சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக அண்மைக்காலமாக இனவாத விஷத்தைக் கக்கி
வரும் பொதுபல சேனாவிற்கு ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட ராஜபக்ஷ
குடும்பத்தினரின் ஆசீர்வாதம் இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்தின
பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். பௌத்த மதக் கோட்பாட்டின் படி
வணங்கத்தக்கவயாகவும், வழிகாட்டியாக கொள்ளத்தக்கவையாகவும் இருப்பவை,
புத்தர், அவரது போதனைகள் அடங்கிய தம்மபத, இவற்றை மக்களுக்கு எடுத்துச்
சொல்லும் பிக்குமார் ஆகிய மூன்று விடயங்களாகும்.
இவற்றை மும்மணிகள் (துன்ருவன்) என்று பௌத்த மக்கள் அழைப்பர். ஒருவரை
ஆசீர்வதிக்கும் போது மும்மணிகளின் ஆசிகிட்டுவதாக (துன்ருவன் சரணய்) என்று
ஆசீர்வதிப்பது வழக்கம். ஆனால் பொதுபல சேனா இந்த மும்மணிகளுக்குப் பதில்
பஞ்சமணிகளைப் பின்பற்றுவதாகவும், அந்த பஞ்ச மணிகள் என்பது மஹிந்த ராஜபக்ஷ,
சமல் , நாமல் மற்றும் கோத்தபாய, பசில் ஆகியோரே ஆகும் என்று அமைச்சர் ராஜித
சேனாரத்தின தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் பெதுபலசோனவிற்கு அரச ஆதரவு இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த
உள்ளிட்ட அரச தரப்பினர் மறுத்து வந்த போதிலும், அமைச்சர் ராஜித சேனாரத்தின
தெரிவித்துள்ள இந்தக் கூற்றின் மூலம் உண்மை வெளிப்பட்டுள்ளது.
காலி குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்தின மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார். அங்கு உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்தின,
பௌத்த மதம் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது. பௌத்த தேரர்கள் என்போர்
சாந்த சொரூபிகளாக இருக்க வேண்டும். ஆனால் இன்று ஒருசில பௌத்த தேரர்கள்
பேய்கள், அரக்கர்களைப் போன்று முரட்டுத்தனமாக நடந்து கொள்ள முனைகின்றனர்.
மேலும் இவர்கள் பௌத்த மத கோட்பாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து
வருகின்றனர். அதைச் செய், இதைச் செய் என்று அடிக்கடி ஜனாதிபதியிடம்
ஓடிவந்து வேண்டுகோள் வைக்கின்றனர். பௌத்த தேரர்கள் யாரிடமும் மண்டியிடக்
கூடாது. ஆனால் இவர்கள் ஜனாதிபதி உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினரிடம்
மண்டியிட்டுள்ளனர். போகிற போக்கைப் பார்த்தால் புத்தங் சரணங் கச்சாமி என்று
சொல்வதற்குப் பதில் மஹிந்த சரணங் கச்சாமி, நாமல் சரணங் கச்சாமி, சமல்
சரணங் கச்சாமி என்று சொல்லவும் செய்வார்கள் போலிருக்கிறது. அதன் பின்
கோத்தபாய சரணங் கச்சாமி, பசில் சரணங் கச்சாமி என்று சொல்வதற்கு அதிக நேரம்
எடுக்காது.
இப்படியானவர்கள் நான் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளில் அவர்களுக்கு
ஆதரவாக செயற்படுவதால் எனது அரசியல் வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்
என்று சூளுரைத்துள்ளனர்.
இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை. அமைச்சர் பதவி என்பது ஒரு பொறுப்பு
தானே தவிர அலங்காரம் கிடையாது. அமைச்சர் பதவி இல்லாமல் போனாலும் மக்கள்
சேவையில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன் என்றும் அமைச்சர் ராஜித
சேனாரத்தின மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment