மாகாண சபை உறுப்பினர்கள் இருவரை இடைநிறுத்திவைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வட மேல்
மாகாண சபை உறுப்பினர்கள் இருவரையே கட்சியிலிருந்து
இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன்
அலி தெரிவித்தார்.
புத்தளத்தை சேர்ந்த எஹியா ஆப்தீன் மற்றும் குருநாகலை சேர்ந்த றிஸ்வி
ஜவகர்ஷா ஆகிய இரண்டு உறுப்பினர்களே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர்
குறிப்பிட்டார்.
13ஆவது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவதற்கு அங்கீகாரம்
வழங்குவது தொடர்பிலான பிரேரணை வட மேல் மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
"இதற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குறித்த இரண்டு
உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். இதனையடுத்தே இவர்களை உடனடியாக
கட்சியிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்" என நாடாளுமன்ற உறுப்பினர்
ஹசன் அலி தெரிவித்தார்.
இந்த இடைநிறுத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு இந்த இரண்டு
உறுப்பினர்களும் அரசாங்கத்தினால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என ஹசன் அலி
தெரிவித்தார்.
"அத்துடன் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால் உங்கள்
இருவருக்குமான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படும் என மாகாண ஆளும் கட்சியின்
உயர் பதவியிலுள்ள ஒருவர் அவர்களை அச்சுறுத்தியுள்ளதாக" அவர் மேலும்
குறிப்பிட்டார்.

Post a Comment