முதல்வரின் ஊடக பிரிவு-கல்முனை மாநகர சபையின் விசேட அமர்வில் அமைய மற்றும் நிமிர்த்த ஊழியர்களை தொடர்ந்தும் கடமையாற்றுவதற்கான அங்கீகாரம் மற்றும் புதிய ஆட்சேர்ப்பு திட்டத்தில் காணப்படுகின்ற கல்வித் தகைமையினை குறைப்பதற்கான பிரேரணை என்பன நிறைவேற்றப்பட்டதனை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து அமைய மற்றும் நிமிர்த்த அடிப்படையிலான ஊழியர்கள் மேற்கொண்ட பணிப் பகிஸ்கரிப்பு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என்பன இன்று முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான புதிய ஆட்சேர்ப்புத் திட்டத்தை எதிர்த்து குறித்த ஊழியர்கள் புதன்கிழமை (05.06.2013) தொடக்கம் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கல்முனை மாநகர சபையில் கடமையாற்றுகின்ற நிமிர்த்த மற்றும் அமைய அடிப்படையில் நியமனம் பெற்ற 112 பேர் குறித்த பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இவர்களில் அதிகமானோர் வேலைத் தொழிலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் நிரந்தர சுகாதார பிரிவு தொழிலாளிகளும் சுகயீன விடுமுறையில் இப்பகிஸ்கரிப்பில் இன்று இணைந்தனர். இதனால் கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றும் பணி ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் 2013.05.29ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் புதிய ஆட்சேர்ப்புத் திட்டத்தில் வேலைத் தொழிலாளிகளின் அடிப்படை தகைமையாக க.பொ.த (சா/த) பரீட்சையில் இரண்டு பாடங்களில் சீ அடங்கலாக ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு முன்னர் தரம் 08ஆம் ஆண்டு என்பது வேலைத் தொழிலாளிகளின் அடிப்படை கல்வித் தகைமையாக காணப்பட்டது.
இதனால் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அமைய மற்றும் நிமிர்த்த அடிப்படையில் நியமனம் பெற்று கடமையாற்றுகின்ற பல ஊழியர்கள் 2014ம் ஆண்டு இடம்பெறவிருக்கும் நிரந்தர நியமனத்திற்கு தகுதியற்றவர்களாக காணப்படுகின்றனர். அத்தோடு தற்போதைய முதல்வரின் காலத்திற்கு முன்னதான காலப்பகுதியில் இத்தகைய நியமனங்களிற்கு மாநகர சபையின் அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை. எனவே இவை தொடர்பிலும் சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்புதிய ஆட்சேர்ப்புத் திட்டத்தினால் பாதிக்கப்படுகின்ற மாநகர ஊழியர்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையிலும், சுகாதார வேலைப் பிரிவில் கடமையாற்றும் ஊழியர்கள் தொடர்ந்தும் கடமைக்குச் செல்லாமல் இருப்பதனால் குப்பைகள் அகற்றப்படாமலும், வடிகான் துப்பரவு செய்யப்படாமலும் தொற்று நோய்கள் பரவக் கூடிய அனர்த்த நிலை காணப்பட்டதனாலும் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் தலைமையில் விசேட சபை அமர்வு இன்று இடம்பெற்றது. இச்சபை அமர்வில் குறித்த ஊழியர்களை அமைய மற்றும் நிமிர்த்த அடிப்படையில் தொடர்ந்தும் கடமையாற்றுவதற்கான அங்கீகாரம் மற்றும் புதிய ஆட்சேர்ப்பு திட்டத்தில் காணப்படுகின்ற கல்வித் தகைமையினை குறைப்பதற்கு கௌரவ ஆளுநரை வேண்டிக் கொள்வது தொடர்பான பிரேரணை ஒன்று முதல்வரினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இப்பிரேரணை சபை அமர்வில் கலந்து கொண்ட மாநகர சபை ஆளும்தரப்பு உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், ஏ.நிசார்டீன், ஐ.எம்.பிர்தௌஸ் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், சி.எம்.முபீத், எச்.எம்.எம்.நபார் ஆகியோரினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. மேற்படி பிரேணேயினை கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சபை அமர்வில் ஆளும் தரப்பு உறுப்பினர்களான பிரதி முதல்வர் எம்.நிசாம் காரியப்பர், எம்.ஏ.எம்.றகீப், ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.ஏ.பசீர், எம்.எஸ்.உமர் அலி, ஏ.எம்.பறகத்துள்ளா, எம்.எல். சாலிதீன் ஆகியோரும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களான ஏ.அமிர்தலிங்கம், ஏ.விஜெயரட்னம், வி.கமலநாதன், எஸ்.ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சபை அமர்வினை நடாத்துவதற்கு குறைந்தது ஏழு மாநகர சபை உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருக்கவேண்டும் அந்தவகையில் முதல்வர் உள்ளிட்ட ஏழு மாநகர சபை உறுப்பினர்களின் பங்கு பற்றுதலில் மேற்படி சபை அமர்வு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி சபை அமர்வில் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொள்வதை தடை செய்யும்வகையில் சில உறுப்பினர்கள் இரவோடு இரவாக செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்பிரேரனை மீதான விவாதத்தின்போது மாநகர உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் உரையாற்றுகையில் இச்விசேட சபை அமர்வானது முதல்வருக்கு உள்ள அதிகாரத்திற்கமைவாக ஏற்பட்டு செய்யப்படிருக்கிறது. இவ் அமர்வு புதிதாக நியமனங்களை வழங்குவதற்காகவோ, மாநகர சபையினால் விழாக்களை ஏற்பாடு செய்வதற்காகவோ அல்லது ஏனைய மாநகர சபை தேவைகளுக்காகவோ ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று அல்ல.
இது மாநகர சபையில் அமைய மற்றும் நிமிர்த்த அடிப்படையில் கடமையாற்றுகின்ற ஊழியர்களின் நியாயமான கவன ஈர்ப்பு ஆர்பட்டம் தொடர்பான விடயங்களை உத்தியோக பூர்வமாக ஆளுநர், முதலமைச்சர் போன்றோருக்கு தெரியப்படுத்தி அவர்களுக்கு நியாயத்தினை பெற்றுக் கொடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விசேட அமர்வாகும்.
இவ்வமர்வினை பகிஸ்கரித்து இங்கு வருகை தராதவர்கள் உண்மையில் இந்த ஊழியர்களின் நியாயமான கோரிக்கைக்கு எதிரானவர்களாகவே கருதப்படுவர் என தெரிவித்தார்.

Post a Comment