
தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் தம்புள்ளை ஹைரியா
ஜும்ஆப் பள்ளிவாசல் பெரும்பகுதி உள்வாங்கப்படவிருப்பதால் இப்பள்ளிவாசல்
தம்புள்ளை நகர்ப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்
நிர்வாகம் இதற்கு இணங்கினால் ஜனாதிபதியுடன் கலந்து பேசி ஏற்பாடுகளைச் செய்ய
முடியும் என மாத்தளை மாநகர சபை முதல்வர் ஹில்மி கரீம் தெரிவித்தார்.
தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களின் குழுவொன்று
அண்மையில் ஹில்மி கரீமைச் சந்தித்து பள்ளிவாசலின் நிலைமை தொடர்பாக
கலந்துரையாடியது. கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஹில்மி கரீம் தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பாக விடிவெள்ளிக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
‘நாட்டின் பெரும்பாலான பிரதான நகரங்களில் நகர்ப் பகுதியிலேயே
பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் வசதி கருதியே
நகரங்களில் பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் தம்புள்ளை
பள்ளிவசசலும் நகர்ப்பகுதியில் அமைவது நன்மையானதாகும். இவ்வாறு தம்புள்ளை
பள்ளிவாசல் நகர்ப் பகுதிக்கு இடமாறினால் அது சகல பிரச்சினைகளுக்கும்
தீர்வாக அமைந்துவிடும். தம்புள்ளையில் மாநகர சபைக்கருகில் அமைவது
சிறந்ததாகும்.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்ந்து இழுபறி நிலையில் இருக்கின்றமை
இனங்களுக்கிடையிலான உறவுகளுக்கு குந்தகமாக அமைந்துவிடும். ஒரு சில
குடும்பங்கள் வாழும் பிரதேசத்தில் பள்ளிவாசல் இருப்பதைவிட மக்கள் நாளாந்தம்
வந்துபோகும் ஒன்று கூடும் நகர்ப் பகுதியிலேயே இருக்க வேண்டும்.
மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை பள்ளிவாசல் அமைந்திருப்பதால் அதன்
எதிர்காலம் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு
எனக்குண்டு. இந்த வகையில் ஜனாதிபதி மாத்தளை அரசாங்க அதிபர், மற்றும்நகர
அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடி நல்லதோர்
தீர்னவினை பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன். இதற்கு பள்ளிவாசல்
நிர்வாக சபை ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.
.
Post a Comment