கிழக்கு மாகாணத்தில் கல்முனையை மையப்படுத்தி ஆயிரம் வீடுகளை
நிர்மாணிப்பதற்கு துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது. சுனாமியால்
பாதிக்கப்பட்ட, அனர்த்தங்களால் விதவையான, யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்த
வசிப்பிடமற்ற மக்களுக்கு இந்த வீடுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக அந்
நாட்டின் இலங்கைக்கான தூதுவர் இஸ்கந்தர் கே. ஒக்யே, நீதியமைச்சரும், ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீம், துருக்கிய தூதுவர் ஒக்யே ஆகியோருக்கிடையிலான முக்கிய
சந்திப்பொன்று திங்கள் கிழமை (17) நீதியமைச்சில் இடம்பெற்ற பொழுது அமைச்சர்
ஹக்கீம் இருப்பிட வசதியின்றி அல்லறும் மக்கள் பற்றி பிரஸ்தாபித்த போதே
துருக்கியத் தூதுவர் இதனைத் தெரிவித்தார். இச் சந்திப்பில் துருக்கி -
இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் உயர்
அதிகாரி அய்டின் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமத், கல்முனை மேயர் சிராஸ்
மீராசாஹிப், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும்
கலந்து கொண்டனர்.
கல்முனை மாநகரத்தை துருக்கியில் உள்ள ஒரு முக்கிய நகரின் சகோதர நகராக
ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான தீர்மானமொன்றும் இச் சந்திப்பின் போது
எட்டப்பட்டது. அது தொடர்பில் இரு நாட்டு முக்கியஸ்தர்களுக்கிடையிலான
கலந்துரையாடல் ஒன்றும் மிக விரைவில் இடம்பெறவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டது.
துருக்கியின் பெரும்பகுதி ஆசியாக் கண்டத்துக்குள் காணப்படுவதால் ஆசிய
ஆபிரிக்க சட்ட ஆலோசனை மன்றத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக அதில் இணைந்து
கொள்வதற்கு விண்ணப்பிப்பது பெரிதும் பயனளிக்கும் என அந் நாட்டுத்
தூதுவரிடம் வலியுறுத்திய பிரஸ்தாப அமைப்பின் முன்னாள் தலைவர் அமைச்சர்
ஹக்கீம், அவ் அமைப்பு ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் பெரும்பாலானவற்றை
உள்ளடக்கிய அணிசேரா நாடுகளுக்கு அடுத்தபடியான பலம் பொருந்திய அமைப்பென்றும்
குறிப்பிட்டார்.
இரு நாட்டு நீதித்துறை ஒத்துழைப்பின் அடிப்படையில், துருக்கி மற்றும்
இலங்கை ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் மற்ற நாட்டைச் சேர்ந்த தனி நபரோ
அல்லது வர்த்தக நிறுவனமோ தவறு இழைக்கும் பொழுது அல்லது முறைகேடான குற்றச்
செயலொன்றில் ஈடுபடும் பொழுது அதுபற்றி இந் நாடுகள் இரண்டிற்கும் இடையில்
அவற்றை விசாரண செய்து அதுவிடயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கான
சாத்தியக்கூறுகள் பற்றியும் அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் தெரிவித்தார்.
அது தொடர்பில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை வரைவை தயாரித்து வெளிநாட்டு
அமைச்சின் பரிசீலனைக்கு அதனை உட்படுத்திய பின்னர், தமது நாட்டுக்கு அதனை
அனுப்பி வைக்க முடியுமென்றும் அதனடிப்படையில் அவ்வாறான ஒரு புரிந்துணர்வு
உடன்படிக்கையை மேற்கொள்ள முடியுமென்றும் தூதுவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை சரிவர நடைமுறைப்படுத்தும்
வகையில் நீதிமன்றக் கட்டமைப்பின் கீழ் நீதிச் சேவை ஆணைக்குழுவின்
ஒத்துழைப்புடன் காதி நீதிமன்றங்களும், காதிச் சபையும் செயல்பட்டு வருவதாக
குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம் ஏற்கனவே இலங்கையைச் சேர்ந்த காதிகள் 12 பேர்
கட்டார் நாட்டிற்கும் இன்னும் சிலர் குவைத்திற்கும் சென்று அங்கு இவ்வாறான
விவாகரத்து மற்றும் பராமரிப்பு தொடர்பான பிணக்குகளில் எவ்வாறான
நடைமுறைகளும் தீர்வுகளும் கையாளப்படுகின்றது என்பதை நேரில் கண்டறிந்து
வந்துள்ளதாகவும் கூறினார். இவ்வாறானதொரு ஏற்பாட்டை துருக்கியுடனும் செய்து
கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி சீர்தூக்கிப் பார்க்கும் படியும் அவர்
தூதுவரைக் கேட்டுக்கொண்டார்.
தமது நீதியமைச்சின் கீழ் பிணக்குகளுக்கு இணக்கத் தீர்வை காணும் முகமாக
நீதிமன்றக் கட்டமைப்புக்கு அப்பால் மத்தியஸ்த சபைகள் மிகவும் வெற்றிகரமாக
செயல்பட்டு வருவதாகவும், அவ்வாறான மத்தியஸ்த சபைகள் வடகிழக்கு மாகாணங்கள்
உட்பட தற்பொழுது நாடு முழுவதிலும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மத்தியஸ்தர்கள்
ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதி நிலவும் இன்றைய சூழ்நிலையில் துருக்கி
இலங்கையில் வர்த்தக முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பயன்பாடுகள் பற்றியும்
இச் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கப்பட்டது.
Post a Comment