Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

ஹக்கீம் தலைவரானது எப்படி: முஸம்மிலுக்கு மு.கா. ஸ்தாபகச் செயலாளர் விளக்கம்

Tuesday, June 180 comments

gafoor slmc
தேசிய சுதந்திர முண்ணனியின் பேச்சாளர் முஹம்மட் முஸம்மில் அண்மையில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், அமைச்சராக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் திடீர் விபத்தின் மரணத்திற்கு பின்னர் ஹக்கீம் இக்கட்சியின் தலைமைத்துவத்தை சூழ்ச்சி செய்து கைப்பற்றியதாகவும் அந்த மரணத்தில் தனக்கு இன்னும் சந்தேகம் இருப்பதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவித்திருப்பதை மிகவும் வன்மையாக நாம் கண்டிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகச் செயலாளரும் மஜ்லிஸ் சூறாவின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இது முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுபோட முஸம்மில் முனைந்துள்ளார். இப்போதைய மு.கா.வின் தலைவராக இருக்கின்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் அப்போதைய கட்சியின் அரசியல் உயர்பீடம் ஒன்றுகூடி ஏகமானதாக எடுத்த தீர்மானத்தின்படியே அவர் தெரிவு செய்யப்பட்டார். அதில் எவ்வித சூழ்ச்சியோ நாசகார சதி வேலைகளோ, திட்டவட்டமாக இடம்பெறவில்லை.

அகால மரணமான அஷ்ரப்பை அடக்கம் செய்துவிட்டு கட்சிக்கான தலைவரை நியமிப்பது சம்பந்தமாக கூட்டப்பட்ட அரசியல் உச்சபீட உறுப்பினர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டம் கட்சியின் தலைமைக் காரியாலயமான தாருஸ்ஸலாம் மண்டபத்தில் அன்று நடைபெற்றபோது, கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமான தலைவர் ஒருவரை தெரிவு செய்வதில் பல தரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. முதலில் முக்கூட்டுத் தலைமைத்துவம் பற்றியும் யோசிக்கப்பட்டு இறுதியில் இணைத் தலைவராக இருவரை நியமிப்பதாகவும் அதில் ரவூப் ஹக்கீமையும், பேரியல் அஷ்ரபையும் கட்சியின் இணைத் தலைவர்களாக நியமிப்பது என ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது.

சிலகாலங்களின் பின்பு நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக மு.கா. தலைவராக ரவூப் ஹக்கீமும் தேசிய ஐக்கிய முண்ணனியின் (நுஆ)வின் தலைவியாக பேரியல் அஷ்ரபும் இவ்விரண்டு கட்சிகளுக்கும் வெவ்வேறு தலைவர்களாக இருந்து செயற்படுவதாக இணக்கம் காணப்பட்டது. இவ்விடயத்தில் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா உட்பட பலர் இதன் பிண்ணனியில் சமூக நலன்கருதி முன்னின்று செயற்பட்டார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்படித்தான் மு.கா.வின் தலைவராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார் இது படிப்படியாக பல பதவிகளை கட்சிக்குள் வகித்து வந்த அவர் இறுதியல் இத்தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட பதவியே அன்றி மாறாக மறைந்த தலைவரின் மரணத்தின் மர்மத்தில் தற்போதைய தலைமைத்துவத்திற்கு அணுவளவேனும் எவ்வித சச்சரவுகளோ சந்தேகங்களோ சதிகளோ நடந்ததாக கூறப்படும் சம்பவம் எதுவுமில்லை என்பதை மிகவும் அழுத்தமாக தெரிவிக்கிறோம்.

குறிப்பிட்ட கூட்டத்தில் பங்குபற்றி இத்தலைவரைத் தெரிவு செய்தவர்களில் நானும் ஒருவன். என்பதனால் இதனை எழுதும் பொறுப்பு எனக்குண்டு. ஏனென்றால் இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய முன்வரிசை உறுப்பினர்கள் பலர் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் அருகதை அவர்களுக்கு இருக்கவில்லை. அப்பொழுது எங்களுடன் இருந்த இன்னும் சிலர் இன்று இக்கட்சியில் இல்லை என்பதும் வேறுவிடயம்.

மேலும் 13ஆவது திருத்த சட்டமூலத்தை அழிப்பதற்கு எதிராக எடுக்கும் முடிவு முஸ்லிம் காங்கிரஸின் பேராளர்கள் மகாநாட்டில் ஏகமானதாக ஏற்கனவே எடுக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்ட விடயமேயன்றி இது தலைவரினால் தன்னிச்சையாக தனியாக எடுத்த முடிவல்ல என்பதையும் முதலில் முஹம்மட் முஸம்மிலுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எனவே, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்மீது தொடர்ந்து அபாண்டமாக சேறுபூசுவதை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் மு.கா.வின் தலைமைத்துவத்திற்கு அரசியல் பாடம் புதிதாக புகட்டி புத்திமதி கூறும் கைங்கரியத்தை கைவிடவேண்டும் எனவும் தனிப்பட்ட உபதேசங்களையும் எதிர்பார்ப்புகளையும் திணிக்கவேண்டாம் எனவும் வேண்டிக்கொள்கிறேன் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by