இறைச்சிக்காக கால்நடைகள்
அறுக்கப்படுவதற்கு எதிராக இராவண பலய மேற்கொண்டுவரும் பாதயாத்திரையை
நிறுத்துமாறு நுஆ கட்சியின் பொதுச் செயலாளர் அஸாத் சாலி ஜனாதிபதிக்கு
கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
நாட்டில் கால்நடைகள் இறைச்சிக்காக
அறுக்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்ற கோஷம் தற்போது வன்முறை
கலந்ததாக மாறிவருகின்றது. பொதுபல சேனாவின் இணை அமைப்பான இராவண பலய இந்தக்
கோரிக்கையை வலியுறுத்தி தென்பகுதியில் இருந்து தொடங்கியுள்ள பாத
யாத்திரையில் இன்று காலை தங்காலைப் பிரதேசத்தில் உள்ள இறைச்சிக்கடை ஒன்றை
தீ வைத்து எரித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருபுறம் உள்ளுராட்சி சபைகள் மட்டத்தில்
இறைச்சிக் கடைகளை மூடிவிடுவதற்கான தீர்மானங்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும்
படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அரசாங்கம் வெளிப்படையாகவும்
ஐ.தே.க. மறைமுகமாகவும் இதற்கு ஆதரவளித்து முஸ்லிம் மக்களில் ஒரு
பிரிவினரின் வாழ்வாதாரத்துக்கு ஆப்பு வைக்கப்பட்டு வருகின்றது.
மறுபுறத்தில் ஆர்ப்பாட்டம், பாதயாத்திரை,
ஊர்வலம் என்ற போர்வையில் கும்பலாக வந்து முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக
நிலையங்களுக்கு தீவைத்து அழித்து ஒழிக்கும் நடவடிக்கை மீண்டும்
தொடங்கப்பட்டுவிட்டதா? என்ற சந்தேகத்தை இன்றைய நிகழ்வு முஸ்லிம் மக்களிடையே
ஏற்படுத்தியுள்ளது.
பௌத்தர்களுக்கோ அல்லது வேறு
சமயத்தவர்களுக்கோ மாட்டிறைச்சியை உண்ணுமாறு யாரும் வற்புறுத்தவில்லை. அது
அவர்களுக்கு தடுக்கப்பட்டது என்றால் அவர்கள் அதிலிருந்து தவிர்ந்து
கொள்ளட்டும். அதுதான் நாகரிகம். அவர்களுக்கு தவிர்க்கப்பட்டதை அவர்கள்
மற்றவர்கள் மீது பலவந்தமாக திணிக்க முனைவது அதர்மமாகும். மற்றவர்களின்
சொத்துக்களை தீவைத்து கொழுத்துவதை எந்த சட்டப்படியும. தர்மப்படியும்
அனுமதிக்க முடியாது. அதிலும் பௌத்த துறவிகள் தலைமையிலான குழுவினர் இவ்வாறு
அடாவடித்தனத்தில் ஈடுபடுவது மிகவும் கேவலமானதாகும்.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பாதயாத்திரை
கொழும்பு நோக்கி வந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இவர்கள் கடந்துவரும் பகுதிகள் தோறும் உள்ள இறைச்சிக்கடைகள்
யாவும் கொழுத்தப்படுமா? என்று முஸ்லிம் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவ்வாறு நடந்தால் இந்த நாட்டில் முஸ்லிம் மக்களின் நிலை என்னவாகும?
இறைச்சிக் கடைகளுக்கு தீவைப்பது பௌத்த
பற்றல்ல. இந்த வர்த்தகத்தில் தங்களது இனம் சார்ந்தவர்கள் எவரும் இல்லையே.
அது ஒட்டுமொத்தமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் வருமானத்தை
கொடுக்கும் ஒரு வர்த்தகமாக இருக்கின்றதே என்ற காழ்ப்புணர்வின் விளைவு தான்
இது. இது அப்பட்டமான இனவாதம். ஏனைய சமூக சமய உணர்வுகளை மதிக்கத் தெரியாத
காட்டுமிராண்டித் தனத்தின் வெளிப்பாடுதான் இது.
இவர்கள் உண்மையான பௌத்த பற்றாளர்களாக
இருந்தால் ஏன் இந்த நாட்டில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களையும், விபசார
விடுதிகளையும், சூதாட்ட நிலையங்களையும் இன்னமும் கண்டு கொள்ளாமல்
இருக்கின்றனர்? மது அருந்தலாம்,விபசாரம் புரியலாம், சூதாட்டத்தில்
ஈடுபடலாம் ஆனால் இறைச்சி மட்டும் உண்ணக் கூடாது என்றால் அது என்ன நியாயம்?
எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி
உடனடியாகத் தலையிட்டு பொதுபல சேனா, இராவண பலய போன்ற மனநோயளர்கள் சேனைகளால்
மேற்கொள்ளப்பட்டு வரும் அடாவடித் தனத்துக்கும்
காட்டுமிராண்டித்தனத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தற்போதைய
பாதயாத்திரைக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.
இன்று காலை ஜனாதிபதியின் சொந்த
மாவட்டத்திலேயே அவர்கள் அடாவடித்தனம் புரிந்துள்ளமையானது இந்த
பாதயாத்திரையை தடைசெய்ய போதுமான காரணமாக அமைகின்றது. முஸ்லிம்களின்
சொத்துக்கள் தாக்கப்படுகின்ற இடங்களில் எல்லாம் அவர்கள் கைகட்டி வேடிக்கைப்
பார்க்க வேண்டும் என்று அரசும், மனநோயாளர்கள் சேனைகளின் அனுசரணையாளர்களும்
எதிர்ப்பார்ப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
எனவே உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை
உடனடியாக மேற்கொண்டு முஸ்லிம்களின் சொத்துக்களையும் உரிமைகளையும்
பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடமும், பொலிஸ் மா அதிபரிடமும் வேண்டுகோள்
விடுக்கின்றோம்.
Post a Comment