-
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு
மாவட்டத்தின் உறுகாமம் பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் நபர் ஒருவருக்கு
சொந்தமான வியாபார நிலையம் ஒன்று 20 ஜூன் வியாழக்கிழமை அன்று
தீக்கிரையாக்கப்பட்டது.
சில்லறை வியாபாரத்துடன் உணவகமும் சேர்ந்த
இந்த வியாபார நிலையம் சீனி முஹம்மது பரீத் என்பருக்கு சொந்தமானது. உறுகாமம்
பிரதான வீதிச் சந்திக்கு அருகில் இந்த வியாபார நிலையம் இயங்கி வந்தது.
வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் இந்த தீவைப்பு சம்பவம் இனந்தெரியாத
நபர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த வியாபார
நிலையம் இயங்கி வந்த சிறிய கட்டடம் உள்ளேயிருந்த பொருட்கள் மற்றும்
தளபாடங்களுடன் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அத்துடன் வியாபார நிலைய
வளவின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியும் முற்றாக
தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
திரு பரீத் அவர்கள் இது தொடர்பாக கரடியனாறு
போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ள போதிலும் இதுவரை யாரும்
கைது செய்யப்படவில்லை.
இந்த தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களின்
அடையாளங்கள் அறியப்படாத போதிலும் உறுகாமம் வாசிகள் திராவிடன் சேனை என்ற
பெயரில் இயங்கி வரும் முஸ்லிம் எதிர்ப்பு இயக்கம் இந்த நாசவேலையில்
ஈடுபட்டிருக்கலாம் என பலத்த சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த திராவிடன் சேனை என்ற அமைப்பு கிழக்கு
மாகாண முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான
பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்கள் தலைமை
தாங்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒரு பிரிவாக
கருதப்படுகின்றது.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பில்
இருந்து பிளவு பட்டு உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு
கிழக்கு வாழ் தமிழர்களிடையே கடுமையான முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்களை
மேற்கொண்டு தமிழர்கள் இடையே முஸ்லிம் வெறுப்பு உணர்வுகளை வளர்க்க முயன்று
வருகின்றது. தமிழ் மக்கள் விடுதைலை புலிகளின் இந்த நகர்வு கிழக்கில்
பெரும்பான்மை தமிழ் மக்களின் அங்கீகாரத்தை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின்
செல்வாக்கை சரிக்கும் நோக்கிலேயே இடம்பெறுகின்றது. தமிழ் தேசிய
கூட்டமைப்பு கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இடையே நெருக்கமான
உறவுகள் வளர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
முஸ்லிம்களை எதிர்த்து பல
துண்டுப்பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் திராவிடன் சேனை அமைப்பினால்
அண்மைக்காலமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த் துண்டுப்பிரசுரங்களில்
முஸ்லிம்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என தமிழ்
மக்கள் கோரப்பட்டுள்ளனர். அத்துடன் தமிழர்களுடன் கலந்து வாழும் முஸ்லிம்கள்
காத்தான்குடி மற்றும் ஏறாவூர் போன்ற முஸ்லிம் பாரம்பரிய இடங்களுக்கு
திரும்பி செல்ல வேண்டும் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர். .
இவ்வாறான பெருமளவான துண்டுப்பிரசுரங்கள்
மற்றும் சுவரொட்டிகள் பத்துல்ல – செங்கலடி A5 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள
கிராமங்களிலேயே விநியோகிக்கப்பட்டும் ஒட்டப்பட்டும் உள்ளன. இந்த
பிரதேசங்கள் மண்முனை தெற்கு எருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவின்
நிருவாகத்தின் கீழ் அடங்குகின்றன.
இந்த பிரதேசத்தில் முஸ்லிம்களும்
தமிழர்களும் பல நூறு வருடங்களாக வாழ்ந்து வந்த போதும் முஸ்லிமகள் இந்த
பிரதேசத்தில் இருந்து 1985 – 1990 காலப்பகுதியில் இடம்பெயர்க்கப்பட்டனர்.
பல தமிழ் ஆயுதக்குழுக்களால் இந்த முஸ்லிம்கள் பலாத்காரமாக இந்த
பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த காலப்பகுதியில் பல
முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதோடு அவர்களுக்கு சொந்தமான உடமைகளும்
தீக்கிரையாக்கப்பட்டன. இந்த அக்கிரமங்களில் பெருமலவானை தமிழ் ஈழ
விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. முச்ளிமக்ளிடம் இருந்து நிலங்களும்
கால்நடைகளும் பலாத்காரமாக பறிக்கப்பட்டு தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின்
நெருங்கிய ஆதரவாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
இவ்வாறு பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட
முஸ்லிம்கள் 2009 ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு
அழிக்கப்பட்ட பின்னர் மெது மெதுவாக தமது சொந்த இடங்களுக்கு திரும்புவதுடன்
பறிக்கப்பட்ட தமது சொத்துக்களை மீளப் பெறுவதன் மூலம் தமது வாழ்வை
மீளக்கட்டி எழுப்ப முயல்கின்றனர்.
அதிக எண்ணிக்கையான முன்னாள் தமிழ் ஈழ
விடுதலை புலிகள் இயக்க போராளிகள் தற்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
அமைப்பு மற்றும் முன்னாள் கிழக்கு மாகான தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தளபதி
கேணல் கருணா என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் அவர்களின் ஸ்ரீலங்கா
சுதந்திர கட்சி என்பவற்றில் அங்கம் வகித்து வருகின்றனர். பிரதி அமைச்சர்
கேணல் கருணா இலங்கை அரசின் பிரதி அமைச்சர்களில் ஒருவரும் ஸ்ரீலங்கா
சுதந்திர கட்சியின் உப தலைவர்களில் ஒருவரும் ஆவார். இந்த இரண்டு
கட்சிகளிலும் உள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் தீவிர முஸ்லிம் எதிர்ப்பு
நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இந்த பிரதேசங்களில் மீள்குடியேறிய
முஸ்லிம்களில் பலர் பகல் வேளைகளில் இந்த பிரதேசங்களில் வசிப்பதோடு தாம்
அகதிகளாக வாழ்ந்த இடங்களில் இரவுப்பொழுதுகளை கழிக்கின்றனர். சிலர் தமது
சொந்த இடங்களில் நிரந்தரமாக குடியேறியுள்ளனர்.
இந்த பிரதேசங்களில் மீள்குடியேறியுள்ள
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இடையே சில முரண்பாடுகள் தோன்றியுள்ளன. கேணல்
கருணாவின் தலைமையில் இயங்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த முரண்பாடுகளை
பயன்படுத்தி இனவாத சிந்தனையுடன் இந்த தமிழ் மக்களை அணுகுகின்றன.
தமிழ் மக்கள் விடுதலிப்புலிகள் மற்றும்
கேணல் கருணாவின் இந்த அணுகுமுறை கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில்
வெளிப்படையாக அவதானிக்க கூடியதாக இருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா மற்றும் தமிழ் மக்கள்
விடுதலை புலிகள் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட
மூன்று கிழக்கு மாகாணசபை வேட்பாளர்களும் தீவிர முஸ்லிம் எதிர்ப்பு என்ற
தொனியிலேயே தமது பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். .
கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தல் காலத்தில்
சில முஸ்லிம் குடியிருப்புகளும் பள்ளிவாயல் ஒன்றும் உன்னிச்சை பிரதேசத்தில்
தீக்கிரையாக்கப்பட்டது. இந்த சம்பவங்களுக்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
அமைப்பே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. எனினும் இது தொடர்பாகவும்
எவரும் கைது செய்யப்படவில்லை.
அண்மையில் இந்திய வீட்டுத்திட்ட அடிக்கல்
நாட்டும் நிகழ்வு ஒன்று புல்லுமலையில் இடம்பெற்ற போது பிரபல்யமான தமிழ்
மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் அங்கத்தவர்கள் இந்திய வீட்டு திட்டத்தில்
முஸ்லிம்கள் உள்வாங்கப்பட கூடாது என இனவாத துடுப்பிரசுரங்களை
விநியோகித்தனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ,
இந்திய தூதுவர் அசோக் காந்தா மற்றும் கிழக்கு மாகாணசபை முதல்வர் நஜீப் ஏ
மஜீத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த விழாவில் பிள்ளையான்
அவர்களும் கலந்து கொண்டிருந்த போதும் இந்த துண்டுப்பிரசுர விநியோகத்தை
அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார். இது இந்த துண்டுப்பிரசுர விநியோகத்தை
அனுமதிப்பதாகவே கருதப்பட வேண்டும்.
திராவிடன் சேனையின் முஸ்லிம் எதிர்ப்பு
துண்டுப்பிரசுரங்கள் இரகசியமாக விநியோகிக்கப்பட்டன. புல்லுமலை முஸ்லிம்
எதிர்ப்பு துண்டுப்பிரசுரங்கள் பகிரங்கமாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்
உறுப்பினர்களால் விநியோகிக்கப்பட்டன. இவை இரண்டும் ஒரே நோக்கத்துடன் பல
கோணங்களில் ஒத்த செயல்களாகும். எனவே இவை இரண்டின் பின்புலத்திலும் ஒரே கரமே
தொழிற்பட்டுள்ளது என அனுமானிக்க முடியும்.
இந்த பிரதேசத்தில் முஸ்லிம் எதிர்ப்பு
நஞ்சை தமிழ் மக்கள் மனங்களில் விதைப்பதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின்
முக்கியஸ்தரான செங்கலடி பகுதியில் சினிமா தியேட்டர் ஒன்றின் உரிமையாளரும்
வர்த்தகருமான தியேட்டர் மோகன் என்பவர் ஈடுபட்டுள்ளார். திராவிடன் சேனை
அமைப்பின் இயக்குனர் இவரே என்று பலமாக சந்தேகிக்கப்படுகின்றது. இந்த
பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தலைமை தாங்குவதும்
முஸ்லிம்களை பயமுறுத்துவதும் இவரே என சந்தேகிக்கப்படுகின்றது.



Post a Comment