250 கோடி ரூபா பெறுமதியான 250 கிலோ ஹெரோயின் கடத்தல் விவகார்த்துடன்
சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குமாறு அகில இலங்கை
ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறுக்குவழியில் பணம் சேர்ப்பதற்காக மனித உயிர்களைப் பலிகொள்ளும்
ஒருகாலத்திலே வாழ்கிறோம். போதைப் பொருட்கள் என்னென்ன ரகமாயினும்
அவையெல்லாம் மனித உயிரையே காவுகொள்ள கூடியனவாகும். இதில் ஒருவகையான
ஹெரோயின் போதைப் பொருள் மிகவும் கொடியது என்பதனால்தான் பல உலக நாடுகள்
ஹெரோயின் தொழிலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கபப்பட வேண்டுமெனக்
கூறியுள்ளன. அத்தொழிலில் ஈடுபடும் சிலர் கோடீஸ்வரர்களாக ஆகிவிடுவதோடு
மற்றவர்களின் சொத்துக்களையும் உயிரையுமே போக்கிவிடுகின்றனர். இதில்
சிக்குண்டுதவிப்போர் ஏழைகளும் இளம் வயதினருமே ஆகும்.
கடந்தவாரம் பிடிக்கப்பட்ட 250 கோடி ரூபா பெறுமதியான 250 கிலோ ஹெரோயினை
கொண்டுவந்தவரும் வரவழைத்தவரும் உடந்தையாக இருந்தோரும் மானிட சமூகத்தின்
துரோகிகளேயாகும். சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதனால் அவர்கள்
செய்தகுற்றம் சன்மார்க்கத்துக்கே இழுக்கை சேர்த்துவிடுகிறது. எனவே யார்
இதில் சம்பந்தப்பட்டாலும் அவர்களுக்கான தண்டனை அதிஉச்ச தண்டனையாக
அமையவேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அரசைக் கேட்டுக்
கொள்கிறது. அதன் மூலமே சீரானதொரு சமூகத்தையும் ஒழுக்கசீலம் மிக்கதொரு
சந்ததியையும் கட்டியெழுப்பமுடியும்.
Post a Comment