Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

மஹிந்த ராஜபக்ஸ செய்த துரோகங்கள் - பாகம் 2

Wednesday, May 80 comments

தற்போதைய ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எத்தகைய குழப்பவாதியாக இருந்தார், தனக்கு எப்படி, எத்தகைய துரோகங்களைச் செய்தார் என்பதை, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள விரிவான செவ்வியில் விளக்கியுள்ளார். 

அந்தச் செவ்வியின் முக்கியமான பகுதிகளின் தொகுப்பின் நிறைவுப் பகுதி 2 இது,

கேள்வி – 2000ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர், நீங்கள் உங்கள் தாயாரை பிரதமர் பதவியில் இருந்து எதற்காக நீக்கினீர்கள்? 

சந்திரிகா - உண்மையில், எனது தாயார் தன்னை பதவியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவர் அதைக் கூறிவந்தார். அவரால் நடமாட முடியவில்லை, தனது பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.  அவர் அந்தப் பதவியை டி.எம்.ஜெயரட்ணவிடம் கொடுக்க விரும்பினார். நான் அதற்கு கட்சியின் ஏனைய இரு மூத்த தலைவர்களான, டி.எம். ஜெயரட்ண மற்றும் ரட்ணசிறியுடன் ஆலோசிப்பதாகவும் அதுவரை பொறுத்திருக்கும் படியும் கூறினேன். கட்சியின் மிக மூத்த உறுப்பினராக மகிந்த இல்லாததால், அவருடன் ஆலோசிக்க விரும்பவில்லை. முதலில் ரட்ணசிறிக்கும் அதன் பின்னர் டி.எம்.ஜெயரட்ணவுக்கும் கொடுக்கலாம் என்று நான் கூறினேன். 

கேள்வி - எதிர்க்கட்சித் தலைவராக மகிந்தவை ஏன் நியமித்தீர்கள்? 

சந்திரிகா- ஏனென்றால் அது ஒரு சதி. நான் ரட்ணசிறியை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க நினைத்திருந்தேன். ரணிலும், மகிந்தவும் தமக்கிடையில் ஒரு திட்டத்தைப் போட்டு, ரட்ணசிறியைப் பதவி விலக நிர்ப்பந்தித்தனர். 

கேள்வி - அப்போது நீங்கள் நாடாளுமன்றத்தைக் கலைக்காமல் விட்டிருந்தால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? 

சந்திரிகா - அவர்கள் என்னை அதைச் செய்வதற்கு நிர்ப்பந்தித்தார்கள். பலநாட்கள் ஆழ்ந்து சித்தித்த பின்னர் அதற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால், அந்த முடிவினால் ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் அவர்களிடம் கூறினேன். 

கேள்வி - எதற்காக மகிந்தவை 2004 அரசாங்கத்தில் பிரதமராக நியமித்தீர்கள்? 

சந்திரிகா - ஏனைய எவரினதும் ஆலோசனைகளைப் பெறாமல் தான் நான் பல அமைச்சர்களை நியமித்தேன். எனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் கீழ் இறங்குவதென்று நான் முடிவு செய்திருந்தேன்.  அதேவேளை, தலைமைத்துவத்தை ஏற்கத்தக்க வகைகயில் தமது வழிகளை திருத்திக் கொள்ளும் படி நான்கு பேரிடம் கூறியிருந்தேன். குடிப்பதை நிறுத்தும்படி அனுரவிடம் கேட்டேன். அவர் அதைச் செய்யத் தவறிவிட்டார்.  மங்களவும், மைத்திரிபாலவும் இருந்த போதிலும் அவர்கள் மீது நம்பிகை ஏற்படவில்லை. அவர்களில் மகிந்த மட்டும் தான் எஞ்சியிருந்தார். 

கேள்வி - மகிந்தவைப் பிரதமராகப் பதவியேற்கும்படி கேட்ட நாளை நினைவுகூர முடியுமா? 

சந்திரிகா - பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவராக லக்ஸ்மன் கதிர்காமர் கூட இருந்தார். ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை. அவரை பிரதமராக நியமிக்க நான் விரும்பினேன்.  ஆனால், நாட்டில் உள்ள சிங்கள பௌத்தர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று முழுமையாக நான் நம்பவில்லை. அந்தவேளையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு எட்டு ஆசனங்கள் குறைவாகவே எமக்கு இருந்தது. 

ஐதேகவின் உதவியுடன் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மகிந்த முயற்சி செய்வதாக அப்போது எனக்கு குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு பிரிவிடம் இருந்து தகவல் கிடைத்தது.  அதன்பின்னர் தான் மகிந்தவை அழைக்க முடிவு செய்தேன். இரண்டு ஆண்டுகள் மூத்தவரான லக்ஸ்மன் கதிர்காமருக்கு பிரதமர் பதவியை கொடுப்பது குறித்து அவரது கருத்தைக் கேட்டேன்.  அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை தனக்கே அந்தப் பதவி தரப்பட வேண்டும் என்றார். 

கேள்வி - உங்களின் இரண்டாவது பதவிக்காலம் 2005ல் முடிவடைவதாக, நீங்கள் நியமித்த நீதியரசர் முடிவு செய்தபோது, அந்த முடிவு குறித்து நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? 

சந்திரிகா - எனக்கு அதிர்ச்சியாகே இருந்தது. முற்றாக சோர்ந்து போனேன். சரத் என் சில்வா எனக்கு 1999இலும், 2000இலும் பதவியேற்கும்படி எனக்கு ஆலோசனை கூறியிருந்தார்.  உண்மையில் நான் பதவியேற்க வேண்டியது 2000இல். ஆனால் அவரது ஆலோசனைப் படியே 1999இல் பதவியேற்றேன்.  மருத்துவ பரிசோதனைக்காக நான் லண்டனுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு முன்னர் பதவியேற்கும்படியும் இல்லாவிட்டால் ரணிலும் ஐதேகவும் பிரச்சினை எழுப்பலாம் என்றும் அவர் கூறினார். 

எத்தனை முறையும் நான் பதவியேற்றலாம் என்று அவர் கூறினார். ஆனால், பதவியேற்ற உண்மையான நாள் எதுவென்பது முக்கியமானது. பின்னர் அவர் முரண்பாடான முடிவை எடுத்தார்.  அப்போது, இன்னொரு ஆண்டு எனது பதவிக்காலம் தொடர்ந்தால், தனது வாய்ப்புக் குறைந்து விடுமே என்று மகிந்த முற்றிலும் குழம்பிப் போயிருந்தார். 

மகிந்த முதல்முறை வெற்றி பெற்ற பின்னர் சரத் சில்வாவுக்கு இரண்டாவது முறை வாய்ப்புக் கொடுப்பதாக இருந்தது. இருவருமே ஒருவரை ஒருவர் இழுத்து வீழ்த்திக் கொண்டனர். 
இப்போது மீண்டும் நண்பர்களாகியுள்ளனர். 

கேள்வி - மகிந்தவுக்கு ஜனாதிபதி நியமனம் கொடுக்க முடிவு செய்தது குறித்து? 

சந்திரிகா- மற்றவர்கள் தமது தகைமையை நிரூபிக்கவில்லை. வேறு தெரிவு இருக்கவில்லை. 

கேள்வி – இந்த முடிவில் எவரேனும் தலையிட்டார்களா? 

சந்திரிகா - இல்லை, எவரும் இல்லை. மகிந்தவுக்கு அதைக் கொடுக்கும்படியும், தனக்கு பிரதமர் பதவி தருவதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அனுரா என்னிடம் கூறினார்.  ஆனால் நான், அது பண்டாரநாயக்கக்களின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்று அவருக்கு ஆலோசனை கூறினேன். 

கேள்வி - மகிந்தவை அதிபர் வேட்பாளராக நியமித்த போது என்ன நடந்தது? 

சந்திரிகா - கதிர்காமர் ஒரு உரையில் கட்சியை காப்பாற்றியதற்கு எனக்கு நன்றி கூறினார். எதிர்காலத்தில் என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவர் மகிந்தவைக் கேட்டுக் கொண்டார். 

கேள்வி - ஆனால் மகிந்தவைத் தோற்கடிப்பதற்கு பணியாற்றினீர்களே? 

சந்திரிகா - இது முற்றிலும் பொய். அவருக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று ஏழுக்கும் அதிகமான தடவைகள் நான் கேட்டேன். மைத்திரிபால ஒரு தேர்தல் நடவடிக்கைக் குழுவை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்தார். அதன் தலைவராக இருப்பதாக நான் கேட்டேன்.  ஆனால், மகிந்த தனக்கு எதிராக நான் பணியாற்றுவதாக வதந்திகளைப் பரப்பினார். ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு எதிராக பணியாற்ற தனது சகோதரர்களை அவர் ஐதேகவுக்கு அனுப்பியது போன்று, என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் செயற்பட்டதில்லை. 

தனது சகோதரர் பசிலின் திட்டத்தின் படியே அவர் பரப்புரைகளை மேற்கொண்டார். அதன் ஒரு பிரதியைத் தரும்படி நான் கேட்டேன். ஆனால் அவர் அதைக் கொடுக்கவேயில்லை.  நான் தடுத்த போதிலும் ஜேவிபியுடன் ஒரு உடன்பாட்டைச் செய்து கொண்டார். 

தனது பரப்புரை முகாமையாளராகப் பணியாற்ற மங்களவைக் கேட்டார். அதைச் செய்யும்படி நான் அவருக்குக் கூறினேன். ஏனென்றால் எமது வேட்பாளர் வெற்றி பெறவேண்டும். பின்னர் அவர் ஒரு ஹிட்லராக மாறுவார் என்று நான் நினைக்கவில்லை.  அவரது பரப்புரைகள் காத்திரமானதாக இல்லை என்று ஒருநாள் நான் மகிந்தவிடம் கூறினேன். எனது உதவி தேவையென்றால் அழைக்குமாறும் தெரிவித்தேன். 

நான் அமெரிக்காவில் இருந்தபோது, சிஎன்என் மற்றும் பிபிசி என்பன மகிந்தவுக்கு எதிரான அறிக்கை ஒன்றை என்னிடம் பெற முயன்றன. நான் அதைக் கொடுத்திருந்தால், அவர் தேர்தலில் தோல்விடைந்திருப்பார்.  இறுதி மூன்று வாரங்களில் நான் 14 கூட்டங்களில் பேசுவதற்கு முடிவு செய்திருந்தேன். ஆனால் கண்டியில் நடந்த மூன்றாவது கூட்டத்தை அவர் புறக்கணித்த பின்னர், ஏனைய கூட்டங்களை அவர் ரத்துச் செய்தார். 

அவர் தன்னைச் சுற்றியே கூட்டங்களை நடத்தத் தொடங்கினார். அதேவேளை, டலஸ், பசில், கோத்த்பய, பாரத லக்ஸ்மன் போன்றவர்கள் மகிந்தவுடன் நான் இணைந்து பணியாற்றவில்லை என்று வதந்திகளைப் பரப்பினர். 

கேள்வி - உங்களின் பிறந்த நாளன்று உங்களின் கட்சித் தலைமைப்பதவி பறிக்கப்பட்டது பற்றி? 

சந்திரிகா - எனது பிறந்த நாளன்று அதைச் செய்ய வேண்டாம் என்று சில அமைச்சர்கள் மகிந்தவுக்கு ஆலோசனை கூறினர். ஒருமுறையல்ல, மூன்று முறை அவர் எனக்குத் தவறு செய்துள்ளார். 

கேள்வி - இன்று நாடு அனைத்துலக நெருக்கடிச் சூழலுக்கு முகம் கொடுத்துள்ளது. நீங்கள் பல நாடுகளின் தலைவர்கள் மட்டத்தில் உறவுகளை வைத்துள்ளீர்கள். இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உங்களை உதவிக்கு அழைக்கலாமா? 

சந்திரிகா - கேட்டால் நிச்சயம் நான் உதவி செய்வேன். முன்னாள் அதிபர்கள், பிரதமர்களின் தனிப்பட்ட அமைப்பில் பணிப்பாளர் சபையில் நான் இருக்கிறேன். எவ்வாறாயினும் எனது உதவியைப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் இருக்கும்.

கேள்வி - அவை என்ன? 

சந்திரிகா – முதலாவது அடிப்படை உரிமைகள், பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும். வெள்ளைவான் கடத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஊழல்களை ஒழிக்கப்பட வேண்டும். 

கேள்வி - சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பான உங்களின் கருத்து என்ன? 

சந்திரிகா - நாட்டுக்கு மிகவும் பாதகமானது. 

கேள்வி – சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது குறித்து உங்களின் கருத்து? 

சந்திரிகா - அவர்களின் பார்வையில், அது சரியான முடிவு. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது அதிபர் சொல்வதை தாம் நம்பமுடியாது என்று இந்தியா கூறியுள்ளது. 

கேள்வி - உங்களின் அதிபர் பதவிக்காலத்தில் போர் முடிவுக்கு வந்திருந்தால், முன்னுரிமை அடிப்படையில் எதனைச் செய்திருப்பீர்கள்? 

சந்திரிகா – தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதை கொண்டாடியிருக்கமாட்டேன். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை, எல்லா சமூகங்களுடனும் இணைந்து கொண்டாடியிருப்பேன். அத்துடன் தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கியிருப்பேன். 

கேள்வி- அடுத்த அதிபர் தேர்தலில் நீங்கள் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்படவுள்ளதாக பேச்சு அடிபடுகிறதே? 

சந்திரிகா – அதில் உண்மையில்லை. 

கேள்வி - உங்களுக்கு தற்போதைய அமைச்சர்கள் எவருடனாவது தொடர்புகள் உள்ளதா? 

சந்திரிகா - மகிந்த தேர்தலில் வெற்றி பெற்றவுடன், அவர்கள் என்னுடன் பேசுவதைத் தடுத்து விட்டார். அவர்கள் அனைவரும் முதுகெலும்பு இல்லாதவர்கள். ஏழு ஆண்டுகளாக அவர்கள் என்னுடன் பேசுவதில்லை. 

கேள்வி - இன்று கட்சியில் உங்களுக்கு மதிப்புக்குரிய நிலை மறுக்கப்பட்டது போல, மகிந்த அதிகாரத்தில் இருந்து நீங்கிய பின்னர் அதே விதி அவருக்கும் ஏற்படுமா? 

சந்திரிகா - மகிந்த தலைவராக இருக்கும் போது அது நடக்கக் கூடும். நான் அங்கிருந்தால் அது நடக்காது.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by