதனை வெறுமனே முஸ்லிம்களின்
பிரச்சினையாக மாத்திரம் பார்க்கக்கூடாது. ஒட்டுமொத்த சிறுபான்மை
சமூகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளில் ஒன்றாகவே கருத
வேண்டும்.
.
தமிழ், முஸ்லிம்களுக்கென தனியான கலாசார பாரம்பரியங்கள் இருக்கின்றன.
அவற்றை பின்பற்றுவது அவர்களுக்குள்ள உரிமையாகும். அது எமது நாட்டின்
அரசியல் அமைப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது முஸ்லிம் பெண்கள் அணியும்
நிக்காப்பை தடை செய்யுமாறு கூறும் அதிகாரம் பொதுபலசேனாவுக்கு கிடையாது.
.
நாட்டில் நீண்ட காலமாக நிலவிவந்த உள்நாட்டு யுத்தத்தால் நாம்
எதிர்நோக்கிய சவால்களையும் பிரச்சினைகளையும் கொஞ்சம் திரும்பிப்பார்க்க
வேண்டும். இன்று அந்த நிலைமை இல்லாதுள்ளது. எனவே இனங்களுக்கிடையே
சமூகங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கே முயற்சிக்க வேண்டும். மாறாக
பிரச்சினைகளை தோற்றுவிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment