ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள்
மாற்றுத் தலைமையொன்றை உருவாக்க அதிகார சக்திகள் முற்படுவதாக ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்
குறிப்பிட்டார். மத்திய மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு கண்டி
மாவட்டத்தில் கல்ஹின்னையில் நேற்று மாலை 18.08.2013 ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் தொடர்ந்தும்
உரையாற்றுகையில்,
மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தன்னை பலப்படுத்துவதற்காகத் தனித்துக் களமிறங்கியுள்ளதே
தவிர தமிழ்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தவோ அரசாங்கத்தையும் ஐக்கிய தேசிய
கட்சியையும் பலயீனப்படுத்த அல்ல.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண
சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட எடுத்த தீர்மானம் கட்சியின் தயவினால்
அரசியல் பதவிகளில் இருப்பவர்களால் கூட கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. இது
அமைச்சுப் பதவிக்கு நன்றி செலுத்தும் கோதாவில் பேசப்படுகின்றது.
சமகாலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தினால் மட்மன்றி முஸ்லிம் அல்லாதவர்களாலும்
விமர்சிக்கபடுவது என்பது இந்த இயக்கத்தின் பலத்தைக் காட்டுகின்றது. இது
தேசிய அரசியலில் இந்தக் கட்சியின் பாத்திரத்தை தொட்டுக் காட்டுகின்றது.
நாட்டில் கட்சிகள் மலிந்துள்ள காலப்பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாட்டில்
கிழக்கு முஸ்லிம்கள் பற்றி அல்லது வடகிழக்கு முஸ்லிம்கள் பற்றி பேசும்
கட்சியாக மட்மன்றி இலங்கை வாழ் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கட்சியாகவும்
இருக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. இதனாலேயே இக்கட்சி சகல
தரப்புக்களாலும் விமர்சனங்களுக்குட்படுகின்றது.
நாட்டில் பல பாகங்களிலும் அபிவிருத்தி
வேலைத்தட்டங்கள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. நாட்டில் யுத்தத்திற்கு
செலவு செய்த பணம் மீதப்பட்டு இத்தகைய அபிவிருத்திகள் இடம்பெறுவது
வரவேற்கத்தக்கதாகும். ஆனால் முஸ்லிம்களைப் பொருத்தளவில் அபிவிருத்தி தான்
எல்லாம் என்பதல்ல. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எவரும் பலவீனப்படுத்த
இடமளிக்க முடியாது. அவ்வாறு பலவீனப்படுத்த முற்படுபவர்களுக்கு கிழக்கு
மாகாண போராளிகள் தக்க பதிலடி கொடுப்பர். இந்த இயக்கத்தின் அரசியல்
பாத்திரம் மிகவும் முக்கியமானது. அத்துடன் கிழக்கில் கட்சியின் போராளிகள்
மிகவும் உறுதியாகவுள்ளனர்.
எமது மாபெரும் தலைவர் மர்ஹும்
எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் வளர்த்த இந்த ஆலமரத்தின் எத்தனை விழுதுகளை
வெட்டினாலும் மரத்தை வெட்ட முடியாது. இக்கட்சியை உடைக்க இடமளிக்க முடியாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் மாற்றுத்தலைமையொன்றை உருவாக்குவது
பற்றி யோசிப்பவர்களின் சதி பலிக்காது.
வட கிழக்குக்கு வெளியில் மாகாண சபைகளில்
முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கப் போகும் ஆதரவுத்
தளத்தை வடகிழக்கு மக்கள் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏனெனில் கிழக்கு மக்கள் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸிற்கு
பெரும் பேரம் பேசும் சக்தியை வழங்கியிருந்தன என்றார்.
Post a Comment