
நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஹர்த்தாலின் போது கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள அதேவேளை 15 பேர் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் பிரதேசத்தில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமையும் நேற்று செவ்வாய்க்கிழமையும் குறித்த பிரதேசத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த ஹர்தாலின் போது அக்கரைப்பற்று – கல்முனை வீதியின் நிந்தவூர் பிரதேசத்தில் வீதித் தடைகள் போடப்பட்டிருந்தன. இதனை அகற்றுவதற்கு கலகமடக்கும் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை முயற்சித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுப் பிரயோகம் நடத்தி அவர்களை அங்கிருந்து அகற்ற முற்பட்டுள்ளனர். இதன்போது பொலிஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் அங்கு அசாதாரண நிலையேற்ப்பட்டது. இதனையடுத்து 21 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று புதன்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் ஆறு பேர் 50,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு சம்மாந்துறை நீதவான் கே.கருணாகரன் உத்தரவிட்டார்.
பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஆறு பேரும் 18 வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏனைய 15 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கே.கருணாகரன உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகளான ஏ.எம்.முஸ்தபா, சறுக் காரியப்பர், ஆரீப் சம்சுதீன், ஏ.எம்.நசீல் மற்றும் ஏ.எம்.றகீப் உட்பட பல சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந்த விசாரணையின் போது மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிர் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் சமுகம் அளித்திருந்தனர்.

Post a Comment