
இலங்கையின் தலைநகர் கொழும்பின் கிராண்ட் பாஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றை நேற்று பௌத்த கும்பல் ஒன்று தாக்கியதை அடுத்து அப்பகுதியில் மதக் கலவரம் வெடித்திருந்த நிலையில் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு காலை விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் மதப் பிரதிநிதிகள் போன்றோர் பௌத்த சாசன அமைச்சகத்தில் இவ்விவகாரம் தொடர்பில் விவாதித்துவருகின்றனர்.
அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ரிசாட் பதியுதீன், துணை அமைச்சர் ஃபைசர் முஸ்தஃபா போன்றோர் சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அமெரிக்க தூதரகம் கண்டனம்
பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கண்டித்துள்ளது.இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அண்மைக்காலமாக பல தாக்குதல்கள் நடந்துவருவது கவலை அளிக்கிறது என அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை கூறுகிறது.
வழிபாட்டு இடங்கள் தாக்குதல் இலக்காக்கப்படக்கூடாது என்றும் அனைத்து தரப்பும் அமைதி காக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
வன்முறைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், மத அடிப்படையிலான வன்முறை முடிவுக்கு வர வேண்டும் என்றும், இலங்கை மக்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
நேற்று நடந்த கலவரத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். பள்ளிவாசலும் பல வீடுகளும் சேதமடைந்துள்ளன
Post a Comment