
என்றுமில்லாத பெளத்தப்பேரினவாதம்
இலங்கையில் வலுக்கட்டாயமாகப் புகுத்தப்பட்டு வருகிறது என்பதன் பின்னணியில்
பலம் வாய்ந்தவொரு ‘கை’ இருக்கும் என்பதில் இதுவரைக்கும், யாருக்குமே
ஐயமிருந்ததில்லை.
முழுப்பூசனிக்காயையை சோற்றில் மறைப்பது
போல தனக்கும் பொது பல சேனா எனும் இனவாதக் குழுவுக்கும் சம்பந்தமே இல்லையென
தூர நிற்பது போல பாசாங்கு செய்து வந்த கோத்தபாயவின் மழுப்பல்கள் மெல்ல
மெல்ல தகர்ந்து தற்போது பல விடயங்களை அவரே நேரடியாகப் பேசும் நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளமையானது இனவாதத்தின் ‘ஆணிவேர்’ எங்கிருக்கிறது எனும்
கேள்விக்கு பதிலைத்தருகிறது.
இலங்கை எனும் நாடு ‘பெளத்த’ நாடாக
மாத்திரம் இருக்க வேண்டும் எனும் கொள்கையை வரலாற்றில் இதுவரை இத்தனை
ஆணித்தரமாக சொன்னவர்கள் இல்லையெனும் அளவில் கோத்தபாயவின் பெளத்த தீவிரவாதம்
வளர்ந்து நிற்கிறது. அதற்குத் தூபமிடப் பாவிக்கப்பட்ட தீவிர பிரச்சாரப்
பீரங்கிகள் தான் பொது பல சேனா எனும் இனவாத அமைப்பு என்பதும் முன்னர் போல்
அன்றி மிக நெருக்கமான முறையிலே வெளிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இலங்கை நாட்டில் நீண்ட கால ராஜபக்ச ஆட்சி
நிலவாவிடின் தமது குடும்பத்துக்கு வரக்கூடிய ஆபத்துகளை வெளிநாடுகளில்
முன்னை நாள் சர்வாதிகளுக்கு நிகழ்ந்த கதியைக் கொண்டு நன்கறிந்தவராக
இருக்கும் இவர் போன்ற நவீன பெளத்த இனத்தின் காவலர்கள் நீண்ட காலம் தாமும்
தம் குடும்ப நலனும் பாதுகாக்கப் பட வேண்டுமாயின் அதற்கான வழி முறைகளை
இப்போதிருந்தே விதைக்கும் நிலையை உணர்ந்தே பெளத்தவாதத்தை கையில்
எடுத்திருக்கிறார்கள்.
இதன் விளைவில் தமிழ் – முஸ்லிம் மக்கள்
பாதிக்கப்படப்போவதைப் பற்றிக் கவலைப்படும் நிலையில், குறிப்பாக முஸ்லிம்
சமூகப்பிரதிநிதிகள் இல்லையென்பதும், அவர்களைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட
நட்டத்தைச் சந்தித்து, குறிப்பிட்ட அளவு இலாபத்தைப் பெறும் வர்த்தகப்
பரிமாற்றமாகவே அரசியல் ஆட்டம் இருப்பதையும் மக்கள் இப்போது உணர்ந்தாலும்
பின்னொரு காலத்தில் மறந்து விடுவார்கள் எனும் நம்பிக்கையிருக்கிறது.
அதற்கு ஏதுவாக அஸாத் சாலி எனும் ஒரு குரல்
ஆங்காங்கே உணர்ச்சி பொங்க பேசிய போதெல்லாம் விசிலடித்துக் கைதட்டி அழகு
பார்த்த முஸ்லிம் சமூகம், அவர் கைது செய்யப்பட்டதும் ஒரேயடியாக அடங்கிப்
போன வரலாறு இப்போதுதான் நிகழ்ந்திருக்கிறது. வெளியில் வந்த அவரும் தன் மீது
மக்கள் வைத்திருப்பதன் ‘பாசத்தையும்’, நாட்டத்தையும் தனித்தனியாகப்
பிரித்துணர்ந்து கொள்ளும் பக்குவம் கிடைக்கப் பெற்றாலும் கூட தன் அரசியல்
நிலைப்பாட்டிற்காக அங்கும் இங்குமாக வெட்டி விடாமலும்,
விட்டுக்கொடுக்காமலும் அசைந்தாடிச் சமாளித்து வருகிறார்.
எனினும், தேர்தல் என்று வரும் போது அவரை
எப்படிக் கையாள்வது என்பதை முஸ்லிம் அரசியல் சமூகமே கவனித்துக்கொள்ளும்
என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ள நிலையில், தமிழ் சமூகத்தின் குரல்களையும்
ஓரங்கட்டுவது மூலமும் அவர்கள ஜனநாயக உரிமைகளை அடக்குவதன் மூலமும் தம் நீண்ட
கால இருப்பை நிலை நாட்டிக்கொள்ள ராஜபக்ச குடும்பம் முழு மூச்சாக
செயற்படுகிறது.
அதன் ஒரு பகுதியாகவே 13ம்
திருத்தச்சட்டமும் வேண்டாம், மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களும் வேண்டாம்
என அதிகாரக் குரல் ஒரு புறமும், வடக்கில் மாகாண சபைத் தேர்த்தல் நடைபெறவே
கூடாது என்று இனவாதக் குரலும் சம நிலையில் ஒலிக்கின்றன.
இதன் அதிகாரத்தை முழுமையாகத் தன் வசம்
வைத்திருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ‘எதை’ சொல்லப்போகிறார்
என்பதை விட எவ்வாறு செயற்படப்போகிறார் என்பதை உலகம்
அவதானித்துக்கொண்டிருக்க, அடுத்த கட்ட அடக்குமுறைக்கு சிறுபான்மையினங்கள்
தயாராகிக் கொண்டிருப்பது உணரப்படுகிறது.
Post a Comment