மாணவர்களை பாடசாலையிலும், பாடசாலைக்கு வெளியிலும் பாதுகாப்பதற்கான திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதிபர்கள், பாடசாலைகளில் ஆலோசனைகள் வழங்கும் ஆசிரியர்கள், மதத் தலைவர்கள்,
பழைய மாணவர்கள், மாணவத் தலைவர்கள், பெற்றோர் மற்றும் பிரதேசவாசிகளை
இணைத்து, பாடசாலை மட்டத்தில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக
கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டார்.
இதன்மூலம், பேஸ்புக் போன்ற இணையத்தளங்கள் பயன்படுத்துவதனால் மாணவர்களுக்கு
ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு உரிய தீர்வுகளை வழங்க முடியுமென அமைச்சர்
நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனைத்தவிர, பாடசாலைகளிலும், வெளியிடங்களிலும் மாணவர்கள்
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதை தடுப்பதற்கும், அவர்களுக்கு எதிரான
நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் இதனூடாக ஆலோசனைகள் மற்றும்
பரிந்துரைகளை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இம்முறை பாடசாலை தவணை நிறைவடைவதற்கு முன்னர் இதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும்
சுட்டிக்காட்டினார்.
Post a Comment