இலங்கையின்
இறுதிப்போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு
எதிரான குற்றங்கள் தொடர்பில் நம்பகத்தன்மை வாய்ந்த, சுதந்திரமான ஓர்
அனைத்துலக விசாரணையின் அவசியத்தினை ஐக்கிய நாடுகளின்
மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் வலியுறுத்தியுள்ள தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு அண்மைக்காலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக
கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத செயற்பாடுகள் குறித்து
கலந்துரையாடப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
எஸ். சுமந்திரன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐக்கிய நாடுகளின்
மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளைக்கும் இடையிலான
விசேட சந்திப்பொன்று இன்று காலை கொழும்பில் இடம்பெற்றது.
இச்சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி.,
இலங்கையில்
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் சர்வதேச ரீதியிலான
சுதந்திரமான ஒரு யுத்தக் குற்ற விசாரணையின் அவசியத்தை எடுத்து கூறினோம்.
மேலும்
இலங்கையின் வடக்கே அதிகரித்த எண்ணிக்கையிலான இராணுவப் பிரசன்னம், கலாசார
சீரழிவுகள், அதிகளவான பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுகின்றமை,
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு, மீள்குடியேற்றம்,
மக்களுடைய வாழ்வாதார பிரச்சினைகள் ஆகியவையும் நீடித்திருக்கக் கூடிய
அரசியல் தீர்வு குறித்தும் தெளிவுப்படுத்தினோம்.
இதேவேளை
நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை,
காணாமல் போனவர்கள் மற்றும் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீது
கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத செயற்பாடுகள், பள்ளிவாசல்கள் மீதான
தாக்குதல் குறித்தும் ஐ.நா. ஆணையாளரிடம் கலந்துரையாடிதாக சுமந்திரன்
எம்.பி. தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஐ.நா. ஆணையாளர் நவநீதம்
பிள்ளை, நான் வடக்கு விஜயம் செய்தன் மூலம் அங்குள்ள உண்மை நிலைமைகளை
கண்டறிந்து கொண்டேன். மேலும் எனது இலங்கை விஜயம் தொடர்பாக எதிர்வரும்
செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையில் வாய் மூலமான
தெளிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகவும் இதன்பின்னர் அடுத்த வருடம்
மார்ச் மாதத்துக்கு முன்னர் பூரண அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகவும்
தெரிவித்தார்.
மேலும் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை
யாரும் கூற முன்வராத நிலையில் தாங்கள் அதனை எடுத்துரைத்தமையை நினைத்து
மகிழ்ச்சி கொள்வதாக ஐ.நா. ஆணையாளர் தெரிவித்ததாகவும் சுமந்திரன் எம்.பி.
தெரிவித்தார்.
Post a Comment