
மகியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டிருப்பதானது அரசாங்கத்தில் இருக்கும்
மதவாதிகளின் உச்சக்கட்ட அடக்குமுறைச் செயற்பாடாகும். அரசியல் யாப்பில் மத
உரிமைகள் தொடர்பில் முழு சுதந்திரம் இருந்தும் இன்று முஸ்லிம்களை
ஓரங்கட்டும் செயலை அரசாங்கம் செய்து வருகின்றது என ஐக்கிய தேசியக்
கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இலங்கையில் சிறுபான்மை இனத்தவருக்கு இடம் இல்லை என்பதை தொடர்ந்தும்
அரசாங்கம் நிருபித்துக் கொண்டே உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மகியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் மூடப்பட்டிருப்பதனால் இன்று
முஸ்லிம்களின் தொழுகையினைக் கூட மேற்கொள்ள முடியாதுள்ளது. கடந்த வாரம்
இப்பள்ளிவாசல் தாக்கப்பட்டது மட்டுமின்றி பன்றி இறைச்சியும்
வீசப்பட்டிருந்தது. இவ்வாறு தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தை
கொச்சைப்படுத்துவதானது நாட்டில் சமாதானத்தை குழப்பும் செயலாகும்.
இன்று பள்ளிவாசல் மூடப்பட்டது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டும் அவர்கள் அதைப் பொருட்படுத்தாதுள்ளனர்.
சுமார் 22 வருடகாலமாக இப்பகுதி முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்டு வரும்
பள்ளிவாசலை இன்று அரசியல் வாதிகளின் அராஜகத் தனத்தினால் மூடப்படுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது.
ஜனாதிபதி பேருவளையில் பள்ளிவாசலை திறந்து வைக்க மறுபுறத்தில் ஏனைய
பகுதிகளில் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன. இன்றுவரையில் சுமார் 25
இற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. ஆனால், இது தொடர்பாக
அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இலங்கையில் 30 வருடகாலமாக நாட்டினை சீரழித்த விடுதலைப் புலிகளை முற்றாக
அழித்த இவ் அரசாங்கத்தினால், இவ்வாறு பள்ளிவாசல்களை தாக்கிய நபர்களை
கண்டுபிடிக்க முடியாதுள்ளது. மேற்கு நாடுகளில் முஸபுலிம்களை தாக்குவதைப்
போன்று இலங்கையில் முஸ்லிம்களை அடக்கி திட்டமிட்டு அடக்க செய்யும் சதியே
இது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
இன்று எமது நாட்டில் மதப் பிரச்சினைகள் மற்றும் இனப் பிரச்சினைகள்
ஏற்படுவதற்கு அரசாங்கத்தில் இருக்கும் மதவாத அமைப்புகளே காரணமாக
இருக்கின்றன.
நாட்டில் முஸ்லிம்கள் இவ்வாறு அடக்கப்படுவார்களாயின் மீண்டும் ஒரு
போராட்டம் ஏற்படும். முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள். எனவே, இதை
அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Post a Comment