
சுதந்திர இலங்கையில் நாட்டின் ஒரு பகுதியில் வாழும் முஸ்லிம்களை அவர்களது
புனித கட்டாயக் கடமைகளில் ஒன்றான வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொழ விடாமல்
அச்சுறுத்தி தடுக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகுமென்பதே எனது
அபிப்பிராயமாகும். (முதலாவது சம்பவம் தம்புள்ளை பள்ளிவாசலில் இடம்பெற்றது)
அந்த வகையில் மஹியங்கனை பள்ளிவாசல் தாக்குதலின் பெருமை எப்படி ஜனாதிபதியை
சாரும் என்று குறிப்பிட்டேனோ அதேபோல் இந்தப் பெருமையும் அவரைத்தான் சாரும்.
காரணம் முஸ்லிம்களை வெள்ளிக்கழமை ஜும்ஆ தொழுகையில் ஈடுபட விடாமல்
அச்சுறுத்தி தடுத்த மற்றொரு சம்பவமும் தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சியின்
கீழ் தான் இடம்பெற்றுள்ளது. முஸ்லிம்களை வேதனைப்படுத்தி சண்டித்தனத்தை
பிரயோகித்து அவர்களது கட்டாய மார்க்கக் கடமைகளைக் கூட நிறைவேற்றவிடாமல்
தடுத்து ஜனாதிபதியும் அவரது இளைய சகோதரரும் தமது மார்புகளில் பதக்கங்களை
அடுக்கடுக்காகக் குத்திக் கொள்வது கண்டு முஸ்லிம் சமூகம் வேதனை
அடைந்துள்ளது.
ஊவா மாகாண சபை அமைச்சர் அநுர விதான கமகே இந்த பள்ளிவாசலை நிறுவவும் அதில்
ஐவேளை தொழுகை பின்னர் ஜும்ஆ தொழுகை என்பனவற்றை தொடங்கவும் ஆதரவும்
ஒத்துழைப்பும் வழங்கியவர்.அது தேர்தல் காலமாக இருந்த படியால் அவர் முஸ்லிம்
மக்களின் வாக்குகளைக் குறிவைத்துதான் இந்த ஒத்துழைப்புக்களை
வழங்கியுள்ளார் என்பது தற்போது புலனாகின்றது. இவரின் போலியான ஆதரவை நம்பி
முஸ்லிம்கள் கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் இவருக்கு தமது வாக்குகளை
அளித்து அவரின் வெற்றிக்கு வழிவகுத்தனர். ஆனால் இன்று முஸ்லிம்கள் அநுர
விதான கமகேயால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.அவரேதான் பள்ளிவாசல் தர்மகர்த்தா
மற்றும் அவரின் மகன் ஆகியோரை அச்சுறுத்தி நேற்றைய ஜும்ஆ தொழுகைக்கும் தடை
விதித்துள்ளார்.
மஹியங்கனை பள்ளிவாசல் ஏற்கனவே தாக்கப்பட்டமைக்கும் அதில் பன்றியின் இறைச்சி
மற்றும் இரத்தம் என்பன வீசப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டமைக்கும்
பின்னணியிலும் இவர்தான் செயற்பட்டுள்ளாரா என்ற சந்தேகமும் முஸ்லிம்கள்
மனதில் இப்போது தோன்றியுள்ளது.
புனித றமழான் மாதம் வழமையான நாற்களைவிட முஸ்லிம்கள் அதிகம் மார்க்கக்
கடமைகளில் ஈடுபடும் காலமாகும்.இவ்வாறான ஒரு காலப்பகுதியில் ஏனைய காலங்களில்
கூட கட்டாயமாக்கப்பட்டுள்ள அவர்களின் கடமையொன்றை செய்யவிடாமல் தடுப்பது
முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் பாதிக்கின்ற ஒரு விடயமாகும்.
பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் இந்தப் புனித காலத்தில் அரசாங்கத்தை
சபிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் மீதான இந்த அநியாயம், அடக்குமுறை, காடைத்தனம்,
சண்டித்தனம்,என்பனவற்றுக்கு முடிவே கிடையாதா? முஸ்லிம்களுக்கு இந்த
நாட்டில் அவர்களின் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு கூட உரிமையும்
சுதந்திரமும் கிடையாதா? இவ்வளவு நடந்தும் முஸ்லிம் அமைச்சர்கள் ஏன்
இன்னமும் ஒரு வார்த்தை கூட வாய் திறக்காமல் அரசுக்கு வக்காளத்து வாங்கிக்
கொண்டிருக்கின்றனர். பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதோடும், ஈரானின் 'பிரஸ்
டிவி' போன்ற வெளிநாட்டு தொலைக்காட்சிகளுக்கு அரசைக் கண்டித்து பேட்டி
கொடுப்பதோடும் தனது கடமையும் பொறுப்பும் தீர்ந்துவிட்டதாக முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருதுகின்றாரா? அவர்தான் இந்த
நாட்டின் நீதி அமைச்சர் என்பதை அவர் மறந்து விடக் கூடாது. ஒரு முஸ்லிம்
நீதி அமைச்சரின் கீழேயே முஸ்லிம் சமூகத்துக்கான நீதி கிடைக்காவிட்டால்
இதற்கு மேலும் அந்தக் கதிரையில் அமர்ந்திருப்பதில் என்ன பயன்? இதேபோல் தான்
ஏனைய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் நிலையும்.சமூகம் இவர்களை
சபிக்கின்றது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இந்தப் புனித
மாதத்தில் முஸ்லிம்களின் சாபம் இவர்களையும் இவர்களின் அரசியல்
தலைவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் கூட விட்டுவைக்காது என்பதை
நினைவூட்டிக் கொள்ள விரும்புகின்றேன்.
முஸ்லிம்களுக்கு மீண்டும் ஒரு இக்கட்டான சோதனை காலம் தொடங்கியுள்ளதாகவே
நான் நினைக்கின்றேன். எனவே முஸ்லிம்கள் மீண்டும் இந்தப் புனித மாதத்தில்
ஐவேளை தொழுகையில் இரு கரம் ஏந்தி குனூத் ஓதி துஆ கேட்க வேண்டும். அகில
இலங்கை ஜம்மிய்யத்துல உலமா இது பற்றி அவசரமாக ஆராய்ந்து முஸ்லிம்களுக்கு
உரிய வழிகாட்டலை தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
அஸாத் சாலி
தலைவர்
தேசிய ஐக்கிய முன்னணி
+ comments + 1 comments
உலமா சபையா எல்லாம் தீர்ந்துவிட்டது இனி குனூத் ஓதத்தேவையில்லை என்று சொன்னார்களே
முஸ்லிம் தலைவர்களா? அப்படி முஸ்லீம்களுக்கு யார் இருக்கிறார்கள் இருந்தால் பேசமாட்டார்களா
ஹஸ்பியல்லாஹ்
Post a Comment