Homeஅரசாங்கம் தவறு செய்யாவிட்டால் நவநீதம்பிள்ளைக்கு பயப்பட தேவையில்லை
அரசாங்கம் தவறு செய்யாவிட்டால் நவநீதம்பிள்ளைக்கு பயப்பட தேவையில்லை
அரசாங்கம் தவறு செய்யாதிருந்தால் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம்
தொடர்பில் அரசாங்கம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நவநீதம்பிள்ளையின்
விஜயம் எமக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது என தேசிய பிக்குகள் முன்னணியின்
செயலாளர் தீனியாவெல பாலித ஹெமிதேரர் தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெறும் பிரச்சினைகள் தொடர்பில் நவநீதம்பிள்ளை அறிந்து கொள்வதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பம் எனவும் அவர் தெரிவித்தார்.
இராஜகிரியவில் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், எமது நாட்டில்
இடம்பெறும் பிரச்சினைகள் தொடர்பில் எவரிடமும் நியாயம் கேட்க முடியாத
நிலைமையே காணப்படுகின்றது. உயிர் அச்சுறுத்தல், வெள்ளை வேன் கடத்தல்
என்பவற்றின் பயம் காரணமாக எவரும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்க
முன் வருவதும் இல்லை.
இன்று எமது நாட்டின் பிரச்சினைகளுக்கு சர்வதேசத்திடம் உதவி கோர வேண்டிய நிலைமையிலேயே நாம் இருக்கின்றோம்.
இதை நினைத்து நாம் வெட்கமடையவில்லை. ஏனெனில் இன்று நவநீதம் பிள்ளையின் வருகை எம் மக்களுக்கும் எங்களுக்கும் மகிழ்ச்சியாகவே உள்ளது.
அரசாங்கம் எவ்வித குற்றங்களும் செய்யாதிருந்தால் நவிப்பிள்ளையின் வருகையில்
அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை. அவரின் வருகைக்கு எதிர்த்து
அரசாங்கத்தில் இருக்கும் சிலர் எதிர்ப்புக் கோஷங்களை எழுப்புகின்றனர். இவை
தமது குற்றங்கள் வெளியாகி விடும் என்ற எண்ணத்தினாலேயே ஆர்ப்பாட்டங்களையும்
அநாவசிய கருத்துக்களையும் அரசாங்கம் வெளிப்படுத்துகின்றது.
நவநீதம்பிள்ளையின் விஜயத்தினால் அரசாங்கம் அழுத்தங்களை சந்திப்பது உறுதியாகி விட்டது.
இலங்கையில் நீதியான சட்ட நடைமுறைகளோ ஒழுங்காகப் பிரயோகிக்கப்படவில்லை.
வெலிவேரிய கிராண்ட்பாஸ் சம்பவங்கள் இவற்றிற்கு நல்ல உதாரணமாகும். அரசாங்கம்
மக்களின் காசுகளை சூறையாடிக்கொண்டு பொய்யான அபிவிருத்திகளை செய்து
மக்களையும் ஏமாற்றி நாட்டையும் வீணடிக்கிறது.
2012 ஆம் ஆண்டு முடிவில் அரசாங்க வாகன கொள்வனவு செலவானது 3 ஆயிரம் கோடி ரூபாய்கள் என அரச தரப்பு அறிக்கைகளே தெரிவிக்கின்றன.
இவ்வாறு தனிப்பட்ட சிலரின் நலன்களுக்காக அப்பாவி மக்களின் பணத்தை கொள்ளையடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததே.
பொதுநலவாய மாநாடு முடிவுவடையும் போது இலங்கையில் மக்கள் ஒரு வேளை பாண்
துண்டைக் கூட சாப்பிட வழியில்லாத நிலைமை ஏற்படும் எனவும் அவர்
தெரிவித்தார்.
Post a Comment