சீனாவானது 2012ல் சிறிலங்காவுக்கு 1056.05 மில்லியன் அமெரிக்க டொலர்களை
கடனாக வழங்கியுள்ளதுடன், சிறிலங்காவுக்கு அதிக கடன் வழங்கும் நாடாகவும்
சீனா விளங்குவதாகவும், இந்தக் கடனை விட சீனாவானது சிறிலங்காவுக்கு 0.16
மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாகவும் வழங்கியுள்ளதாக திறைசேரியால்
வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சிறிலங்காவின் மிகப்பெரிய உதவி வழங்கும் நாடாக இந்தியா
காணப்படுவதுடன், இந்தியாவானது சிறிலங்காவுக்கு மானியமாக 257.28 மில்லியன்
அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாகவும், சிறிலங்காவுக்கு கடன் வழங்கும்
நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும், 443.06 மில்லியன்
அமெரிக்க டொலர்களை சிறிலங்காவுக்கு, இந்தியா கடனாக வழங்கியுள்ளதாகவும்
திறேசேரியால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ல் யப்பான், சிறிலங்காவுக்கு 508.74 மில்லியன் அமெரிக்க டொலர்களைக்
கடனாகவும், 15.23 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாகவும்
வழங்கியுள்ளதுடன், யப்பானானது சிறிலங்காவுக்கு அதிக கடன் வழங்கும்
நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சிறிலங்காவுக்கு சலுகைக் கடன்
வழங்கியோர் பட்டியலில் உலக வங்கி நான்காவது இடத்தில் உள்ளது. இது
சிறிலங்காவுக்கு 10.49 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.
சிறிலங்காவுக்கு கடன் வழங்கிய நாடுகளில் நெதர்லாந்து ஐந்தாவது இடத்தில்
உள்ளது. இந்த நாடு 102.50 மில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிலங்காவுக்கு
கடனாக வழங்கியுள்ளதுடன், எந்தவொரு மானியத்தையும் வழங்கவில்லை.
இதற்கு அடுத்ததாக கடன் வழங்கியோர் பட்டியலில் 99.68 மில்லியன் அமெரிக்க
டொலர்களை வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கியும், ஏழாவது இடத்தில் 60
மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்கிய சவுதிஅரேபியாவும் உள்ளதாக
புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம்
ஒன்றை முன்வைப்பதற்கு தலைமை தாங்கிய அமெரிக்காவானது சிறிலங்கா
அரசாங்கத்திற்கு 5.10 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக
வழங்கியுள்ளது.
இதேபோன்று பிரித்தானியா 44.14 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகியன முறையே 34.42 மில்லியன் அமெரிக்க
டொலர்களையும், 28.29 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் சிறிலங்காவுக்கு
கடனாக வழங்கியுள்ளதுடன், ஜேர்மனி மானியமாக 5.27 மில்லியன் அமெரிக்க
டொலர்களையும் வழங்கியுள்ளது.
"மேற்கூறப்பட்ட நாடுகள் சிறிலங்காவுக்கு வழங்கிய மானியம் மற்றும் கடன்
தொகையானது 2011ல், 2010 உடன் ஒப்பிடும்போது சற்றுக் குறைவாக இருந்த
போதிலும், இந்தத் தொகையானது மீண்டும் 2012ல் அதிகரித்துள்ளது.
2012ல் அனைத்துலக நாடுகள் மற்றும் அபிவிருத்தி அமைப்புக்கள், கடன் வழங்கும்
அமைப்புக்கள் போன்றன சிறிலங்காவுக்கு ஒட்டுமொத்தமாக 3152 மில்லியன்
அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளன. இவற்றுள் கடனாக 2789 மில்லியன் அமெரிக்க
டொலர்களும் மானியமாக 363 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்கப்பட்டுள்ளன"
என திறைசேரியால் கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
"2012ல் சிறிலங்காவுக்கு வெளித்தரப்பினரால் வழங்கப்பட்ட நிதியுதவியில் 33
சதவீதம் சீனாவாலும், 22 சதவீதம் இந்தியாவாலும், 17 சதவீதம் யப்பானாலும், 11
சதவீதம் உலக வங்கியாலும், 3 சதவீதம் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும்
நெதர்லாந்தாலும், ஏனைய 14 சதவீத நிதியானது ஏனைய நிதி வழங்கும் நிறுவனங்கள்
மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளன" என இந்த
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"2006ல் 2615 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வழங்கப்பட்ட சலுகைக் கடனானது
2012ல் 1475 மில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது. ஆனால்
இதேவேளையில், கலுகையல்லாத கடன் வழங்கலானது 260 மில்லியன் அமெரிக்க
டொலர்களிலிருந்து 1677 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது" என
திறைசேரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"2012ல் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி உதவியில், 71 சதவீதமானவை
பிரதான பொருளாதார அபிவிருத்திக் கட்டுமானத் திட்டங்களுக்காகவும் குறிப்பாக
இதில் 26 சதவீதமானவை துறைமுக மற்றும் கப்பற் கட்டுமானத்திற்காகவும், 22
சதவீதமானவை வீதி மற்றும் பாலங்களைக் கட்டுவதற்கும் 11 சதவீதமானவை சக்தி
மற்றும் எரிசக்திக்காகவும், வான் போக்குவரத்திற்கு 11 சதவீதமானவையும்
ஒதுக்கப்பட்டுள்ளன" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"2012 முடிவடைந்த போது, சிறிலங்காவின் வெளிநாட்டுக் கடன் 20.3 பில்லியன்
அமெரிக்க டொலர்களாக காணப்பட்டன. இது கடந்த 10 ஆண்டுகளில் 10 சதவீதத்தால்
அதிகரித்துள்ளது. இதில் 13.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது 68
சதவீதமானவை சலுகைக் கடனாகவும், ஏனைய 6.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
அதாவது 32 சதவீதமானவை சலுகையல்லாத கடனாகவும் காணப்படுகின்றது" என திறைசேரி
வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"வெளிநாட்டு நாணய வட்டி வீதமானது சிறிலங்கா அபிவிருத்தி பிணைப் பத்திரங்கள்
தவிர ஏனையவற்றில் 2012ல் 3 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2011ல் இந்த வட்டி
வீதமானது 2.2 சதவீதமாகக் காணப்பட்டது. இருதரப்பு அபிவிருத்தி பங்காளர்களால்
வழங்கப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கான மிதவைக் கட்டணமானது
முன்னைய ஆண்டுகளை விட 2012ல் அதிகரித்துள்ளது" எனவும் திறைசேரியின்
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"வெளிநாடுகளிடமிருந்து கடனாகப் பெற்றுக் கொண்ட 20.3 பில்லியன் அமெரிக்க
டொலர்களில் 3 சதவீதமானவை அடுத்த மூன்று ஆண்டுகளில் முதிர்வடைந்துவிடும்.
மேலும் ஒரு சதவீதம் அடுத்த 3-5 ஆண்டுகளில் முதிர்வடைகிறது. 26 சதவீதமான
கடன்கள் 2013 தொடக்கம் 2022 வரையான பத்து ஆண்டுகளில் முதிர்வடைகிறது.
மேலும் 20 சதவீதமானவை 2023 தொடக்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளில்
முதிர்வடையும். மீதி 52 சதவீத கடனும் இதன் பின்னர் 15 ஆண்டுகளின் பின்னர்
முதிர்வடையும்" என திறைசேரியால் வெளியிடப்பட்ட அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment