
காணி, பொலிஸ் அதிகாரங்கள் மட்டுமல்ல, எல்லா அதிகாரங்களும்
பறிபோகப்போகின்றன. இவ்வாறான நிலையில் 13 ஆம் திருத்தத்தை பாதுகாப்போம்
என்று அரசாங்கத்துக்குள் இருந்தவாறு கூறிவருகின்ற அமைச்சர்களான,
தொண்டமான்,ஹக்கீம் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் நிலைப்பாடு என்ன?
என்று என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பினார்.
13 ஆம் திருத்தத்தை திருத்துவதற்கு இனிமேல் மாகாணசபைகளின் அனுமதி
தேவையில்லை அல்லது சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை
மாகாணசபைகளின் ஒப்புதல்கள் இருந்தால் போதும் என்ற புதிய திருத்த சட்டமூல
யோசனையை அரசாங்கம் சமர்பிக்க போகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் கொழும்பில் இன்று நடத்திய
ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே மனோ
கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் கொண்டுவரவிருக்கின்ற திருத்தமானது, காணி, பொலிஸ்
அதிகாரங்களை மீளப்பெறுவது என்னும் திட்டத்தைவிட மிகவும் மோசமானது.
ஏனென்றால் காணி, பொலிஸ்; அதிகாரங்கள் மட்டும் அல்ல, அவற்றைவிட இனிமேல்
எஞ்சியுள்ள எந்த ஒரு அதிகாரத்தையும் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் உள்ள
எந்த ஒரு மாகாணசபைகளிடம் இருந்தும் வெறும் நாடாளுமன்ற பெரும்பான்மை மூலம்
மீளப்பெறுவதற்கான அதிகாரத்தை இந்த புதிய யோசனை மத்திய அரசாங்கத்துக்கு
வழங்குகின்றது.
எனவே 13 ஆம் திருத்தத்தை பாதுகாப்போம் என்று அரசாங்கத்துக்குள்
இருந்தவாறு கூறிவந்த ஈ.பி.டி.பி, முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.கா கட்சிகளை
சார்ந்த அமைச்சர்களான டக்லஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், தொண்டமான்
இடதுசாரி அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, டியு குணசேகர, திஸ்ஸ விதாரண
மற்றும் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, டிலான் பெரேரா ஆகியோர் தம்
நிலைப்பாடுகளை என்ன? அவர்கள் தங்களுடைய நிலைப்பாடுகளை
பகிரங்கப்படுத்தவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
அரசாங்கம் கொண்டு வர தீர்மானித்துள்ள புதிய சட்டமூலத்தின் பிரகாரம்
எதிர்காலத்தில் மாகாணசபைகளின் எந்த ஒரு அதிகாரத்தையும்
மீளப்பெற்றுக்கொள்ளும் சட்ட மூலங்கள் இன்று இருப்பதைப்போல மாகாணசபைகளின்
ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் கிடையாது என்ற நிலைமையும், அவை
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றால் போதும் என்ற நிலைமையும்,
உருவாகின்றது.
அதேபோல் இரண்டு மாகாணசபைகள் சுய விருப்பத்தின் மூலம் ஒரே மாகாணசபையாக
இணைந்து கொள்ளவும் முடியாது. இதற்கான சரத்தும் நாளைய அமைச்சரவை யோசனையில்
உள்ளது.
திவிநெகும சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோது அது வட மாகாணசபையின் ஒப்புதலை
பெறவேண்டும் என்றும், அந்த ஒப்புதலை ஆளுநர் வழங்க முடியாது என்றும் நாம்
நீதிமன்றம் சென்றோம். நமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு
வழங்கப்பட்டது. இறுதியில் அந்த தீர்ப்பே பிரதம நீதியரசர் ஷிராணி
பண்டாரநாயக்கவுக்கு ஆபத்தாகவும் முடிந்தது.
இப்போது இந்த அரசாங்கம் இந்த சட்டத்தை கொண்டு வந்து விட்டு, வட
மாகாணசபை தேர்தலை நடத்திவிட்டு, பொதுநலவாய மாநாட்டையும் நடத்திவிட்டு,
அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் மூலம் மாகாணசபைகளுக்கு இருக்கின்ற பொலிஸ்,
காணி அதிகாரங்களை பறிக்க திட்டம் தீட்டியுள்ளது. உண்மையில் இந்த
அரசாங்கம் மட்டும் அல்ல, இந்தியா, அமெரிக்க அரசாங்கங்களும் தமிழ் மக்களை
நம்ப வைத்து ஏமாற்றிவிட்டன என்பது இன்று தெளிவாகின்றது.
Post a Comment