இவ்வாறு நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள 'ஈதுல் பித்ர்'
நோன்பு பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளவையாவன,
சகிப்புத் தன்மையையும், ஈகையின்
சிறப்பையும் அதிகம் வலியுறுத்தும் ரமழான் மாதத்தில் இறை வணக்கத்திலும்,
திருக்குர்ஆனை ஓதுவதிலும் ஊறித்திளைத்திருந்த முஸ்லிம்கள் புனித கடமையொன்றை
இனிதே நிறைவேற்றிய திருப்தியில் பேருவகையோடு 'ஈதுல் பித்ர்' ஈகைத்
திருநாளைக் கொண்டாடுகின்றனர்.
இதேவேளையில், உலகளாவிய முஸ்லிம் உம்மத்,
அண்மைக்கால வரலாற்றிலேயே இடம்பெற்றிராத விதத்தில் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு
முகம்கொடுத்தவாறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் மத்தியில் அசைக்க
முடியாத இறை நம்பிக்கையோடு புனித நோன்பை நோற்ற பின்னர் இந்தப் பெருநாளையும்
எதிர்கொள்கின்றது.
மேற்கத்திய நாடுகளின் சதி வலைக்குள்
சிக்கி பலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், எகிப்து, சிரியா, லிபியா என்பன உட்பட
முஸ்லிம் நாடுகளிலும், மியன்மார் போன்ற நாடுகளிலும் வசிக்கும் அப்பாவி
முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்படும் படுபாதகச் செயல் தொடர்ந்த வண்ணம்
இருக்கின்றது. இவற்றினூடாக மனித உரிமைகள், மனிதாபிமானம் என்பன பற்றி
பெரிதாக பிதற்றிக்கொள்ளும் வல்லரசுகளின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளதை
நேர்மையாகவும், நீதியாகவும் சிந்திப்போர் நன்கு புரிந்துகொள்வர்.
இலங்கையைப் பொறுத்தவரை கிரிஸ் மனிதன்;
வெளிக்கிளம்பியதிலிருந்து, வணக்கத்தளங்களான பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது
ஈறாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இனவாத விஷமச் சக்திகளால்
கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதும், அவற்றை தடுப்பதற்கு ஆக்கபூர்வமான
முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படாததும் விசனத்திற்குரியது.
பேரினவாத விஷமச் சக்திகளின் கை
மேலோங்குவதற்கு இன்னும் இடமளிப்பது ஆபத்தானது. இவ்வாறான சூழ்நிலையில், உரிய
நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாத பட்சத்தில் முஸ்லிம்கள் தங்களது
இருப்பையும், பாதுகாப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்கு எல்லாம் வல்ல
அல்லாஹ்வின் அளப்பரிய ஆற்றலில் நம்பிக்கை வைத்திருப்பது ஒன்றே ஆறுதல்
அளிப்பதாகும்.
பெருநாள் தினத்தில் அனைவருக்கும் 'ஈத் முபாரக்' நல் வாழ்த்துக்கள் உரித்தாவதாக.
இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள 'ஈதுல் பித்ர்' வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
Post a Comment