
பாதுகாத்து தாருமாறு நிர்வாக சபை பகிரங்க வேண்டுகோள்
தம்புள்ளையில் பள்ளிவாசல் ஒன்று இல்லை என்று மாத்தளை மாவட்ட செயலாளர்
தம்புள்ளை முஸ்லிம்களிடம் உறுதியாக கூறியுள்ளதை அடுத்து தம்புள்ளை ஹைரியா
ஜும்ஆ பள்ளிவாசலினை காப்பாற்றித்தருமாறு பள்ளிவாசல் நிர்வாகம் அனைத்து
முஸ்லிம்களிடமும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் பகிரங்க கோரிக்கை ஒன்றினை
விடுத்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை தம்புள்ளை பிரதேச சபையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்
தம்புள்ளை பள்ளிவாசலுக்கு அருகில் வாழும் காணிச் சொந்தக்காரர்கள் மத்தியில்
மாவட்ட செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்ததை அடுத்து இப்பகிரங்க வேண்டுகோள்
விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார
சபையின் தம்புள்ளை புனித பூமி திட்டத்தலைவர், தம்புள்ளை பிரதேச சபை
செயலாளர்,கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் காணிச் சொந்தக்காரர்கள்
கலந்து கொண்டனர்.
காணிச் சொந்தக்காரர்கள் ஒரு மாத காலத்துக்குள் குறிப்பிட்ட
இடங்களிலிருந்து வெளியேற வேண்டுமென இதன் போது மாவட்ட செயலாளரினால்
அறிவுறுத்தப்பட்டது.
சுமார் 170 வருடங்களாக தம்புள்ளை பள்ளிவாசலை சூழ வாழும் காணிச்
சொந்தக்காரர்கள் தம்மிடம் காணி உறுதிகள் உள்ளதாக மாவட்ட செயலாளருக்கு
அறிவித்ததை அடுத்து குறித்த பிரதேசம் 1984 ஆம் ஆண்டு அரசால்
சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டதென கூட்டத்தில் கலந்துகொண்ட பள்ளிவாசல் நிர்வாக சபை
உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை பிரசார கூட்டத்தில் தம்புள்ளை பள்ளிவாசலை பாதுகாத்து
தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை தொடர்பில் மாவட்ட செயலாளரிடம்
தம்புள்ளை முஸ்லிம்களால் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்துள்ள மாவட்ட செயலாளர், அங்கு பள்ளிவாசல் ஒன்று இல்லை.அதன் இருப்பை பற்றி பேசத்தேவை இல்லை என பதிலளித்துள்ளார்.
இதேவேளை பள்ளிவாசலை பாதுகாத்து தருமாறு பள்ளிவாசல் நிர்வாக சபை
ஜனாதிபதி,முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
சபைக்கு கடிதம் அனுப்பியும் இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை என
பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார்.
Post a Comment