அரபு மத்ரசாக்களை மூடி விடுமாறு பொது பல சேனா கூறியிருப்பதானது அவர்களின் அறியாமையை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டப் போதுமானதாகவுள்ளது என கல்முனை மாநகர சபையின் ஐ.ம.சு.மு. உறுப்பினர் இட்.ஏ.எச்.றஹ்;மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
“முஸ்லிம்களை சீண்டிப் பார்ப்பதையே நிலையான கொள்கையாகக் கொண்டு பொதுபல சேனா செயற்படுகின்றது.
அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் எவ்வித ஆதாரமுமற்றவை மட்டுமன்றி எழுந்தமான கற்பனைகளாகும்.
தலிபான், அல்குவைதா அமைப்புக்களுடன் இலங்கை முஸ்லிம்களைத் தொடர்புபடுத்துவது வெறும் கற்பனையே. அதனையும் தாண்டி புனித குர்ஆன் ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய வரலாற்றைப் போதிக்கும் அரபு மத்ராக்களில் தலிபான் அல்குவைதா கொள்கைகள் பரப்பப்படுவதென்று கூறுவது எந்த விதத்திலும் அடிப்படையற்றதாகும்.
நல்லொழுக்கம் சாந்தி சமாதானமான வாழ்க்கையை அடிப்படையாக வைத்தே அரபு மத்ரசாக்கள் மாணவர்களை பயிற்றுவிக்கின்றன. அதை விடுத்து அங்கு தீவிரவாதம் போதிக்கப்படுவதில்லை என்பதை பொதுபல சேனா செயலாளர் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியால் சவூதி நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள உலாமாக்களுக்கான பல்கலைக்கழகத்தையும் தடை செய்ய வேண்டுமென்று பொதுபலசேனா கூறுகின்றது.
அந்தப் பல்கலைக்கழகம் மூலம் 1500 உலாமாக்கள் உருவாக்கப்படுவார்கள் என்றும் அது பௌத்த மதத்தை விட மேலோங்கச் செய்யும் நடவடிக்கை என்றும் பொதுபல சேனா குற்றம் சாட்டுகின்றது.
அங்கு உருவாக்கப்படும் 1500 உலாமாக்கள் என்பது சிங்கள மக்களிலிருந்து உருவாக்கப்படுவதில்லை என்பதை ஞானசார தேரர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களிலிருந்தே அவர்கள் உருவாக்கப்படுவர்.
உலாமாக்கள் என்போர் இஸ்லாத்தைப் போதிக்கும் அறிஞர்கள். மூடத்தனமாக- அறிவிலித்தனமாக பொதுபல சேனா கருத்துக்ற முற்படக் கூடாது.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா எடுத்துள்ள முயற்சி வரவேற்கத்தக்கது. முஸ்லிம்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற திட்டமும் கூட. அவவாறான திட்டமொன்று முன்னெடுத்தமைக்காக அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
எனவே பொதுபல சேனா எதிர்வரும் காலங்களில் தமது அறிவிலித்தனத்திலிருந்து விடுபட்டு இஸ்லாத்தைப் பற்றிய உண்மையை அறிய முற்படவேண்டும். அரசும் இது விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி இவ்வாறான இனவாத அமைப்புக்களை தடை செய்ய முயற்சிக்க வேண்டும்.
பொதுபல சேனாவின் அம்பாறைக் கூட்டத்தை எவ்வாறு சிங்கள மக்கள் புறக்கணித்தார்களோ அதுபோன்று ஏனைய பகுதிகளிலுள்ள மக்களும் இந்த சேனாவை புறக்கணிப்பார்கள் என்று தான் நம்புகின்றேன்” எனவும் மாநகர சபை உறுப்பினர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment