கிழக்கு
மாகாண சபையின் ஜூலை மாதத்திற்கான அமர்வு எதிர்வரும் 23ஆம் திகதி
கூடும்போது 13ஆவது அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தம் செய்யும்
நடவடிக்கைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரேரணையொன்றை கொண்டு
வரவுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக்
கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதற்கு முதல் நாள் (சபை அமர்வு)
கூடி இது குறித்து முடிவெடுப்பார்கள் என்று மாகாண சபையின் எதிர்க்
கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை குழுவின்
தலைவருமான சி. தண்டாயுதபாணி தெரிவித்தார்.
மேலும், 13ஆவது அரசியல் அமைப்புச்
சட்டத்தை திருத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக கொண்டு வர இருக்கும்
பிரேரணைக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கிழக்கு மாகாண
சபையிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வாக்களிப்பார்கள் என
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிர்பார்க்கின்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, 13ஆவது திருத்தத்துக்கு எதிராக
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரேரணையொன்றினை கொண்டு வரவுள்ளது.
இதுகுறித்த பிரேரணையை விரைவில் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கவுள்ளதாக
மு.கா. பொதுச் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்தார்.
13ஆவது அரசியலமைப்பில் திருத்தங்களை
மேற்கொள்வது சிறுபான்மையினரின் நலன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவுள்ளதைக்
கருத்திற் கொண்டு மு.கா. இப்பிரேரணையை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் மேலும்
தெரிவித்தார்.
எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை
இடம்பெற்றுள்ள அதியுயர்பீடக் கூட்டத்தின்போது இது குறித்து, இறுதித்
தீர்மானம் எட்டப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
மு.கா.வைக் கொண்டு 13ஆவது திருத்தத்துக்கு
எதிரான பிரேரணையில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுமென்றும்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐ.தே.க. ஆகிய கட்சிகள் இப்பிரேரணைக்கு ஆதரவாக
வாக்களிக்குமென்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
Post a Comment