
பணத்துக்காகவும் பதவிகளுக்காகவும் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து அரசாங்கத்தின் பக்கம் தாவுகின்றவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் அவ்வாறு வெளியேறுகின்றவர்களால் ஒரு போதும் எமது கட்சியை அழிக்க முடியாது என கட்சியின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டார். அது தொடர்பாக கருத்து கேட்ட போதே நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஐக்கிய தேசிய கட்சியினூடாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் மாகாண மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்படுகின்றவர்களில் சிலர் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக அரசாங்கத்தின் பக்கம் தாவுகின்றனர். அவ்வாறு தாவுகின்ற போது அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களும் அரசாங்கத்தின் பக்கம் தாவுவதாக அர்த்தமில்லை.
பொது மக்களின் ஆதரவு தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கிறது. ஆனால் இந்த அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளை புரிந்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக தமது கட்சியின் உறுப்பினர்களை தமது பக்கம் அழைத்து பதவிகளை வழங்குகிறது.
ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டி நாடாளுமன்றத்துக்கும் மாகாண சபைகளுக்கும் தெரிவாகி பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்கள் அடுத்து வரும் தேர்தல்களில் பெற்றுக்கொள்ளும் வாக்குகளை ஒப்பிட்டு பாருங்கள் அப்போது புரியும். அவர்களை மக்கள் ஆதரிக்கின்றார்களா? அல்லது நிராகரிக்கின்றார்களா என்று. எனவே கட்சி மாறுகின்றவர்களுடன் கட்சியின் ஆதரவாளர்களும் மாறுவதில்லை.
மிகவும் இக்கட்டான நிலையில் நாம் கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
அதனை குழப்பி அதிலே ஆதாயம் தேடும் சூழ்ச்சிகளை அரசாங்கம் நாசூக்காக செய்து வருகிறது. இந்த சூழ்ச்சிகளால் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது.
எதிர்வரும் செப்டெம்பரில் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்ற சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றோம். வட மாகாணத்துக்கான வேட்பாளர் தெரிவு தற்போது நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது. ஆனால் மத்திய மற்றும் வடமேல் மாகாணத்துக்கான வேட்பாளர் தெரிவு இன்னும் முழுமை பெறவில்லை. இன்னும் ஒரு சில தினங்களில் அவையும் நிறைவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment