கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஹாபிஸ் நஸீர் அஹமட் 100 மில்லியன் ரூபா செலவு செய்தே வெற்றியீட்டினார். அது அவரது வாப்பாவின் பணமல்ல, அது மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடைய பணமாகும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான ஆஸாத் சாலி தெரிவித்தார்.
“காத்தான்குடியில் ஒரு நரி, அக்கரைப்பற்றில் ஒரு கெரியன். இவர்கள் இருவருக்கும் முஸ்லிம் சமூகம் பற்றி எந்த அக்கறையும் கிடையாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருது சீபிரீஸ் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (28) இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் அம்பாறை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;
“தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதலை கண்டித்து ஜனாதிபதியிடம் எனது ஆட்சேபனையை தெரிவித்து விட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய நான் முஸ்லிம் காங்கிரசையும் வெளியேறுமாறு ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்தினே.
அதற்கு அவர் முன்வரா விட்டால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லீம்களை ஒற்றுமைப்படுத்தும் நோக்கில் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து சுயேற்சை அணியொன்றை களமிறக்க தீர்மானித்தேன். அவ்வேளை மு.கா. அரசுக் கூட்டில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட முன்வந்தது. அதில் மு.கா. சார்பில் போட்டியிடுமாறு ரவூப் ஹக்கீம் என்னை அழைத்தார். அதற்கு உடன்பட்ட நான் அம்பாறை மாவட்டத்தில் அல்லது திருமலையில் இடம் தருமாறு கேட்டேன்.
ஆனால் அதற்கு உடன்படாத ஹக்கீம் நரியின் இடத்தில் என்னைக் களமிறக்கினார். மு.காங்கிரஸ் செல்வாக்கு இழந்து ஹக்கீம் கால் பதிக்க முடியாதிருந்த காத்தான்குடியில் என்னை போட்டியிட வைத்தார். நான் துணிச்சலுடன் முகம் கொடுத்து வெறும் 5 நாட்கள் மட்டும் பிரச்சார வேலைகளைச் செய்து 7000 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு வந்தேன்.
அங்கு வெற்றி பெற்ற ஹாபிஸ் நஸீர் அஹமட் 100 மில்லியன் ரூபா செலவு செய்தே வெற்றியீட்டினார். அது அவரது வாப்பாவின் பணமல்ல, அது மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடைய பணமாகும். நான் மக்கள் மனதில் இடம்பிடித்தேன். நரியின் எதிர்ப்பால் காத்தான்குடிக்கு வர முடியாதிருந்த ரவூப் ஹக்கீமும் எனது பக்க பலத்தால் அங்கு வர முடிந்தது.
அத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மு.கா.வுக்கு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வாக்களித்தனர். ஹக்கீம் அப்படித்தான் மேடைகளில் முழங்கினார். பள்ளிவாசல்களை உடைக்கும் அரசாங்கத்திற்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை காண்டா மிருகம் என்றார். இப்படியெல்லாம் சொல்லி நாமெல்லாம் சேர்ந்து பெற்றுக் கொடுத்த வெற்றியை எடுத்துக் கொண்டு ஹக்கீம் மீண்டும் அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டார்.
அது மட்டுமா? மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறிக்கும் திவிநெகும் சட்ட மூலத்தை மு.கா. குழுத் தலைவர் ஜமீல் மூலம் ஆதரிக்க செய்தார். பின்னர் பாராளுமன்றத்தில் ஒட்டு மொத்தமாக அதனை மு.கா. ஆதரித்தது.
அது போன்றுதான் இப்போது 13 ஆவது திருத்த சட்ட விடயத்திலும் நாடகமொன்றை அரங்கேற்ற முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்ட இந்த 13வது திருத்த சட்ட அதிகாரங்கள் மக்களுக்கு முழுமையாக கொடுக்கப்படாதிருந்த நிலையில் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு தீர்வாக 13+ ஐ தருவதாக கூறினார். இந்த உத்தரவாதத்தை இந்திய அரசுக்கு மட்டுமல்லாது ஐக்கிய நாடுகள் சபையிலும் கூறினார். ஐ.நா.வின் தருஸ்மன் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கூறி அதற்கு பதிலாக LLRC என்ற தீர்வை கொண்டு வந்து அதனைத் தருவதாக ஜனாதிபதி கூறினார். பின்னர் அந்த LLRC அறிக்கையைக் கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இன்று 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விமல் வீரவம்ச, சம்மிக்க ரணவக்க, பொதுபல சேனா, சிங்கள ராவய போன்ற பேரின சக்திகளை அணி திரட்டி சிறுபான்மையினரை நசுக்கும் வேலைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. பள்ளிவாசல்களை தாக்குவது, முஸ்லீம்களின் கடைகளை உடைப்பது இறைச்சிக் கடைகளுக்கு தீ வைப்பது போன்ற தீவிரவாத வேலைகளைச் செய்து வருகின்ற பேரினவாத சக்திகளுக்கு அரசாங்கம் துணை நிற்கிறது.
இவற்றையெல்லாம் முஸ்லிம் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற நமது அமைச்சர்கள் மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பொதுபல சேனாவைக் காத்தான்குடிக்கு கொண்டு வரப் போகின்றேன் என்று ஹிஸ்புல்லா சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் இவர் ஞானசார தேரரின் தம்பியா? மறைத்த தலைவர் அஷ்ரப் இவருக்கு நரி என்று சரியாகவே பெயர் வைத்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதியின் ஊரான தங்கல்லயில் அவரது வீட்டுக்குப் பக்கத்தில் இறைச்சிக்கடைக்கு தீ வைக்கும் போது பொலீஸ்காரர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். அனுராதபுரத்தில் பள்ளிவாசலை உடைக்கும் போதும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூட பார்த்துக் கொண்டிருந்தனர். இவைகளைத்தான் நான் ஆதாரங்களுடன் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பினேன்.
காத்தான்குடியில் ஒரு நரி, அக்கரைப்பற்றில் ஒரு கெரியன். இவர்கள் இருவருக்கும் முஸ்லிம் சமூகம் பற்றி எந்த அக்கறையும் கிடையாது. இவர்களை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். மறுமையில் நிச்சயம் கேள்வி கணக்கு உண்டு. உனக்கு தந்த தலைமைத்துவம் என்ற அமானிதத்தை பாதுகாத்தாயா என இறைவன் கேட்பான். அப்போது மஹிந்ததான் எல்லாம் செய்தார் என இறைவனிடம் கூற முடியாது.
13 வது திருத்தம் தொடர்பில் தான் விரும்பியதை செய்வேன். விருபியவர்கள் இருக்கலாம். விரும்பாதோர் விலகிச் செல்லலாம் என்று ஜனாதிபதி கூறுகிறார். ஆனால் இதனையும் கேட்டுக் கொண்டு வெட்கம் கெட்ட முஸ்லிம் தலைவர்கள் அரசுடன் இன்னும் ஓட்டிக் கொண்டிருகின்றனர்.
நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது எனது மனைவியும் மகளும் ரவூப் ஹக்கீமின் காலில் விழுந்ததாகவும் அதனால் அவர் ஜனாதிபதியுடன் பேசி என்னை விடுவித்ததாகவும் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இறைவன் காப்பாற்ற வேண்டும். இதுதான் அவர்களது வங்குரோத்து அரசியல். என்னை விடுவிக்க ஹக்கீமால் முடியுமா? அந்தளவுக்கு அரசில் அவருக்கு மதிப்பிருக்கிறதா?
மக்களின் பிரார்த்தனையும் கிழக்கு முஸ்லிம்களின் போராட்டங்களும் சர்வதேசத்தின் தலையீடுகளுமே என்னை விடுவிக்க காரணமாக அமைந்தது. இதனால் 3 மாத தடுப்புக் காவலுக்கு ஜனாதிபதி கையொப்பமிட்டிருந்த நிலையில் எட்டு நாட்களில் விடுவிக்கப்பட்டேன். அதற்காக நன்றி தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். இதைக்கூட தடுப்பதற்கு எவ்வளவோ அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
நாம் எதற்கும் அஞ்சக் கூடாது. சமூகத்தின் நலன்களுக்காக- உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாம் துணிந்து முன்வர வேண்டும். அதற்காக மறைந்த தலைவர் அஷ்ரபினால் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்” என்று குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, நவ சிஹல உறுமய கட்சி தலைவர் சரத் மனமேந்திர, எக்சத் லங்கா ஜனதா கட்சி தலைவர் சோமசிறி அப்புஆராய்ச்சி, கல்முனை வர்த்தக சங்க முக்கியஸ்தர் கே.எம்.ஹாதிம், டாக்டர் வை.எல்.எம்.யூசுப் ஆகியோரும் உரையாற்றினர்
Post a Comment