இலங்கையில் எந்தவொரு மத்ரஸாக்களிலும் அடிப்படைவாதம்
போற்றுவிக்கப்படுவதில்லை. மார்க்க ரீதியான சிந்தனைகளைக் கொண்ட நாட்டுக்கு
பிரயோசனம் மிக்க நல்ல பிரஜைகளை உருவாக்குவதுதான் இஸ்லாமியக் கல்வி முறையின்
அடிப்படை இலக்கு. இந்த புனிதமான பணியைத்தான் நாடு முழுவதும் உள்ள
மத்ரஸாக்களும் ஏனைய இஸ்லாமிய கல்வி நிறுவனங்களும் செய்து வருகின்றன.
இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியாத சில உளறுவாயர்கள் தொடர்ந்தும்
இஸ்லாமிய கல்வி முறைக்கு எதிராக கூச்சலிட்டுக் கொண்டிருப்பது வேதனை
மிக்கதாகும் என்று குறிப்பிட்டுள்ளார் குருணாகல் மாவட்டத்தின் ஐக்கிய
தேசியக் கட்சி அமைப்பாளர் ஷஹாப்தீன் ஹாஜியார்.
ஷஹாப்தீன் ஹாஜியார் இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஒரு அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது:
திருகோணமலை மாவட்டத்தில் சில அரபு மதரஸாக்களை நடத்திச் செல்ல
பாராளுமன்றத்தினதும் அரசாங்கத்தினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில்
அவற்றை பாராளுமன்ற சட்டமூலம் ஒன்றின் மூலம் ஒருங்கிணைப்பதற்கான பிரேரணை
ஒன்றை அந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் முறைப்படி
முன்னெடுக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் சில ஆதரவுகளையும் வரிச்சலுகை போன்ற சில சலுகைகளையும்
பெற்றுக் கொள்வதற்காகத்தான் இலாபமற்ற நல்ல நோக்கத்தில் செயற்படும்
நிறுவனங்களும் அமைப்புக்களும் தத்தமது மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள்
மூலம் தமது நிறுவனத்துக்கான பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்
கொள்கின்றன. இது ஒரு சாதாரண விடயம்.முஸ்லிம்களுக்கும் தமது மார்க்க மற்றும்
கல்வி நிறுவனங்களைப் பாராளுமன்றத்தில் பதிவு செய்துகொள்ளும் உரிமை
முழுமையாக உள்ளது.
இதனை அடிப்படையாக வைத்து இலங்கையில் உள்ள மத்ரஸாக்கள் எல்லாமே
அடிப்படைவாதத்தை தூண்டும் நிறுவனங்கள் என்றும் அங்கே அடிப்படைவாதம் தான்
போதிக்கப்படுகின்றது என்றும் பொய்யான கருத்துக்களைப் பரப்பி மக்களைக்
குழப்புவது விரும்பததக்க ஒரு விடயமல்ல.
அடிப்படைவாதம் பற்றி வாய்கிழிய பேசும் இவர்களால் முதலில் அடிப்படைவாதம்
என்றால் என்னவென்று ஒரு விரிவான விளக்கம் அளிக்க முடியுமா? எல்லா
மனிதர்களும் வாழ்வதற்கு ஏதோ ஒரு அடிப்படை தேவைப்படுகின்றது.அந்த
அடிப்படைகளுள் சிறந்தது தான் அவர்அவருக்கு சரியென்று படுகின்ற அவரவர்களால்
ஏற்றுக் கொள்ளப்பட்ட சமயங்கள்;. மார்க்க வழியில் மனித சமூகத்தைக்;
கட்டியெழுப்ப நினைப்பதும்,அந்த வழியில் மனிதர்களை வாழவைப்பதும் ஒரு
புனிதமான செயலாகும்.இதை மற்றவர்கள் செய்தால் புனிதம் என்று போற்றுவதும்
முஸ்லிம்கள் செய்தால் அடிப்படைவாதம் என்று முத்திரை குத்தி தூற்றுவதும்
கீழ்த்தரமான இனவாத சிந்தனைகளின் வெளிப்பாடுகளாகும்.
இந்த கீழ்த்தரமான சிந்தனைகளின் வெளிப்பாடாக முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ள
இன்றைய முஸ்லிம் சிந்தனையாளர்களைக் கூட இவர்கள் தூற்றத்
தொடங்கியுள்ளனர்.அறிவு ரீதியாக யூசுப் கர்ளாவி போன்ற சிந்தனையாளர்களுக்கு
உள்ள உலகரீதியான அங்கீகாரத்தோடு ஒப்பிடுகையில் இவர்கள் எல்லாம்
எம்மாத்திரம் என்று நாம் கேற்க விரும்புகின்றோம்.அந்தக்
காழ்ப்புணர்ச்சிதான் இவர்களைக் கண்டபடி எல்லாம்
பேசவைக்கின்றது.இஸ்லாத்துக்கும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய
முஸ்லிம்களுக்கு எதிராகவும் பேசித் திரியும் பொது பல சேனாவின் தேரர்கள் ஒரு
விடயத்தைப் பற்றி பகிரங்கமாகப் பேசுவதற்கு முன் அதுபற்றிய தெளிவான
விளக்கங்களை சரியான வழிகளில் தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர்களைக்
கேட்டுக் கொள்கிறேன்.
சுற்று அமைதியாக இருந்த அவர்கள் தற்போது மீண்டும் முறுங்கை மரத்தில் ஏறத்
தொடங்கியிருப்பது தெளிவாகின்றது.எனவே முஸ்லிம் சமூகம் மீண்டும் விழிப்புடன்
செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Post a Comment