Ash Sheikh , Al Hafil M Z M Shafeek (UK)
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொதுபல சேனாவை காத்தான்குடிக்கு அழைத்து முஸ்லிம்களின் இயல்பு வாழ்க்கை எவ்வாறானது, மஸ்ஜித்கள், அரபு மதரசாக்கள் எவ்வாறு செயற் படுகின்றன போன்றவை உள்ளிட்ட முஸ்லிம்களின் மார்க்க, சமூக குடும்ப வாழ்க்கை சார்ந்த அம்சங்களை பற்றி தெழிவு படுத்த ஒரு முயற்சியை எடுத்து வருவாதாக ஜப்னா முஸ்லிம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக அறிந்து கொண்டோம்.
உண்மையில் நல்ல முயற்சிதான். வரவேற்க வேண்டும். நபி ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நுபூவத்துக்குப் பிந்திய மக்கா, மதீனா வாழ்க்கையிலும் முஸ்லிமல்லாதோர் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் அறிந்து கொள்வதில் இஸ்லாத்தின் சகல தடைகளும் நீக்கப்பட்டிருந்ததோடு அதன் வாசல்கள் திறக்கப் பட்டே இருந்தன.
எனினும் மக்கா வாழ்க்கையில் சிரமங்களுக்கு முகம் கொடுத்த முஸ்லிம்களை அதன் ஆரம்ப காலங்களில் பல முக்கிய ரகசியங்களை கசிய விடாதும், சில இபாதாத்துகளை தனிப்பட முறையில் அமைத்துக் கொள்ளுமாறும் நபியவர்கள் பணித்திருந்தார்கள். என்றாலும் மக்காவின் பிந்திய காலப் பகுதியில் ஓர் அளவாகவும், மதீனா வாழ்க்கையில் பரந்த, திறந்த அளவிலும் முஸ்லிமல்லாதோர் இஸ்லாமிய வாழ்க்கை முறைமையை முழுமையாக அறிந்து கொள்வதற்கான சகல சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தப் பட்டிருந்தன. எனவே தான் நபியவர்களின் அவ் வழிகாட்டல் முறையானது முஸ்லிம்களைப் பற்றிய வீண் சந்தேகங்கள் களைவதற்கும் இஸ்லாம் வேகமாகப் பரவுவதற்கும் வழி செய்தது.
ஆகவே அந்த அழகிய மூன்று கட்ட முன்மாதிரிகளையும் கவனத்திற் கொண்டு பொதுபல சேனா உள்ளிட்ட எந்த இனவாத அமைப்புக்களையும் அழைப்பதில் தவறேதும் இல்லை. என்றாலும் ஷரீஆ முரண்படும் விதத்தில் மிதமிஞ்சிய கௌரவங்கள் வழங்கப் படாது பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து இவ் இனவாத சக்திகள் இஸ்லாத்தைப் பற்றி அறவே தெரியாது அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அடாவடித்தனங்கள் பண்ணிக் கொண்டிருப்பதோடு உண்மையயை ஏற்கும் மனப் பாங்கும் உள்ளவர்களாக அவர்கள் இருந்தால் இந்த முயற்சி கண்டிப்பாக பலன் தரும்.
அதேநேரம் பெரிய அளவில் இல்லா விட்டாலும் ஓரளவேனும் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொண்டு மனமுரண்டாகவே முஸ்லிம்களை சுண்டி விட்டு, உரிமைகளைப் பறித்து, கலவரங்களை தோற்றுவிக்கும் நோக்குடன் உண்மையை ஏற்கும் மனப் பாங்கும் அற்றவர்களாக அவர்கள் இருந்தால் (அப்படித்தான் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் வலுத்து வரும் நிலையில்) அமைச்சரோடு காத்தான்குடியை சுற்றிப் பார்த்து, அங்கே கிடைக்கும் சொகுசுகளையெல்லாம் தவறாது அனுபவித்து விட்டு கொழும்பு வந்த கையோடு மறுநாளே மேடைபோட்டு கிழி கிழியென்று கிழிப்பார்கள்.
என்றாலும் இது ஒரு வித்தியாசமான முயற்சி தானே.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இதனை ஆரம்பித்து வைக்கட்டும். இதன் முடிவில் சாதக பாதகங்களை அலசி விட்டு அடுத்த கட்டத்துக்கு எமது சமூகத் தலைமைகள் நகரலாம். அத்தோடு இந்த அழைப்பின் உண்மையான நோக்கத்தை அவர்கள் எடை போட்டு விட்டால் ஞான சார தேரர் போன்ற பெரும் புள்ளிகளை காத்தான்குடிக்கு அழைத்துச் செல்ல இணங்க வைக்கலாமா என்பது பெரும் கேள்வி தான். (சும்மா கடமைக்காக கீழ் மட்ட சில்லறைகளை அழைத்துச் சென்று ஊர் காட்டுவது நோக்கத்துக்கு கை கொடுக்காது என்பது தெழிவான உண்மை) அல்லாஹ் எமது சகல முயற்சிகளிலும் இக்ஹ்லாசை வழங்குவதோடு சென்ற ராமளான்களில் கிரீஸ் பூதங்கள் வெளியாகி அமல்களைப் பாழாக்கியது போல எதிர் வரும் ரமளானில் காவி உடை பூதங்கள் வெளியாகாது உதவி புரிவானாக.
Post a Comment