சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொது பல சேனா கல்முனையில் ஊடுருவ
மேற்கொள்ளும் முயற்சியானது இப்பிரதேசத்திலுள்ள சிங்கள மக்களின் ஆதரவோடு
அல்ல என்பதும் இது இங்குள்ள தமிழ் சகோதரர்களிடையே இருக்கும் ஒரு சில சுய
நலமிக்கவர்களின் நடவடிக்கையாகும் என்பதும் கசப்பான ஒரு உண்மையாகும்.
கல்முனையில் தமிழர்கள் சிங்களவர்கள் பறங்கியர்கள் முஸ்லிம்கள் ஆகிய
இனத்தவர்கள் பரஸ்பரம் ஒற்றுமையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு
.ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும்
பொது பல சேனாவின் துணை கொண்டு குழப்பி இதில் இலாபமடையலாம் எனத் திட்டமிட்டு
செயலாற்றும் தமிழ் சகோதரர்களிடையே உள்ள ஒரு சிறு குழுவினரின் வஞ்சகமான
செயல்பாட்டு நடவடிக்கையே இதுவாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கல்முனையில் ஒரு குழப்பத்தை விரும்பி அதன் மூலம் இலாபத்தை அடைய
விரும்புபவர்கள் இங்கு பொது பல சேனாவின் காரியாலயத்தைத் திறப்பதற்கு
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள கடை அறையொன்றை
வழங்க முன்வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது மாத்திரமல்லாமல் இவர்கள் கல்முனை நகரில் பொலிஸ் நிலையத்திற்கு
முன்பாக உள்ள நாற் சந்தியில் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கான எண்ணம் ஒன்றை
கல்முனை சுபத்ராராம விகாரையின் விகாராதிபதியிடம் முன் வைத்ததாகவும்
விகாராதிபதி இக்காரியம் உசிதமானதல்லவென்றும் அந்த எண்ணத்தைக் கைவிடுவோம்
என்று அவர்களுக்கு கூறியதாகவும் தெரியவருகின்றது.
இது இப்படியிருக்க கல்முனையில் பொது பல சேனா பொதுக் கூட்டம் நடத்துவது
தொடர்பாக கல்முனை சுபத்திராராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துகல
சங்கரத்தின தேரரிடம் வெளி ஊரிலிருந்து வருகை தந்த இரண்டு சிங்கள சகோதரர்கள்
இங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அந்த
இடத்திலிருந்த கல்முனைக்கு ஆரம்ப காலத்தில் வருகை தந்து தற்போது இங்கு
வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிங்கள சகோதரர் இடையே குறுக்கிட்டு
“கல்முனையைப் பொறுத்த வரையில் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கல்முனையில் முஸ்லிம்கள் எந்தப் பிரச்சிணைகளும் இன்றி அமைதியாகவேதான்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழர்களில் ஒரு சில குழுவினர் தமது காணி
நிலங்கள் வளவுகள் மற்றும் நகரத்திலுள்ள கடைகள் பொதுச் சந்தையிலுள்ள கடைகள்
என்பன முஸ்லிம்களால் பலாத்காரமாக பறித்து எடுக்கப்பட்டிருப்பதாகவும்
தமிழர்களுக்கு அநியாயம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி அதற்கு நிவாரணம் பெற
விடுதலைப் புலிகளின் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால்
அது தோல்வியில் முடிவடைந்ததனால் தமது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு
தற்போது பொது பல சேனாவை நாடிச் செல்கின்றனர் என்ற உண்மையை நாம் புரிந்து
கொள்ள வேண்டும்.”என்று அவர்களுக்கு எடுத்துக் கூறியதும் நம்மகமாக அறிய
முடிகின்றது.
கல்முனைப் பிரதேசத்தில் தமிழர்களின் காணி வளவுகள் மற்றும் சொத்துக்களை
முஸ்லிம்கள் ஒரு போதும் பலாத்காரமாக பறித்து எடுக்கவில்லை என்பதற்கு
ஆதாரமாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த உறுதி எழுதும் கந்தையா நொத்தார்சி ஐயா
அவர்களே இருந்தார்கள். என்பது இப்பிரதேச தமிழ் முஸ்லிம் மக்களுக்கு நன்கு
தெரியும்.கந்தையா நொத்தார்சி ஐயா அவர்கள் தனது கறுப்பு நிறத்திலான மோட்டார்
வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் உறுதி எழுதும் பொருட்டு
முஸ்லிம் ஊர்களுக்கு வருகை தந்து கடையில் அமர்ந்து இருப்பதை எம்மில் வயது
கூடியவர்கள் கண்டிருப்பார்கள்.
இது மாத்திரமல்லாமல் 1988 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கல்முனைப்
பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் இனக் கலவரங்கள் அடிக்கடி ஏற்பட்டுக்
கொண்டிருந்தன. பிரதேசத்தில் மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக
கல்முனை பொலிஸ் நிலையத்தில் இரு சமூகங்களையும் சேர்ந்த அரசியல்வாதிகள்
சமூகப் பெரியார்கள் ஒன்று கூடி சமாதானக் கூட்டங்களை அடிக்கடி நடத்த
வேண்டியிருந்தது. இக் கூட்டங்களில் மறைந்த முன்னாள் அம்பாறை மாவட்ட
அபிவிருத்தி சபை உறுப்பினர் வேல்முருகு ஐயா ஏகாம்பரம் ஐயா என பல தமிழ்
சமூகத் தலைவர்கள் வருகை தந்திருப்பார்கள். இப்படியாக பொலிஸ் நிலையத்தில்
நடைபெற்ற ஒரு சமாதானக் கூட்டத்தில் உறுதி எழுதும் கந்தையா நொத்தார்சி ஐயா
அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.இக்கூட்டத்திலிருந்த முன்னாள் வர்த்தக
வாணிபத்துறை அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் கந்தையா நொத்தார்சி
ஐயாவை பார்த்து நீங்கள்தான் இப்பிரதேசத்தில் கூடுதலாக வளவுகளை
வாங்குவதற்கும் விற்பதற்கும் உறுதி எழுதுகின்றவர் கல்முனைப் பிரதேசத்தில்
முஸ்லிம்கள் யாராவது தமிழர்களின் வளவுகளை பலாத்காரமாகப் பறித்து எடுத்து
இருக்கின்றார்களா? இல்லை வளவுகளின் பெறுமதிக்கு பணம் கொடுக்கப்பட்டு இரு
பக்கத்தாரின் சம்மதங்களோடு வாங்கப்பட்டும் விற்கப்பட்டும் இருக்கிறதா என
பகிரங்கமாக இவ்விடத்தில் நீங்கள்தான் கூறவேண்டும் எனக் கேட்டபோது நான்
எழுதியுள்ள எல்லா உறுதிகளும் வளவின் பெறுமதிக்குப் பணம் பெறப்பட்டே
விற்கப்பட்டன. வாங்கியவர்களும் பெறுமதிக்கு பணம் கொடுத்தே
வாங்கியுள்ளார்கள். எனப் பகிரங்கமாகக் கூறியதை கூட்டத்தில் இருந்தவர்கள்
இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள்.
தமிழர்களிடையேயும் முஸ்லிம்களிடையேயும் பிரச்சிணைகள் இருப்பின் அதனை
இரு சமூகத்தவர்களும் ஒன்று கூடி பேசித் தீர்க்க வேண்டுமே தவிர இது போன்ற
சமூகங்களைக் குழப்பிவிடும் காரியங்களில் ஈடுபடக் கூடாது என்பதே இப்பிரதேச
மக்களின் விருப்பமாகும்.

Post a Comment