ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தற்போதைய
அரசியல் கலநிலவரங்கள் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் குறித்து
வழங்கிய செவ்வி
கேள்வி: மு.கா.வில் உள்வீட்டுப் பிரச்சினைகள் இருப்பதாக பேசப்படுகிறதே?
பதில்: அடிப்படைக் கொள்கை ரீதியாக
உள்வீட்டுப் பிரச்சினையொன்று எமது கட்சிக்குள் கிடையாது. ஒருசிலர் தமது
தனியான விருப்பு, வெறுப்புகளுக்காக கட்சிக் கொள்கைகளுக்கு வியாக்கியானங்களை
கொடுத்து வருகிறார்கள். இது கட்சியின் செயற்பாடுகளையோ, ஏனைய
நடவடிக்கைகளையோ பாதிப்படையச் செய்யாது. கட்சி மட்டத்தில் அவ்வப்போது
பிரச்சினைகள், கருத்து முரண்பாடுகள் ஏற்படும்போது அதனை கட்சி ரீதியில்
தீர்த்துக்கொள்வோம்.
கேள்வி: பிரச்சினைகள் காரணமாக கட்சியின் மவுசு குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறதே?
பதில்: கட்சிக்குள் சிறுசிறு பிரச்சினைகள்
எழத்தான் செய்யும். இது எல்லாக் கட்சிகளிலும் உள்ள விடயம். இதனால்
கட்சியின் மவுசு குறைவடையாது.
கேள்வி: கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப்போகிறீர்கள்?
பதில்: உள்ளூர், பிரதேச தகராறுகள் கட்சி
மட்டத்தில் இருக்கலாம். இதனால் தேசிய மட்டத்தில் கட்சியின் செல்வாக்கு
பாதிப்படைவதில்லை. பிரதேச, உள்ளூர் தகராறுகள் பேச்சுக்கள் மூலம்
தீர்க்கப்படும். அந்தக் கட்சிக்குள் உள்ளூர் தகராறுகள் வரலாம். வரத்தான்
செய்யும். அதனை வைத்து கட்சியின் நலன்கள் பாதிக்கப்பட்டதாக பெரும்
எடுப்பில் காட்டமுனைவதற்கு சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன. இது அவ்வளவு
வரவேற்கத்தக்க விடயமல்ல. கட்சிப் போராளிகளுக்கு இந்த விடயம் எல்லாம்
தெரியும். அவர்கள் இதுகுறித்து அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.
கேள்வி: கல்முனை மேயர் விவகாரம் பற்றி..?
பதில்: இது எமது உள்வீட்டுப் பிரச்சினை.
தகுந்த நேரத்தில் அதற்கான தீர்மானத்துக்கு வருவோம். பத்திரிகைகளுக்கு
இதுதொடர்பில் அறிக்கை விடுவதற்கு எம்மால் முடியாது.
கேள்வி: வடமாகாண தேர்தல் குறித்து கட்சியின் நிலைப்பாடு என்ன?
பதில்: எந்த தேர்தல்களிலும் தனித்துப்
போட்டியிடுவதுதான் எமது கட்சியின் நோக்கம். அது எமது சுயாதீனத்தைப்
பாதுகாக்கும். கட்சியின் நலன்களை எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் உரிய
காலத்தில் சிறந்த தீர்மானங்களை நாம் மேற்கொள்வோம். அரசாங்கத்தைப்
பொறுத்தவரை எமது கட்சியை தாழ்ந்த மானப்பான்மையுடனே நடத்திவருகிறது. இது
சம்பந்தமான அதிருப்திகள் ஆதரவாளர்கள் மத்தியில் மேலோங்கியிருக்கிறது.
கேள்வி: ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் வடக்கு தேர்தல்களில் சேர்ந்து போட்டியிடுவீர்களா?
பதில்: எமது கட்சியின் சுயாதீனம்,
தனித்துவத்தை பாதிக்காத வண்ணம் ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் போட்டியிடுவதில்
எமக்குப் பிரச்சினைகள் இல்லை. இத்தேர்தல்களில் ஒன்றுசேர்ந்து போட்டியிட்டு
முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை எமது
கட்சிதான் முதலில் வலியுறுத்தியது. எனினும், ஏனைய கட்சிகளிடமிருந்து இதற்கு
சாதகமான பதில் கிடைக்கவில்லை. என்றாலும், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப்
பாதுகாக்கும் வகையில் ஏனைய கட்சிகளுடனும் ஒன்றிணைந்து போட்டியிட நாம்
தயாராகவே இருக்கிறோம்.
கேள்வி: தமிழ்க் கூட்டமைப்பு தேர்தலில் கூட்டுசேர்ந்து போட்டியிட அழைத்தால் என்ன செய்வீர்கள்?
பதில்: எமது கட்சி, அரசாங்கத்தின்
பங்காளிக் கட்சி. எடுத்த எடுப்பிலேயே எதிரணிக் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து
போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கமுடியாது. அதன் சாதக, பாதங்கள் பற்றி
ஆராய்ந்து, குறித்த நேரத்தில் கட்சி சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும்.
தேர்தல் அறிவித்தல் வந்தபிறகு இதுபற்றி ஆலோசிக்க முடியும்.
கேள்வி: வடக்குத் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படுமா?
பதில்: இத்தேர்தலை காலம்தாழ்த்தாது
நடாத்துவதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. அதற்கு
சாத்தியமான செயற்பாடுகள் அவரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கேள்வி: 13ஆவது அரசியல் திருத்த சட்டமூலம் பற்றி…?
பதில்: இந்திய – இலங்கை
ஒப்பந்தத்தின்படிதான் மாகாணசபை முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் அதிகாரங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தன. தற்போது அதன்
அதிகாரங்களை குறைப்பதற்கான முயற்சிகள் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
அமைச்சரவையிலும் இதுசம்பந்தமாக அறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இரண்டு மாகாணசபைகளை
ஒன்றிணைக்கும் படியான விடயத்தையும் மாகாணசபைக்குத் தொடர்பான விடயமொன்றின்
பிரேரணையொன்றினை பெரும்பான்மை மாகாணசபைகள் அங்கீகரித்தால் போதும் என்ற
அதிகாரத்தையும் அரசாங்கம் முன்வைத்துள்ளது.
கடந்த அமைச்சரவையில் இதுதொடர்பாக
ஆராயப்பட்டது. எனினும், இதுகுறித்து காலஅவகாசம் வழங்கப்படவேண்டுமென நான்
வாதிட்டேன். இதன்படி காலஅவகாசம் வழங்கப்பட்டதுடன், இத்திருத்தங்கள்
தொடர்பான எமது நிலைப்பாட்டினை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளோம்.
கேள்வி: எந்த நோக்கத்திற்காக இந்த திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன?
பதில்: தெற்கில் அரசியல் ஸ்திரத்தன்மையை
பெறும்வகையிலும் சிங்கள தீவிரவாத அமைப்புகளை திருப்திப்படுத்தும்
நோக்கிலும் அரசாங்கம் இவ்வாறான திருத்தங்களை முன்வைக்கிறது.
சிறுபான்மையினரின் உரிமைகள், அபிலாஷைகளைவிட அரசியல் ரீதியான நலன்களையும்
வாக்கு வங்கிகளையும் பாதுகாத்துக்கொள்ளும் தந்திரோபாயங்களையும் அரசாங்கம்
இதன்மூலம் கையாள்கிறது. அமைதியை குழப்பும் சிங்கள தீவிரவாதிகளின்
செயற்பாடுகள் மேலாங்கியிருப்பதும் ஆரோக்கியமான விடயமல்ல.
கேள்வி: 13ஆம் திருத்தம் தொடர்பில் ஏனைய அமைப்புகள் அறிக்கை விடுத்தபோதும் ஜம்மியத்துல் உலமா மெளனம் காக்கிறதே?
பதில்: ஆம், ஹலால் விவகாரத்தில்
கோபப்பட்டுக்கொண்டு அறிக்கைவிடும் உலமா சபை, ஏயைனய முஸ்லிம் சமூக நலன்களைப்
பாதிக்கும் விடயங்களில் அறிக்கை விடுவதைத் தவிர்த்து வருகிறது. இது அந்த
அமைப்பினதும் முஸ்லிம்களினதும் நலன்களைப் பாதிக்கவே செய்யும். கத்தோலிக்க
ஆயர்கள் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு தமக்கே உரிய பாணியில்
அறிக்கைவிட்டுள்ளது. ஆனால், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இந்த விடயத்தில்
மெளனம் காத்துவருகிறது.
பாதுகாப்புச் செயலாளர் கோபித்துக்கொள்வார்
என்ற நிலையில் மெளனப் போக்கையோ அல்லது கண்டுகொள்ளாத, அக்கறையில்லாத
போக்கையோ உலமாசபை கைவிட வேண்டும்.
கேள்வி: 13ஆம் திருத்தச் சட்டத்தில் கட்சி எவ்வாறான முடிவை மேற்கொள்ளும்?
பதில்: முஸ்லிம் மக்களின் நலன்களைப்
பாதிக்கும் எந்த விடயத்துக்கும் எமது கட்சி அங்கீகாரம் வழங்காது. பேராளர்
மாநாட்டு தீர்மானம் இதனை வலியுறுத்துகிறது. பேராளர் மாநாட்டு
தீர்மானங்களுக்கு எந்தக் கூட்டத்திலும் மதிப்பளிப்போம். அதன்படி
செயற்படுவோம். ஒரு பேராளர் மாநாட்டின் தீர்மானங்களை இன்னொரு பேராளர்
மாநாட்டிலேயே மாற்றியமைக்க முடியும்.
எனவே, தற்போதுள்ள சூழ்நிலையில் 13ஆவது
அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதை எமது கட்சி
ஆட்சேபித்துள்ளது. இதுதொடர்பான எமது நிலைப்பாட்டினை ஜனாதிபதிக்கும்
தெரியப்படுத்தியுள்ளோம்.
கேள்வி: அரசாங்கம் விடாப்பிடியாக திருத்தங்களை மேற்கொண்டால்…?
பதில்: கட்சியின் முழுமையான எதிர்ப்பினை
வெளிக்காட்டுவோம். பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வைக்கப்பட்டால், அதனை
எதிர்த்து வாக்களிப்போம்.
கேள்வி: அமைச்சரவையில் மாற்றமான தீர்மானம் வந்தால், அடுத்து என்ன செய்வதாக உத்தேசித்துள்ளீர்கள்?
பதில்: ஆம், இடதுசாரிக் கட்சிகள் 13ஆம்
திருத்தத்தை எதிர்க்கின்றன. அரசுக்கு தமது ஆட்சேபனையை இந்த விடயத்தில்
தெரிவித்துள்ளது. அமைச்சர்கள் சிலரும் திருத்தங்களை எதிர்த்துப்
பேசியிருக்கிறார்கள்.
கேள்வி: ஆயினும் கட்சியின் பிரதம கொறடா
அமைச்சர் தினேஷ் குணவர்தன, அரசின் தீர்மானங்களை பங்காளிக் கட்சிகள்
ஆதரிக்கவேண்டுமென சொல்லியிருக்கிறார்களே?
பதில்: அரசு மேற்கொள்ளும் நியாயமான
தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்குவோம். அநியாயமான தீர்மானங்களுக்கு ஆதரவு
வழங்கமுடியாதே. அரசாங்கம் பிரதம கொறடாவாக அவர் இருக்கலாம். அதற்காக எம்மை
அவர் வற்புறுத்த முடியாது.
கேள்வி: 13ஆம் திருத்தத்துக்கு ஆதரவு வழங்க மறுத்தால், அரசின் பங்காளிக் கட்சி என்ற வகையில் உங்களுக்கு பாதகமாக அமையுமா?
பதில்: பங்காளிக் கட்சியாக
இருக்கின்றபோதும், எமது நலன்கள் பாதிக்கப்படுமாக இருந்தால் கட்சி
நலன்கருதியே தீர்மானங்களுக்கு நாம் வரவேண்டும். இது அரசாங்கத்துக்கு
பாதிப்பாக அமையுமாக இருந்தால், அதுபற்றிய தீர்மானத்துக்கு ஜனாதிபதியே
வரவேண்டும்.
ஏனெனில் 2/3 பெரும்பான்மை பலம் பெறுவதற்கு
எமது கட்சி மற்றும் இடதுசாரிகளின் பலம் அரசாங்கத்துக்கு தேவை. எனவே,
எம்மைப் புறந்தள்ளிவிட்டு 13ஆம் திருத்தத்துக்கு அரசால் செல்லமுடியாது.
ஜனாதிபதியும் இதனைப் புரிந்துகொண்டுள்ளார்.
கேள்வி: 13 திருத்தம் தொடர்பில் அமைச்சரவைக்கு அனுப்பிய கடிதத்தில் எதனைக் குறிப்பிட்டுள்ளீர்கள்?
பதில்: வெளிவிவகரா அமைச்சரின் கைப்பட
சமர்ப்பிக்கப்பட்ட இந்த திருத்தங்களுக்கான முன்மொழி வுகள் அதிகாரப்
பகிர்வினை எதிர்காலத்தில் செயலிழக்கச் செய்யும் என்பதனையும் குறிப்பாக
சட்டம் இயற்றும் அதிகாரத்தை காலப்போக்கில் அர்த்தமற்றதாக்கிவிடும்
என்பதையும் குறிப்பிட்டுள்ளதுடன், இந்திய மாநிலங்களுக்கான அதிகாரங்களைப்
பாதுகாப்பதற்கான காப்பீடுகள் எமது அரசியலமைப்பை விடவும் கூடுதலாக
உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.
அத்தோடு, இந்தியாவில் கூட இல்லாத
கால்விலங் குகளை எமக்கு மாட்டிவிட முயற்சிக்கின்றனர். வடக்கு, கிழக்குக்கு
மாத்திரம் நன்மை பயக்கும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் இயற்றப்பட்டதாக
பொய்யான புரளிகளை சிங்கள இனவாத அமைப்புகள் பரப்பிவருகின்றன என்றும்
அமைச்சரவைக்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.
கேள்வி: மனச்சாட்சிப்படி வாக்களிக்க முடியுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளாரே?
பதில்: மனச்சாட்சிப்படி வாக்களிக்க அனுமதி
தந்தாலும், தராவிட்டாலும் பேராளர் மாநாட்டின் தீர்மானத்தை கட்சிக்
கொள்கைகளை மீறி செயற்படமாட்டேன். அதற்கு உடந்தையாகவும் இருக்கமாட்டேன்.
கேள்வி: மு.கா.வுக்கு வழங்கப்பட்ட
வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றாதது குறித்து கட்சி மட்டத்தில் எவ்வாறான
நடவடிக்கைளை மேற்கொள்வீர்கள்?
பதில்: வாக்குறுதிகளை நிறைவேற்றாது
வேண்டுமென்று இழுத்தடிப்புச் செய்கிறார்கள். இந்த வாக்குறுதிகளை
நிறைவேற்றித் தருமாறு நாங்கள் விடாப்பிடியாக இருந்திருந்தால், அது அரசுக்கு
நெருக்கடியான நிலையைத் தோற்றுவித்திருக்கும் என்பதால் நாம் இவ்விடயத்தில்
நிதானமான போக்கை கைக்கொண்டு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்கும்
போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்கிறோம்.
கேள்வி: பொதுபல சேனா மற்றும் ஏனைய இனவாத அமைப்புகளின் செயற்பாடுகள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: சிறுபான்மையினரின் நலன்களை
இல்லாதொழிக்கச் செய்யும் வகையில் இவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். 13ஆம்
திருத்த விடயத்திலும் இந்த தீவிரவாத அமைப்புகள் இவ்வாறுதான் செயற்பட்டு
வருகின்றன. சிறுபான்மையினரின் நலன்களைப் பறித்து அவர்களது நடவடிக்கை
முடக்கும் செயற்பாடுகளை சிங்கள தீவிரவாத அமைப்புகள் முன்னெடுத்து
வருகின்றன. இந்த நாட்டில் நிலவும் அமைதிச் சூழலை குழப்பி அமைதியின்மையைத்
தோற்றுவிக்கும் செயற்பாடாகவே நாம் இதனை நோக்குகிறோம்.
கேள்வி: பொதுபல சேனா போன்ற அமைப்புகள் தடைசெய்யப்பட வேண்டுமா?
பதில்: சிறுபான்மையினர்களை நிர்மூலமாக்க
நினைக்கும் இத்தீவிரவாத அமைப்புகளின் செயற்பாடுகளை ஏற்கமுடியாது. விசேடமாக
முஸ்லிம் மக்களை இலக்குவைத்து மேலைத்தேய நாடுகளின் நிகழ்ச்சிநிரல்களுக்கு
ஏற்ப மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத அடாவடித்தனங்களை ஏற்கமுடியாது. இவ்வாறான,
இனவாத செயல்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். இவ்விடயத்தில் சமூக
நலன்கருதி இந்த அமைப்புகளை தடைசெய்வது குறித்து கவனத்தில் எடுக்கப்பட
வேண்டும்.
கேள்வி: இனவாதிகளின் செயற்பாடுகளை எதிர்ப்பதற்கு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?
பதில்: முஸ்லிம் சமூகத்தைப் பணயக்கைதியாக
வைத்திருக்க பொதுபல சேனாவும் ஏனைய இனவாத கட்சிகளும் செயற்பட்டுவருகின்றன.
அமைதியான சூழ்நிலையைக் குழப்பும் இக்கும்பல்களுக்கு எதிராக நாம்
ஒன்றிணைந்து போராடவேண்டும். இந்த விடயத்தில் சமூகநலனை முன்னிருத்தி சரணாகதி
அரசியலைக் கைவிட்டு ஒருமித்து செயற்படவேண்டும்.
13ஐ திருத்துவதற்கு ஆதரவு வழங்கி,
சிறுபான்மை நலன்களைச் சீரழிக்கும் இவ்விஷமிகளுக்கு எதிராக செயற்படுவதற்கு
அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் அணதிரவேண்டும். அகில இலங்கை
ஜம்மியத்துல் உலமாவும் இவ்விடயத்தில் அக்கறை காட்டவேண்டும்.
கேள்வி: 13ஆம் திருத்தத்தில் ஏனைய கட்சிகளோடு பேசுவீர்களா?
பதில்: ஆம், இடதுசாரிக் கட்சிகள்
அமைச்சர்களுடன் விரைவில் இதுபற்றி பேசவுள்ளேன். அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவுடனும் பேசுவதற்கு எண்ணியுள்ளேன். அவர் யாழ்ப்பாணத்தில்
இருப்பதால் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு
எண்ணியுள்ளேன்.
கேள்வி: பொதுபல சேனாவின் மத்ரஸா மீதான குற்றச்சாட்டுகள் பற்றி…?
பதில்: அரபுக் கல்லூரிகளில்
தேசியக்கொள்கைத் திட்டமொன்று இருக்கிறது. மத்ரஸாக்களுக்கு பாடவிதானம்
இருக்கிறது. இந்த பாடவிதானக் கொள்கைகளுக்கு மேலதிகமாக அங்கு எதுவும்
போதிக்கப்படுவதில்லை. நான் முஸ்லிம் சமய, விவகார அமைச்சராக இருந்தபோது,
பாடத்திட்டமொன்றினை அரபுக் கல்லூரிகளுக்காக தயாரித்தேன். அது இப்போது
பூரணப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் எந்த மத்ரஸாக்களிலும்
தீவிரவாதம் போதிக்கப்படுவதில்லை. அரசாங்கத்தினால் இதற்கு பூரண அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. இது பெரும் அபாண்டமான குற்றச்சாட்டு. வன்முறைகளுக்கு
வித்திடும் போக்கில் செயற்படுகிறார்கள். கருத்து சுதந்திரம் என்ற
போர்வையில் சமாதானத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான
செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
Post a Comment