
அஸ்ஸலாமு அலைக்கும்!
நாட்டில் 17 பள்ளிவாசல்கள் மதவெறிபிடித்த காடையர்களால்
சேதமாக்கப்பட்டுள்ளன.ஆனால் அரசாங்கம் எதுவித நடவடிக்கைகளையும் இதுவரை
எடுக்காதது வேதனையளிப்பதாக நீங்கள் கூறிய செய்தியைப்பார்த்து மிகவும்
ஏமாற்றமடைந்தோம்.
இன்று முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படுகின்ற வெறுப்புப்
பிரச்சாரங்களுக்கும் அதன் தொடரான நமது மத, கலாச்சார பொருளாதார மற்றும்
அரசியல் கட்டமைப்புக்கள் மீதான வன்முறைகளுக்கும் பௌத்த பேரினவாதம் அல்லது
பொதுபலசேனா அல்லது மதவெறிபிடித்த காடையர்களே காரணம் என்று திரும்பத்திரும்ப
கூறுவதன்மூலம் இவை அத்தனைக்கும் மூலகாரணமான இந்த அரசாங்கத்தை பாதுகாக்க
அல்லது தப்பவைக்க நமது அரசியல் தலைவர்கள் முற்படுவது முஸ்லிம்கள்
மத்தியில் பலத்த சந்தேகங்களையும் எதிர்காலம் குறித்த பெரும்
அச்சவுணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே
நேரடியாகச் சென்று பள்ளிவாசலை மூடுமாறு அச்சுறுத்தல் விடுத்ததன் பின்னரும்
நமது தலைவர்கள் இந்த அரசாங்கத்துக்கு முக்காடுபோட முற்படுவதன் மர்மம் என்ன?
17 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டும்,பல பள்ளிவாசல்கள் இழுத்து
மூடப்பட்டும்,இன்னும் முஸ்லிம்களின் மார்க்க அனுஷ்டானங்களுக்கு
பகிரங்கமாகத்தடை விதிக்கப்பட்டும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்காத
இந்த அரசாங்கத்துக்கெதிராக அதற்கு முண்டுகொடுக்கின்ற பங்காளிக்கட்சி என்ற
வகையில் நமது கட்சி இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? (வெறும்
உப்புச்சப்பற்ற அறிக்கைகளைத் தவிர)
எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட நமது கட்சியினால் குறைந்தது
பாராளுமன்றத்தில் ஒரு கவனயீர்ப்புப் பிரேரணையையாவது இதுவரைக்கும் கொண்டுவர
முடியாமல் போனது ஏன்? இதனைக் கூடச்செய்ய முடியாது என்றால் நாங்கள்
மேடைகளில் தொண்டை கிழியப்பேசுகின்ற முஸ்லிம் சமூகத்தின்
உரிமைகள்,பாதுகாப்பு,போராட்டம் இவைகளின் அர்த்தம்தான் என்ன?
இந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கும் பங்காளிகளாக (?) நீங்கள்
இருக்கும் வரைக்கும் பௌத்த பயங்கரவாதத்தின் பின்புலத்துடன் இந்த அரசாங்கம்
முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளும் அத்தனை அநியாயங்களுக்கும் நீங்களும்
பகிரங்கமாக துணைபோகின்ற பங்காளிகள் என்ற முஸ்லிம் சமூகத்தின் நியாயமான
குற்றச்சாட்டை நீங்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
அரசாங்கத்துக்குள் உங்களை வைத்துக்கொண்டே முஸ்லிம்களுக்கெதிரான
வன்முறைகளை மிகவும் வேகமாகவும் லாவகமாகவும் அரங்கேற்றி வருகின்ற இந்த
அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலில் முஸ்லிம் காங்கிரஸை அழித்து
விடுவதும் அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் அசியல் சக்தியை
பலவீனப்படுத்துவதும் ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள். எதுவுமே செய்ய
இயலாதவர்களாக உங்களை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் காட்டுவதன் மூலமாக
முஸ்லிம் காங்கிரஸின் மீது முஸ்லிம் மக்களை நம்பிக்கையிழக்கச்செய்து
கட்சியை முஸ்லிம்கள் மத்தியிலிருந்து அழித்து விடுகின்ற இந்த அரசின்
நயவஞ்சகத்திட்டத்திற்கும் நீங்கள் தெரிந்து கொண்டே
துணைபோய்க்கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
எனவே முஸ்லிம் சமூகத்தின் மொத்த இருப்பையும் இலக்கு வைத்து
திட்டமிட்டமுறையில் இந்த அரசு மேற்கொண்டுவரும் அநியாயங்களை இந்த
அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்துகொண்டு உங்களால் தடுத்து நிறுத்த
முடியவில்லையென்றால் தயவு செய்து அந்த அநியாயங்களுக்குத்துணை போகாமல்
உடனடியாக இந்த அரசாங்கத்துக்கு வழங்குகின்ற ஆதரவை விலக்கிக்கொண்டு வெளியேறி
மாற்று நடவடிக்கைகளைப்பற்றி சிந்திக்குமாறு கட்சியின் நலனிலும்,
சமூகத்தின் நலனிலும் கொண்ட கரிசனையின் பேரால் இந்தப்புனித ரமழான் மாதத்தில்
வேண்டுகோள் விடுக்கிறேம்.”
Post a Comment